என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    அதிக சத்துள்ள அவல்
    X

    அதிக சத்துள்ள 'அவல்'

    • ஒவ்வொரு வாய் அவுலை நீங்கள் மென்று தின்னத் தின்ன உங்கள் உடலில் ஆரோக்கிய வளம் பெருகும்.
    • அவுல் அப்படியல்ல. அவுலும் மாவுச்சத்து உடைய சிறுதீனிதான்.

    பொரியைப் போலவே நம்முடைய பாரம்பரியத்தில் அவுலும் ஒரு முக்கியமான உண்பொருள். அவுல் இன்று பரவலாகக் கிடைப்பதில்லை. ஆனால் பொரியைக் காட்டிலும் அவுல் சத்தான உண்பொருளாகும்.

    கிருஷ்ணன் –குசேலன் கதையைக் கேட்டிருப்போம். அதாவது தனது சிறுவயது நண்பன் குசேலனைக் காண கிருஷ்ணன் வருகிறான். முன்னரே நிறைய குழந்தைகளுடன் வறிய நிலையில் இருக்கும் குசேலன், தனது பால்ய நண்பன் கிருஷ்ணனை விருந்துபச்சாரம் செய்வதற்கு ஏதுமற்ற நிலையில் சிறு முடிச்சாகக் கட்டி வைத்திருந்த அவுலை எடுத்துக் கிருஷ்ணனிடம் தருகிறான். சிறுதுணி மூட்டையை அவிழ்த்து ஒவ்வொரு பிடி அவுலாகக் கிருஷ்ணன் வாயிலிட்டு மெள்ள மெள்ள குசேலனின் வீட்டில் செல்வவளம் பெருகியதாகச் சொல்லப்படுகிறது. இது புனைகதையாக இருக்கலாம்.

    ஆனால் ஒவ்வொரு வாய் அவுலை நீங்கள் மென்று தின்னத் தின்ன உங்கள் உடலில் ஆரோக்கிய வளம் பெருகும். இது கதையல்ல, மெய்யாகவே உணரக்கூடியதாகும். ஏனென்றால் அவுலானது குறிப்பிட்ட தானியத்தில் இருந்து மேலுமியை மட்டும் நீக்கி அதன் சத்துக்கள் எந்தவகையிலும் பாதிக்கப்படாமல் நம்முடலினுள் சேருகிறது.

    உண்பதற்கென்று விளைவிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் தமக்குரிய சத்துக்கள் சிதைக்கப்படாமல் நமக்கு முழுமையான நிலையில் கிடைக்கின்றன. அவற்றை நாம் வினைமாற்றம் செய்கிற பொழுது ஒவ்வொரு படிநிலையிலும் சத்துக்கள் குறைந்து கொண்டே வருகின்றன. எடுத்துக்காட்டாக நாம் சமைத்த கீரையை சுமார் நூறுகிராம் அளவிற்கு உண்ணலாம். அதையும் வெங்காயம், பருப்பு, தேங்காய், காரம் போன்றவற்றை உடன் சேர்த்து தான் சமைக்க வேண்டும்.

    அந்தக் கீரையை சோற்றுடன் பிசைந்து உண்டால் நமக்குச் செரிப்பதற்கு ஏதுவான அளவில் இருக்கும். கீரையில் நுண் சத்துக்கள் எனப்படும் உயிர்ச் சத்துக்களும் (விட்டமின்) தாதுச் சத்துக்களும் அதிகம். அதனை நேரடியாக உண்டால் நம்மால் சத்துக்களைச் செரிக்க முடியாத அளவிற்கு அதாவது உடலால் ஈர்க்க முடியாத அளவிற்கு மிகையாக இருக்கும். உப பொருட்கள் சேர்த்து, சமையல் செயல்பாட்டால் வெப்பத்தை ஏற்றி கீரையின் மிகைக்கூறுகளை மட்டுப்படுத்துகிறோம். துணைப்பொருட்களைச் சேர்ப்பதாலும் செரிக்க ஏற்றதாக மாற்றுகிறோம். அதற்குப் பின்னரே நம்மால் கீரையை உண்ண முடியும்.

    அதேபோல் உருளைக் கிழங்கை எடுத்துக் கொள்ளுங்களேன். அதில் நுண்சத்துக்கள், தாதுச்சத்துக்கள் குறைவு. எனவே வெறும் கிழங்கைக் கூட உப்புப் போட்டு அவித்து உண்டு விடலாம். கிழங்கின் சத்துக்களை மட்டுப்படுத்த வேண்டியதில்லை. ஏனென்றால் அதில் மாவுச்சத்துதான் மிகுந்துள்ளது. அப்படித்தான் பொரித்த உ.கி சிப்ஸை டிவியைப் பார்த்தபடியே 200 கிராம் பாக்கெட்டைக் கூட அப்படியே கொறித்து முடித்து விடுகிறோம். ஆனால் அதில் மாவுச்சத்து மிகுந்துள்ளதால் உடலுக்கு எந்த ஆற்றலையும், அதாவது நுண்சத்து – தாதுச்சத்து எதையும் தராமல் மாவுச்சத்தினை மட்டுமே தருவதால் உடலில் சதை பெருகத் தொடங்கி விடுகிறது.

    இன்றைய நொறுவிகள் பெரும்பாலானவை மாவுச் சத்துக்கள் மிகுந்தவையே. சுவையில், இனிப்பு, காரம், புளிப்புடன் கூடிய இனிப்பு, மிளகுகாரம், பட்டை, கிராம்பின் செயற்கை வாசத்துடன் கூடிய காரம், மிளகாய்த்தூள் காரம் என்று விதவிதமாக இருக்கலாம். ஆனால் எல்லாமே சதையைப் பெருக்க வைக்கும் மாவுப் பொருட்களை ஆதாரமாகக் கொண்டவையே. அதனால் தான் இன்றைய தலைமுறையினர், பாதிக்கும் மேற்பட்டோர் இருபது வயதிற்குள்ளேயே ஒபிசிடி என்று சொல்லக்கூடிய சதைப் பொருக்கத்துடன் காணப்படுகின்றனர்.

    ஏதாவது ஒருவகையில் சதைப் பெருக்கம் ஏற்பட்டு விட்டால் அதனைக் குறைப்பதோ, உடலை இயல்புநிலைக்குக் கொண்டு வருவதோ அத்தனை எளிதல்ல. சதைப் பெருக்கம் ஒருசில மாதங்கள் நிலைபெற்று விட்டாலும் உடலின் வளர்சிதை மாற்றம், சுரப்பிகள் சுரக்கும் தன்மை என உட்செயற்பாடுகள் அத்தனையும் மாற்றங்கொள்ளத் தொடங்கி விடும்.

    அதற்குப் பின்னர் ப்ரொக்கிராமிங் செய்யப்பட்ட எந்திரனைப் போல அவனைக் கட்டுக்குள் வைக்க முடியாது. நல்ல பழக்கமோ, தீய பழக்கமோ அதனை உருவாக்கும் வரை மட்டுமே நம்முடைய செயல்பாட்டில் இருக்கும். பல்லாயிரம் டன் எடைகொண்ட டைனோசர் கூட அப்படித்தான். அது பேருயிராய் உருக்கொள்ளத் தொடங்கிய பிறகு சதா உண்டு உண்டு தன்னை மேலும் மேலும் பெருக்கிக் கொள்ள வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டு விட்டது.

    தான் வாழும் பகுதியில் அனைத்தையும் உண்டு தீர்த்த பிறகு தன் வாலையே கூட அது உண்ணத் தொடங்கியதாகவும் மிகைக் கூற்று உண்டு. ஒரு கட்டத்தில் உண்பதற்கு எதுவுமே அற்ற நிலையில் அந்த உயிரினம் அழிந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. நம்மில் பலரும் அப்படித்தான் சத்துக்குறைவான உணவை உண்பதால் சத்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அதிக அளவிற்கு உண்கிறோம். உண்டு பழகி விட்டதால் மீண்டும், மீண்டும் உண்டு பருத்த உடலைத் தக்க வைக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறோம்.

    உடல் வெறுமே பருமனாக இருந்து விட்டால் தேவலாம். பருத்த உடலினுள் பயன்படுத்தப்படாத சதையும், கொழுப்பும், மிகைச் சத்துக்களும் வெவ்வேறு விதமான வினையூக்கத்தினுள் உந்தப்படுகிறது. சதையின் அளவு கூடிக்கூடி சுவாத்திற்குரிய உறுப்புகளின் செயல்பாடுகளில் தடையேற்படுகிறது. வீட்டைக் கட்டுவோர் தெருவில் ஒருபகுதியையும் சேர்த்துக் கட்டி தெருவின் அகலத்தைச் சுருக்குகிறார்கள். வாகனங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. இறுதியில் என்னவாகிறது. அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி, ட்ராபிக் ஜாம். சின்னச் சின்ன நகரங்கள் கூட போக்குவரத்துச் சிக்கலில் சிக்கித் திணறி அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

    அதுபோலவே உடலெங்கும் ரத்தவோட்டத்தைக் கொண்டு செல்லும் தமனிகள் சதைப் பிதுக்கத்தால் திக்கித் திணறுகின்றன. நுரையீரல் சுவாசிப்பதற்குப் போதுமான வெளி இல்லாததால் ரத்தவோட்டத்தில் உயிர்க் காற்றினை ஏற்றிச் செல்ல முடிவதில்லை. எனவே உடலினுள் ட்ராபிக் ஜாம், அதாவது கார்டியாடிக் அரஸ்ட் ஏற்படுகிறது. ஆக வாயில் இட்டு மெள்ளத் தேவையற்ற மாவுப் பொருட்களை நாம் உள்ளே தள்ளத் தள்ள சொந்த செலவில் சூன்யம் வைத்த கதையாக நம்முடலுக்கு நாமே கெடுவினை செய்கிறோம்.

    அவுல் அப்படியல்ல. அவுலும் மாவுச்சத்து உடைய சிறுதீனிதான். ஆனால் அதில் மாவுச் சத்துடன் நார்ச்சத்துக்களும், நுண் சத்துக்களும் மிகுதியாக உள்ளன. நாம் நெல்லில் இருந்து அரிசியைப் பிரிக்கும் போது உமியுடன் அரிசியின் மேலேடான தவிட்டையும் பிரித்து விடுகிறோம். தவிடு அரிசியுடன் ஒட்டியுள்ள பகுதி மிகுந்த சத்தான பகுதியாகும். நீங்கள் கைக்குத்தல் அரிசிச் சோற்றைச் சாப்பிட்டுப் பாருங்கள், தீட்டப்பட்ட அரிசிச் சோற்றைச் சாப்பிடும் அளவிற்கு சாப்பிட முடியாது. காரணம் கைக்குத்தல் அரிசியில் மிகுந்த சத்துக்கள் தீட்டல் (பாலிஷ்) செயல்பாட்டினால் நீக்கப்படாமல் அப்படியே கிடைக்கிறது.

    அதுபோலவே நெல்லை ஊற வைத்துப் பிதுக்கி எடுத்தல் செயல்பாட்டின் வழியாக அவுல் தயாரிக்கப்படுவதால் அரிசியில் உள்ள சத்துக்கள் சிதைக்கப்படாமல் முழுமையாக அப்படியே கிடைக்கிறது. அதனால்தான் இந்தப் பகுதியின் துவக்கத்தில் சொன்னபடி அவுலைச் சாப்பிடச் சாப்பிட நம்முடைய உடல் வளம் பெருகிக் கொண்டே இருக்கும், குசேலர் வீட்டில் செல்வம் பெருகியது போல.

    அவுலை எப்படி உண்பது என்பது குறித்துத் தொடர்ந்து பார்ப்போம்.

    செல்-96293 45938

    Next Story
    ×