என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    உடல் பருமனால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்- தீர்வுகள்
    X

    உடல் பருமனால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்- தீர்வுகள்

    • பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இயற்கையாகவே ஹார்மோன்களின் மாற்றங்கள் ஏற்படும்.
    • பெண்கள் கண்டிப்பாக ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

    பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்சினை ஏற்பட பெரும்பாலும் உடல் பருமனே காரணமாக அமைகிறது. உடல் பருமன் அதிகமாக இருக்கும் பெண்களுக்கு கருத்தரிப்பதிலும் பிரச்சினை வரும், கரு உருவாகி தாயின் வயிற்றில் குழந்தை வளரும் போதும் பிரச்சினைகள் ஏற்படும்.

    எனவே தான் உடல் பருமனாக இருக்கும் பெண்கள் கருத்தரிப்பதற்கு முன்பு கண்டிப்பாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். எங்களிடம் சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு நாங்கள் ஐ.வி.எப். முறையில் செயற்கை கருத்தரிப்பு செய்யும் போது கண்டிப்பாக உடல் எடையை குறைக்க சொல்வோம்.

    செயற்கை கருத்தரிப்பு செய்தாலும் உடல் எடையை கண்டிப்பாக குறைக்க வேண்டும்:

    பெண்களுக்கு உடல் எடை அதிகமாகும் போது, அவர்களுக்கு கொடுக்க வேண்டிய ஊசி மருந்தின் அளவும் அதிகமாகும். ஏனென்றால் எந்த ஒரு மருந்துகள் கொடுத்தாலும் பெண்களின் உடல் எடையை வைத்துதான் கணக்கீடு செய்வோம். பெண்களின் எடை அதிகமாகும் போது கொனாடோட்ரோபின் ஊசி அதிகமாக பயன்படுத்த வேண்டி இருக்கும். இதை தமிழில் கருவகவூக்கி என்று அழைப்பார்கள். இது ஹார்மோன் வகையை சேர்ந்த ஊசி ஆகும். இது இனப்பெருக்க உறுப்புகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.

    அதிகமாக கொனாடோட்ரோபின் ஊசி செலுத்தி முட்டைகள் வளர்ந்தால் அந்த முட்டைகளின் தன்மை மற்றும் தரம் கண்டிப்பாக பாதிக்கும். இதனால் கருத்த ரிக்கின்ற வாய்ப்பும் குறைவா கும். ஒருவேளை அந்த கரு வளர்ந்து 5 நாள் கருவாக (பிளாஸ்டோசிஸ்ட்) இருக்கும் நிலையில் அதை செயற்கை கருத்தரிப்பில் பரிமாற்றம் செய்வதும் ரொம்ப குறைவாகும்.

    இது ஒரு நல்ல பிளா்ஸடோசிஸ்ட் போல தெரிந்தால் கூட, உடல் பருமனுடன் வந்த பிளாஸ்டோசிஸ்ட் என்பதால் அதனுடைய ஒட்டி வளரும் தன்மையும் குறைவாகிறது. பல நேரங்களில் கரு உருவாகும் போது கருச்சிதைவு ஏற்படும் வீதமும் அதிகமாகும். எனவே எந்த வகையான செயற்கை கருத்தரிப்பு செய்தாலும், அதற்கு முன்பாக பெண்கள் உடல் எடையை கண்டிப்பாக குறைக்க வேண்டும்.

    அடுத்ததாக, ஐ.வி.எப். செயற்கை கருத்தரிப்பு செய்யும் போது உடல் பருமன் காரணமாக அந்த பெண்களுக்கு பல விஷயங்கள் பாதிப்பு அடையும். ஒன்று, இந்த பெண்ணுக்கு தொற்றுக்கள் ஏற்படலாம். இரண்டாவதாக, இந்த பெண்ணுக்கு ஏற்படுகின்ற பல வியாதிகளின் பாதிப்பு அதிகமாகலாம். மூன்றாவதாக, பருமனால் அவர்களின் உடல் பகுதி, சிறுநீரகம் ஆகிய அனைத்திலும் பிரச்சினைகள் ஏற்படலாம்.

    எனவே உடல் பருமனை குறைப்பது மிக மிக முக்கியம். ஐ.வி.எப். செயற்கை கருத்தரிப்பு செய்ய வேண்டும் என்று உங்கள் டாக்டர் கூறும் நிலையில், 3 மாதங்கள் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு ஆகியவற்றை எடுத்த பின்பு நீங்கள் ஐ.வி.எப். செயற்கை கருத்தரிப்பு செய்தால் வெற்றி விகிதம் அதிகமாகும். இதெல்லாம் கருத்தரிக்கும் முன்பு பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஆகும்.

    உடல் பருமனால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்:

    அடுத்ததாக உடல் பருமனால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை பற்றி பார்ப்போம். உடல் பருமன் அதிகமாக இருக்கின்ற பெண்க ளுக்கு கண்டிப்பாக, கர்ப்பகால சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகள் 50 சதவீதம் அதிகமாகிறது. அவர்களுக்கு என்னென்ன சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது..?

    உடல் பருமன் அதிகரிக்கும்போது சர்க்கரை பாதிப்பு வரும் என்று ஏற்கனவே சொன்னேன். சில பெண்கள் கருத்தரித்த பிறகு உடல்பருமனாக இருக்கும் நிலையில் கண்டிப்பாக அவர்களுக்கு சர்க்கரை அளவு அதிகரிக்கும். ஏனென்றால் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இயற்கையாகவே ஹார்மோன்களின் மாற்றங்கள் ஏற்படும்.

    முக்கியமாக கரு வளருவதற்கு ஹியூமன் பிளாசெண்டல் லாக்டோஜன், ஹியூமன் கோரியானிக் கொனாடோட்ரோபின், புரோஜெஸ்டிரோன், வளர்ச்சிக்கான ஹார்மோன் ஆகிய அனைத்தும் அதிகமாக இருக்கும்போது குளுக்கோஸ் அளவை அதிகப்படுத்தும். ஏனென்றால் கரு வளருவதற்கு குளுக்கோஸ் அதிகம் தேவை.

    தாயின் ரத்த ஓட்டத்தில் இந்த குளுக்கோஸ் அளவை அதிகப்படுத்தும் முறைகள் இயற்கையாகவே கர்ப்பகாலத்தில் ஏற்படும். இதனோடு சேர்த்து இந்த காலகட்டத்தில் ஏற்படுகிற ஹார்மோன் மாற்றங்களினால் இந்த பெண்களுக்கு கண்டிப் பாக சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

    அதனால் தான் உடல் பருமனாக இருக்கும் பெண்கள் உடல் எடையை குறைக்கும்போது சர்க்கரை பாதிப்பு வருவது குறைவாகும், உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும், அவர்களின் கருத்தரிக்கும் திட்டமும் மிகவும் எளிதாக முடியும்.

    குழந்தைக்கு செல்லும் ரத்த ஓட்ட தடையால் தாய்க்கு ரத்த அழுத்தம்:

    இந்த பெண்களுக்கு உடல் பருமன் காரணமாக சர்க்கரை நோய் வருவது ஒரு விஷயம். இரண்டாவது, உடல் பருமனாக இருக்கும் பெண்களின் கருவில் உள்ள குழந்தைக்கு செல்கின்ற ரத்த ஓட்டத்தில் ரெசிஸ்டன்ஸ் சுகர் பிளட் ப்ளோ அதிகரிக்கி றது. அதாவது குழந்தைக்கு ரத்தம் செல்லும்போது அதில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் தடைபடுகிறது.

    இந்த ரத்த ஓட்ட தடையானது அதிகமாகும்போது, கர்ப்பப்பைக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைவாகிறது. அதுவும் ரத்தமானது ஒரு அழுத்தத்தோடு செல்கிறது. பல நேரங்களில் இதனால் தாய்க்கு ரத்த அழுத்தம் ஏற்படலாம். பல நேரங்களில் இந்த ரத்த அழுத்தம் அதிகமாகி கர்ப்பம் அடைந்த பெண்களுக்கு பிரச்சினைகளை உருவாக்கும்.

    அந்த வகையில் ஒவ்வொரு பெண்ணுக்கும் உடல் பருமன் அதிகமாகும்போது, கரு வளர்ச்சிக்கான பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். அதனால் தான் உடல் எடை அதிகமாக இருக்கும் கர்ப்பிணிகளுக்கு சர்க்கரை நோய் வரலாம், ரத்த அழுத்தம் வரலாம், கரு வளராமல் கருச்சிதைவு ஏற்பட லாம், குறை மாதத்தில் வலி வரலாம், குறை மாதத்தில் குழந்தை பிறப்பு கூட ஏற்படலாம். பல நேரங்களில் இந்த பாதிப்பு கொண்ட பெண்களுக்கு குறைபாடு கொண்ட குழந்தை பிறப்பதற்கும் வாய்ப்பு அதிகம்.

    எனவே கருத்தரிக்க இருக்கும் பெண்கள் உடற்பயிற்சி மூலம் தங்களின் உடல் பருமனை குறைப்பதன் காரணமாக இந்த மாதிரியான பிரச்சினைகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

    இன்னொரு முக்கியமான விஷயம், கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படுகின்ற ரத்த அழுத்தமும், உடல் பருமனாக இருக்கும் பெண்களுக்கு ரொம்பவும் அதிகமாகும். இந்த ரத்த அழுத்தம் அதிகமாகும்போது அவர்களுக்கு வலிப்பு நோய் கூட வரலாம்.

    அந்த வகையில் பெண்கள் கண்டிப்பாக ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். பல நேரத்தில் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்காததால் வருகிற சிக்கல்கள் கூட இந்த கருத்தரித்தலின் வெற்றி விகிதத்தை குறைக்கும்.

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    உடல் பருமன் குறைந்தால் இயற்கையாக கருத்தரிக்கும் வாய்ப்பு:

    அடுத்து ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த கர்ப்ப காலத்தில் உடல் பருமனாக இருக்கும் பெண்கள் பலருக்கும் ஏற்படுகின்ற மற்றொரு பிரச்சினை, குழந்தையின் தண்ணீர் சத்து குறைவாகும். மேலும் கர்ப்பப்பையை சுற்றியுள்ள நீரின் அளவு அதிகமாகி, அதனால் சில நேரங்களில் பிரச்சினைகளும் வரலாம். எனவே பெண்களின் உடல் எடை குறைவாகும்போது, கண்டிப்பாக ஆரோக்கியமாக குழந்தைபேறு ஏற்படும். கருச்சிதைவு ஏற்படாது. இந்த கொழுப்பு குறைவதன் காரணமாக கருவின் வளர்ச்சிக்கான எல்லாவிதமான உடல் மாற்றங்களும் ஏற்படும். ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி ஆகியவை கர்ப்பகாலத்தில் வருவது குறைவாகும். பருமன் குறைவதால் உடல், மனம் எல்லா விஷயத்திலும் ஆரோக்கியம் ஏற்படும். இது ஆரோக்கியமான குழந்தை பேறு வருவதற்கான வழிமுறையாக அமைகிறது.

    மேலும் உடல் பருமன் குறைப்பு என்பது, பெண்களின் கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகப்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்கள் சிகிச்சைக்கு வராமல் இயற்கையாக கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளையும் அதிகப்படுத்தும்.

    ஏனென்றால் சமீபத்தில் ஒரு ஆய்வு முடிவு வெளியானது. உடல் எடை சீராக இருப்பவர்கள் மற்றும் உடல் பருமனாக இருப்பவர்கள் ஆகிய இருவருக்கும் ஒரே நேரத்தில் ஐ.வி.எப். செய்யும்போது, உடல் பருமன் குறைவாக இருக்கும் பெண்களுக்கு குழந்தை பேறுக்கான வெற்றி விகிதம் அதிகமாக காணப்பட்டது.

    அவர்களுக்கு கருவின் வளர்ச்சி சரியாக இருந்தது. கரு உருவாகும்போது வரும் கர்ப்பகால பிரச்சினைகளும் குறைவாக இருந்தது. எனவே இதனை தெளிவாக தெரிந்து கொண்டு, இனி நீங்கள் ஐ.வி.எப். முறையில் செயற்கை கருத்தரிப்பு செய்ய தயாரானால், அதற்கு முன்பு முதல் விஷயமாக, உடல் பருமன் குறைப்பில் கவனம் செலுத்த வேண்டும். அதற்கான உடற்பயிற்சி, சரியான அணுகுமுறை மற்றும் முறையான சிகிச்சை ஆகியவைகளை பற்றி தெளிவாக தெரிந்து, அதற்கு ஏற்ப செயல்பட்டால் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். கண்டிப்பாக இயற்கையாகவோ அல்லது ஐ.வி.எப். செயற்கை கருத்தரிப்பு மூலமாகவோ ஆரோக்கியமான குழந்தை பேறு பெற முடியும்.

    Next Story
    ×