என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நடந்தால் நல்லது! நடக்கும் நல்லது!
    X

    நடந்தால் நல்லது! நடக்கும் நல்லது!

    • லேசான மூட்டு வலி கால் வலி பிரச்சனை இருப்பவர்களும் செய்ய முடியும்.
    • நம்முடைய எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    பிபி இல்ல! சுகர் இல்ல! கொலஸ்ட்ரால் இல்லை! சிகரெட் பிடிக்கிறதில்லை! ஆனா ஏன் ஹார்ட் அட்டாக் வந்திச்சு!

    ஏன் டாக்டர்???? என்று நீங்களும் விடை தேடிக் கொண்டிருக்கிறீர்களா?

    மேலே படியுங்கள்!

    இருதய மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா?. நீங்கள் 6-8 மணி நேரம் உட்கார்ந்து பார்க்கற வேலை செய்கிறீர்களா? நீங்கள் வீட்டில் எப்பொழுதும் உட்கார்ந்து கொண்டே இருக்கிறீர்களா? உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வருவதற்கான வாய்ப்பு 40 சதவீதம் அதிகம். அது மட்டுமல்ல நீரிழிவு (சர்க்கரை) நோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகம்.

    இது அறிவியல் ஆய்வுகள் கூறும் உண்மை.

    அப்ப உட்காரவே கூடாதா?

    30லிருந்து 60 நிமிடங்கள் வரை தொடர்ந்து அமர்ந்திருக்கலாம். முடிந்தவரை ஒரு மணிக்கு ஒரு முறை ஒன்றிலிருந்து இரண்டு நிமிடங்கள் நடந்து அல்லது எழுந்து நின்று பிறகு மீண்டும் அமரலாம்.

    நடைப்பயிற்சி. ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்கிற மிக எளிதான உடற்பயிற்சி.

    நடைப்பயிற்சியின் நன்மைகள் என்ன?

    துவங்குவதற்கு எளிதானது தொடர்வதற்கும் இலகுவானது

    செலவில்லாத ஒரு எளிதான உடற்பயிற்சி.

    லேசான மூட்டு வலி கால் வலி பிரச்சனை இருப்பவர்களும் செய்ய முடியும்.

    நல்ல ஒரு பசுமையான சூழ்நிலையில் இயற்கை சூழ்நிலையில் நடக்கும்போது அது நம்முடைய மன அழுத்தத்தையும் படபடப்பையும் குறைக்கிறது.

    அத்துடன் குதூகல ஹார்மோன்கள் சுரப்பதற்கு உதவுகிறது.

    இவை நம்முடைய எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    இரவு தூங்குவதற்கு முன்பு நடந்தால் நல்ல ஆழமான தூக்கம் கிடைக்கும்.

    இதயத்தினுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குறிப்பாக ரத்த கொதிப்பு இருப்பவர்களுக்கு குறைவதற்கு வாய்ப்பு உண்டு.

    கலோரிகள் எரிக்கப்படுவதால் உடல் எடை கூடாது. உடல் எடை குறையவும் வாய்ப்பு உள்ளது.

    சர்க்கரை நோய், பக்கவாதம், இதய நோய் போன்றவை வருவதற்கான வாய்ப்பு குறையும்.

    மூட்டுகளில் இறுக்கத்தை குறைத்து இலகுவாக்க உதவுகிறது.

    உடலில் உள்ள தசைகள் வலுவாகும். தொடர்ந்து மேற்கொள்பவர்களுக்கு கீழே விழுவதற்கான வாய்ப்பு குறைவு.

    எலும்புகளின் அடர்த்தி அதிகரிக்கும். எலும்பு மெலிவு நோய், ஆஸ்டியோபோராசஸ் வருவதற்கான வாய்ப்பு குறைவு.

    குழுவாக நடைபயிற்சி செய்வது, மிக நல்ல பொழுது போக்கு. மற்றவர்களோடு கலந்துரையாடும் பொழுது மகிழ்ச்சியைத் தரும்.

    எல்லாவற்றையும் சேர்த்து பார்த்தால் கட்டாயம் வாழ்நாளை அதிகரிக்கும்.

    நடைப்பயிற்சியில் எவ்வளவு கலோரி செலவாகிறது?

    சராசரியாக ஒரு கிலோமீட்டருக்கு 50லிருந்து 60 கலோரிகள் எரிக்கப்படும்.

    அதாவது ஒரு கப் அரிசி சாதம் உண்ணும் பொழுது 200 கலோரிகள் வரை நாம் பெறுகிறோம். ஒரு கப் அரிசி சாதம் (150-160 கிராம்)சாப்பிட்டால் 4-5 கிலோமீட்டர் நடக்க வேண்டும்.

    ஒரு கப் காபி குடித்தால். 80-100 கலோரிகள் - 2 கிலோ மீட்டர் நடக்க வேண்டும்.

    இரண்டு இட்லி சட்னி சாம்பார் - 200 கலோரிகள்.

    யப்பாடி! இரண்டு இட்லி சாப்பிட்டாலே அஞ்சு கிலோ மீட்டர் நடக்கணுமா?

    இதை புரிந்து கொள்ளவும்.

    நான் ஏன் வெயிட் போட்டேன் ஒன்னுமே சாப்பிடுவதில்லை என்று புலம்புபவர்களுக்காக தான் இந்த கணக்கு.

    எனவே ஒரு நாளைக்கு 10,000 அடிகள் அல்லது 5-8 கிலோமீட்டர் நடைபயிற்சி அனைவருக்கும் கட்டாயம்.

    எந்த நேரத்தில் செய்ய வேண்டும்?

    காலை நேரம் மிகச்சிறந்ததாகும்.

    உண்மையில் எந்த நேரத்தில் உங்களால் தினமும் நடைபயிற்சி செய்ய முடியுமோ அதுதான் உங்களுக்கு சிறந்த நேரம்.

    மெஷினில் நடப்பது நல்லதா? அல்லது வெளியே நடப்பது நல்லதா?

    இரண்டும் ஒன்றுதான். மழை வெயில் குளிர் என்று வெளியில் எப்படி இருந்தாலும் ட்ரெட் மில்லில் நாம் நடந்து கொண்டிருக்கலாம்.

    வெளியே நடக்கும் போது அதிகமான தசைகள் வலுப்பெறும்.

    ஒருமுறை எவ்வளவு நேரம் எப்படி துவங்கலாம்?

    10-15 நிமிடங்கள் ஒரு வாரத்தில் ஐந்து நாட்கள் என்று துவங்கலாம்.

    சாப்பிட்டு விட்டு நடக்கலாமா?

    சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்து நடக்கலாம்.

    எட்டில் நடப்பது, ஆறில் நடப்பது நல்லதா?

    சிறு இடத்திலும் இது போன்ற வடிவங்களில் நடப்பது சத்தியமாகும். மற்றும் மூளையை தூண்டக்கூடிய உடற்பயிற்சியாக அமையும். குறிப்பிட்ட வடிவத்தில் நடக்கும் பொழுது நம்முடைய கவனம் நடையில் இருக்கும்.

    மிகவும் நடந்தால் எலும்பு தேய்ந்துவிடும் என்கிறார்களே உண்மையா?

    மிகவும் குறைவான தேய்மானம் நடை பயிற்சியில் தான்.

    நடக்கும் பொழுது எப்படி பாதுகாப்பாக நடக்க வேண்டும்?

    முடிந்தவரை கைகளை வீசிக்கொண்டு நடங்கள். தடுமாறினால் பிடித்துக் கொள்வதற்கு ஏதுவாக கைகளில் எதுவும் வைத்துக் கொள்ளாதீர்கள்.

    காலில் சரியான அளவு நல்ல தரமான ஷூக்களை அணிந்து கொண்டு நடைபயிற்சி செய்யுங்கள்.

    அதுபோல உடையும் சவுகரியமாக இருக்கட்டும். முடிந்தவரை பருத்தியாலான உடைகளை அணியுங்கள்.

    நடக்கும்போது போனில் பேசிக் கொண்டே செல்லாதீர்கள். கவனம் நடைபயிற்சியில் இருக்கட்டும்.

    எங்கே! நடைபயிற்சிக்கு தானே கிளம்பி விட்டீர்கள்?!

    அப்படி என்றால், ஆரோக்கியத்தில் முதல்படியில் ஏறி விட்டீர்கள்!

    வாட்ஸ்அப்: 8925764148


    Next Story
    ×