என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஒப்பிட்டு பார்ப்பதே பிரச்சினை!
    X

    ஒப்பிட்டு பார்ப்பதே பிரச்சினை!

    • நம் வாழ்வின் தீர்வை நாம் எப்படி காண முடியும்
    • உங்களின் நல்ல செயல்கள் இறைவன் உங்களுக்கு அளித்த வாய்ப்பு. நன்றி சொல்லுங்கள்.

    'மானிடராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திருக்க வேண்டும்' என்கின்றார்கள். நாம் வாழும் வாழ்க்கை தவம் செய்து கிடைத்த வாழ்க்கை மாதிரி இருக்கின்றது. மொத்த பாவங்களையும் சேர்த்து வைத்து அனுபவிக்க பிறந்தது போல் தானே இருக்கின்றது. இது அநேகரின் மனக்குமுறல் எனலாம்.

    கடினமாக உழைக்கின்றேன். வேண்டாத தெய்வம் இல்லை. இருப்பினும் கண்ணுக்குத் தெரியாத தடைகள் நம் வாழ்க்கையை திக்கு முக்காடச் செய்கின்றன. இப்படியெல்லாம் அநேகர் மனதிலும் தோன்றத்தான் செய்கின்றது. இதற்கு மகான்கள் கூறுவது என்ன?

    எந்த ஒரு செயலிலும் நாம் முதலில் நினைப்பது சமுதாயம் என்னைப் பற்றி என்ன நினைக்கும்? என்னை சுற்றி உள்ளவர்கள் என்னைப் பற்றி என்ன பேசுவார்கள்? என்பதனைப் பற்றிதான். அதற்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கின்றோம். அதற்கேற்ப செயல்படுகின்றோம்.

    இப்படி புற உலகிற்கு முக்கியத்துவம் தரும்போது நம் வாழ்வின் தீர்வை நாம் எப்படி காண முடியும்?

    நம்மால் நம்மின் உள் குரல் சொல்வதை கேட்க முடியவில்லை. நம்மிள் எழும் உள் குரலை சிலர் ஆழ் மனது கூறுவது என்றும் கூறுவர். இந்த உள் ஓசை நம்முடன் பேசிக் கொண்டுதான் இருக்கின்றது. அறிவுறுத்திக் கொண்டுதான் இருக்கின்றது. நாம் தான் அதனை கேட்க முடிவதில்லை. காரணம் டி.வி., போன், பேச்சு என்ற ஓயாத சத்தம் மிகுந்த உலகத்தில் இருந்து நாம் இம்மி அளவு கூட விலகாமல் அதிலேயே மூழ்கி இருக்கின்றோம். சற்று நேரம் கூட அமைதியான, சத்தமில்லாத சூழ்நிலையில் நாம் இருப்பதே இல்லை. நம் உள் உணர்வோடு பேசுவதில்லை. உணர்வதில்லை. அதன் பேச்சை மதிப்பதும் இல்லை. ஆக முறையான பாதையை விட்டு விலகும் போது வாழ்க்கை திக்கு முக்காடத் தானே செய்யும்.

    இதனை சற்று மாற்ற முயற்சிப் போமா. சிறிது நேரம் சத்தமில்லாத இடத்தில் அமைதியாய் உட்காருங்கள். உங்கள் உள்மனது அல்லது உள் குரல் அல்லது உள் உணர்வு இப்படி எந்த வார்த்தையில் சொன்னாலும் சரி. அது உங்களின் பிரச்சினைக்கு நல்ல தீர்வினைச் சொல்லும். இதனை அன்றாட பழக்கமாக்கி விடுங்கள். உங்கள் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் வராது.

    நம் வாழ்வில் பிரச்சினைகளுக்கு மற்றொரு காரணம் ஒருவரோடு ஒருவரை ஒப்பிட்டு பார்ப்பதும், நினைப்பதும், பேசுவதும்தான். ஒருவர் போல ஒருவர் தோற்றத்தில் இல்லை. குணத்தில் இல்லை. பழக்க வழக்கங்களில் இல்லை. உணவுமுறையில் இல்லை. வாழும் சூழ்நிலையில் இல்லை. பின் எதற்கு இப்படி ஒப்பிட்டு பார்க்கின்றோம். ஒவ்வொரு தனி மனிதனும் ஒரு பிரபஞ்சம். பிறகு ஏன் நான் அவரைப் போல் இல்லையே? என் பிள்ளை இவரைப் போல் இல்லையே? என்று ஒப்பிட்டு நாமே நமக்கு பிரச்சினையினை உருவாக்கிக் கொள்ள வேண்டுமா?

    கமலி ஸ்ரீபால்


    ஆகவே ஒப்பிடுதலை நிறுத்தி விட்டாலே அநேக பிரச்சினைகள் குறையும். அடுத்து நாம் தவிர்க்க வேண்டிய ஒன்று 24 மணி நேரத்தையும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் செலவிடுவது. அவர்கள் மகிழ்ச்சி, கோபம் இது மட்டுமே உங்கள் பிறவியின் வேலை என்று நினைத்து உழைப்பது. இதனை நன்கு பயன்படுத்தி பின்னர் அவைகள் உங்களை காயப்படுத்தும் போது மனம் நொந்து போவது. எதற்கும் ஒரு அளவு கோல் வையுங்கள். உங்கள் உள் உறுப்புகள், உங்கள் ஆன்மாவோடு பேசுங்கள். அவைகள் வெளிப்படுத்தும் அறிகுறிகளை கூர்ந்து கவனியுங்கள். உங்கள் உடலும் மனமும் சிறந்து இருக்கும்.

    இவற்றினை நீங்கள் உணர வேண்டும்.

    * உங்களை அறிந்த எல்லோரும் நீங்கள் நன்றாக, மகிழ்ச்சியுடன் இருப்பதனையோ, முன்னேற்றம் அடைவதனையோ விரும்புவது இல்லை. நீங்கள் மற்றவர்களுக்காக காலத்தினையும், பணத்தினையும் யோசிக்காது செலவழிக்கும் போதே நீங்கள் ஏமாற்றப்படப் போகின்றீர்கள் என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் இது கலி காலம். உங்களைச் சுற்றி அனைவரும் இருப்பர். ஆனால் நீங்கள் தனித்து இருப்பதாகவே உங்களுக்கு தோன்றும்.

    * அனைத்தினையும் இம்மி தவறாது பிறரிடம் பகிர்வது என்பது அவ்வளவு சிறந்ததாகக் கூறப்படவில்லை. மகிழ்ச்சியினைக் கூட உங்கள் மனதுக்குள், உங்களுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.

    * பலர் உங்கள் மகிழ்ச்சி கண்டு பொறாமை கொள்ளலாம் என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள்.

    * உங்கள் அடுத்தடுத்த வாழ்க்கை திட்டங்களை அக்குவேறு, ஆணி வேறாக பறைசாற்ற வேண்டாம். உங்கள் செயல்களின் வெற்றி அதனை பேசட்டுமே.

    * நமக்கு சில குறைபாடுகள், போராட்டங்கள் இருக்கலாம். அவை உங்கள் உள்ளேயே இருக்கட்டுமே. பறைசாற்ற வேண்டுமா என்ன?

    * வீட்டு சண்டைகளை நம் ஆபீசில் உள்ளவர்களுக்கு 'சிந்துபாத்' தொடர் கதை ஆக்க வேண்டாமே!

    * நீங்கள் ஒரு சிறிய நல்ல காரியம் செய்தால் அதற்கு மேடை போட்டு மற்றவர் பாராட்ட வேண்டுமா என்ன? உங்களால் அதனைக் கூட உங்கள் உள்ளேயே வைத்துக் கொள்ள முடியாதா? நீங்களே கூட அதனை மேளம் அடித்து கூறுவீர்களா என்ன?

    * உங்களின் நல்ல செயல்கள் இறைவன் உங்களுக்கு அளித்த வாய்ப்பு. நன்றி சொல்லுங்கள்.

    * உங்களிடம் அதிக பணமோ, பணப்பற்றா குறையோ இருந்தால் தேவை இல்லாமல் பிறர் அறிய வேண்டாம். ஒன்று உங்களின் பணத்தினை எதிர்பார்ப்பார்கள் அல்லது பண மின்மையை கேலி செய்வார்கள்.

    * உங்கள் கடந்த கால தவறுகள், வருங்கால திட்டங்கள் இவற்றினை ஏன் பிறர் அறிய வேண்டும்?

    * உங்கள் பலமோ, பலவீனமோ நீங்கள் மட்டுமே அறிந்தால் போதும்.

    * நீங்கள் பட்ட அவமானங்களை, வேதனைகளை படம் போட்டு காட்ட வேண்டாம்.

    * உங்கள் உணர்ச்சிகளை முகத்திலோ, செயலிலோ வெளிப்படுத்தக் கூடாது. தனிமையில் அவற்றினை சுத்தம் செய்து விடுங்கள்.

    * இவற்றினையெல்லாம் நாம் கடைபிடிக்கும் போது நம்மிடம் ஏற்படும் சில மாற்றங்களை நாமே உணர முடியும். எதிலும் சற்று நிதானமாய் இருப்பதனை நாமே உணர முடியும்.

    * கண்டிப்பாக அனைவரும் தியான, மூச்சு பயிற்சி முறைகளையும், யோகா பயிற்சியினையும் அன்றாடம் பயில வேண்டும். இதுவே உங்களை அமைதிப்படுத்தி, படபடப்பினை நீக்கி உடலில் பிராண சக்தியினை அதிகரிக்கச் செய்யும். இந்த முறைகள் நம் 'பாட்டரி ரீ சார்ஜ்' செய்வது போல் என்று குறிப்பிடப்படுகின்றன. இவற்றினை பயிற்சியாளர்களின் மூலம் அறிவதே முறை.

    எப்போதும் மகிழ்ச்சியாக இருப்போமே!

    * மகிழ்ச்சியாக இருப்பவர்களைப் பற்றி ஆராய்ந்து டேவிட் என்ற விஞ்ஞானி எழுதியுள்ள கருத்துக்களின் தலைப்பினை மட்டுமே பார்ப்போம். இது நம்மைப் பற்றி நாம் சுய ஆய்வு செய்து கொள்ள உதவும்.

    * ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. குறிக்கோள் உள்ளது.

    * மகிழ்ச்சிக்கான முறையினை நாம் தான் உருவாக்க வேண்டும்.

    * ஒவ்வொரு முறையும் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற மிருகத்தனமான வெறி மகிழ்ச்சி தராது.

    * நம் குறிக்கோள்கள், லட்சியங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து ஒருங்கிணைந்து இருக்க வேண்டும். சிதறி இருக்கக் கூடாது.

    * நல்ல நட்புகள், எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும்- சிறந்ததே.

    * நாம் எப்படி இருக்கின்றோமோ- அப்படியே நம்மை நாம் ஏற்றுக் கொள்வோம்.

    * டி.வி. நேரம் குறைந்தால், போன் நேரம் குறைந்தால் மகிழ்ச்சி கூடும். முயற்சி செய்துதான் பாருங்களேன்.

    * தூங்கச் செல்லும்போது மண்டை குழப்பி யோசிக்க வேண்டாமே.

    * நல்ல நட்பு பணத்தினை விட உயர்ந்ததே.

    * எதிர்பார்ப்புகள் நடைமுறையோடு ஒத்து இருக்க வேண்டும். கற்பனை உலகில் இருக்கக் கூடாது.

    * புது சிந்தனைகள், கருத்துக்கள், எண்ணங்கள் இவற்றை வரவேற்று ஆராயுங்கள்.

    * எல்லோரும் முக்கியமானவர்களே.

    * ஆக்கப்பூர்வ சிந்தனைகள் எண்ணங்கள் அவசியம்.

    * உங்களை நீங்களே நம்ப வேண்டும்.

    * தனித்தே பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று நினையுங்கள்.

    * வயதாகி விட்டது. முதுமை வந்து விட்டது என்று மட்டும் சோர்ந்து விடாதீர்கள்.

    * எதிலும் அதிகமாக கவனம் செலுத்துங்கள்.

    * சொல்வதை செய்யுங்கள். செய்வதை சொல்லுங்கள்.

    * யாரிடமும் கரடு முரடான போக்கில் இருக்காதீர்கள்.

    * உடற்பயிற்சி செய்யுங்கள்.

    * சிறிய விஷயங்களில் கூட அதிக பொருள் புதைந்து இருக்கும்.

    * சிரியுங்கள், புன்னகையுங்கள்.

    * கம்ப்யூட்டரை நன்கு பயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்

    * எதற்கும் நம்மை நாமே குற்றம் சாட்டிக் கொள்ளக் கூடாது.

    * இரவு உறக்கம் நன்கு இருக்க வேண்டும்.

    * அக்கம் பக்கத்தினரை அறிந்து கொள்ளுங்கள்.

    * தினமும் நல்ல புத்தகத்தினை படியுங்கள்.

    * பணம் மிக அவசியம். ஆனால் அதனால் மகிழ்ச்சியினை வாங்க முடியாது.

    இந்த கருத்துகளையும் சற்று யோசித்து பார்க்கலாமே:

    60 வயதிற்குப் பிறகாவது பரபரப்பான உலக சூழலில் இருந்து ஒதுங்கி தனிமையில் சிறிது நேரமாவது இருக்க பழகுவோமே! இதனை இளம் வயதிலேயே பழக ஆரம்பித்தால் அதிக நன்மைகளைப் பெறலாம்.

    * முதலில் உங்கள் மீது அன்பு செலுத்த கற்றுக் கொள்ளுங்கள்.

    * நாம் நாமாக மட்டுமே இருப்போம். கலர் பூச்சுகள் வேண்டாமே!

    * பெரிதாக சிந்திக்கவும்.

    * நம் ஆழ்மனம், உள்ளுணர்வு சொல்லும் செய்தியினைக் கேளுங்கள்

    * தனிமை ஒரு பரிசு.

    * டிவி, போன், அரட்டை இவற்றிலிருந்து விடுதலை பெறுங்கள்.

    * இயற்கையோடு பேச ஒரு வாய்ப்பு கொடுங்கள். * தனிமையில் பிரயாணம் செய்யுங்கள்.

    * மன்னிக்கும் பழக்கத்தினை அடங்கா கோபத்தினை விட்டெறியும் பழக்கத்தினை உருவாக்கிக் கொள்ளுங்கள்

    * உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள்.

    * பேசாமல், அமைதியாய் நாற்காலியில் அமருங்கள். பேன் சத்தம், பறவைகள் சத்தம் இவற்றை கவனியுங்கள்.

    * உங்கள் சுவாசத்தோடு பயணியுங்கள்.

    * அனேக பதில்கள் உங்களுடன் பேசும்.

    முயற்சி செய்வோமே!

    Next Story
    ×