என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மேனியை தங்கம் போல் தகதகக்க வைக்கும் தக்காளி!
    X

    மேனியை தங்கம் போல் தகதகக்க வைக்கும் தக்காளி!

    • எல்லாவிதமான புற்றுநோயை தடுக்கக்கூடிய ஆற்றல் தக்காளிக்கு இருக்கிறது.
    • நார்ச்சத்து செரிமான சக்தியை அதிகப்படுத்தி ஜீரணக் கோளாறுகள் வருவதை தடுக்கிறது.

    "உனக்கு வந்தா ரத்தம்! எனக்கு வந்தா தக்காளி சட்னியா!"

    தக்காளி என்றவுடன் நமக்கு உணவு பொருள் எல்லாம் ஞாபகம் வராது.

    இந்த வசனம் தான் ஞாபகம் வரும்.

    ரத்த நிறத்தில் இருக்கும் தக்காளி என்னென்ன நன்மைகளை தருகிறது? பார்ப்போமா?

    லைகோபின் எனப்படும் முக்கியமான சத்து தான் இதன் நிறத்திற்கும் இதன் பல மருத்துவ குணங்களுக்கும் காரணமாக அமைகிறது. இதைத்தவிர விட்டமின் சி, கே, போலிக் ஆசிட் மற்றும் பொட்டாசியம் சத்துகளும் உள்ளன. வீக்கத்தை குறைக்கும் தன்மை மற்றும் ஆக்சிஜன் காரணிகளால் ஏற்படும் காயங்களை குறைக்கும் தன்மையும் உள்ளது. இதன் மூலம் எல்லாவிதமான புற்றுநோயை தடுக்கக்கூடிய ஆற்றல் தக்காளிக்கு இருக்கிறது.

    அதுபோலவே நெஞ்சு வலி மற்றும் கைகால் செயல் இழப்பு போன்ற பெரும் பிரச்சனைகள் வரக்கூடிய வாய்ப்பையும் தக்காளி தடுக்கிறது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமான சக்தியை அதிகப்படுத்தி ஜீரணக் கோளாறுகள் வருவதை தடுக்கிறது. அதுபோலவே விட்டமின் சி எதிர்ப்பு சக்தியை கொடுத்து அடிக்கடி சளி காய்ச்சல் வருவதிலிருந்து காப்பாற்றுகிறது.

    இது எல்லாவற்றையும் விட முக்கியமாக இதில் இருக்கும் லைக்கோபின் சத்து விந்தணுக்களுடைய கரு உருவாக்கக்கூடிய தன்மையை எண்ணிக்கையை அதிகரிக்கிறது. பெண்களுக்கும் ஹார்மோன்களை சீரமைத்து ஆரோக்கியமான கருமுட்டை உருவாவதில் உதவுகிறது. கண்களில் வயதில் மூப்பின் காரணமாக ஏற்படும் மாற்றங்களை குறைத்து கண்ணை பாதுகாக்கிறது.

    இந்த பண்புகள் தான் மிகச்சிறந்த உணவு பொருள் பட்டியலில் தக்காளியை மேலே கொண்டு போய் வைக்கிறது.

    எவ்வளவு சாப்பிடலாம்?

    தக்காளியை சமைக்காமல் சாறை பருகி ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து மூன்று நடுத்தர அளவு தக்காளியை உண்ணலாம். தக்காளியை சமைத்து சாப்பிட்டாலும் ஒரு சில நீரில் கரையும் விட்டமின்கள் தவிர மற்றவை எல்லாம் கிடைக்கும். மேலும் தக்காளி சாஸ், தக்காளியிலிருந்து தக்காளியின் சத்துகள் கிடைத்தாலும் அதிக அளவு உப்பும் சர்க்கரையும் சேர்க்கும் பொழுது அதனுடைய இயல்பான நற்குணங்கள் குறையும்.

    தக்காளி அலர்ஜி ஆகுமா? தக்காளி சாப்பிட்டால் சைனஸ் வருமா? தக்காளி சாப்பிட்டால் கிட்னியில் கல் வருமா? ஒரு சிலருக்கு தக்காளி ஒத்துக் கொள்ளாமல் இருக்கலாம் ஒவ்வாமை ஏற்படலாம்.

    ஜெயஸ்ரீ சர்மா


    அதுபோலவே ஒவ்வாமை இருப்பவர்களுக்கு தக்காளி சாப்பிட்டால் சைனஸ் தொந்தரவு அதிகமாகலாம். அவர்கள் மருத்துவரின் அறிவுரையை பின்பற்றவும்.

    பொதுவாக தக்காளியில் ஆக்சலேட் சத்து அதிகமாக இருப்பதால் கற்கள் உருவாகலாம். அவரவர் உடல் வாகை பொறுத்துதான் சிறுநீரக கற்கள் உண்டாகும். எனவே ஏற்கனவே சிறுநீரக கற்கள் இருப்பவர்கள் தக்காளி சாப்பிடுவதை தவிர்க்கவும்.

    மற்றவர்கள் தக்காளி எடுத்துக் கொண்டால் நிறைய தண்ணீர் குடித்தால் கற்கள் உருவாகாது. அதுபோலவே சிறுநீரகப் பிரச்சனை இருப்பவர்களும் தக்காளி சாப்பிடுவதை தவிர்க்கவும்.

    தக்காளி எப்படி வளர்கிறது?

    தக்காளி எளிதாக வீட்டில் வளரும் செடி. எந்த போஷாக்கும் கேட்காது. விதையையோ, அழுகிப்போன தக்காளியையோ நீர் வரும் இடங்களில் தூக்கி எறிந்தாலே அழகாக வளர்ந்து கிலோ கணக்கில் தக்காளியாய் காய்த்து தள்ளிவிடும். ஒரு செடி வளர்ந்து காய்ப்பதற்கு இரண்டிலிருந்து மூன்று மாதங்கள் ஆகும்.

    எப்படி சாப்பிடலாம்?

    தக்காளியின் இனிப்பும் புளிப்பும் சாறும் பல்வேறு விதமான உணவு பண்டங்களிலும் அதை ஒரு முக்கியமான கூட்டுபொருளாக்குகிறது. ரசம் என்றால் தக்காளி ரசம் தான். அதுபோலவே சூப் என்றால் தக்காளி சூப் தான். சாம்பார், பச்சடி, சோறு, ஊறுகாய், கூட்டு, தக்காளி சட்னி, இது தவிர பலவிதமான உணவுகளிலும் புளிப்புக்காகவும் சுவைக்காகவும் சேர்க்கப்படுகிறது.

    இது மட்டுமா? இன்றைய ஜென்சி குழந்தைகளின் விருப்பமாக இருக்கும் பாஸ்தா பீட்சா டொமேட்டோ சாஸ் சாலட் சாண்ட்விச் என்று எதுவும் தக்காளி இல்லாமல் முடியாது.

    இறுதியாக அழகிற்கு...

    தக்காளி சாற்றை முகத்தில் நன்றாக தடவி, முகத்தை கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். இது ஒரு எளிதான அழகு குறிப்பு ஆகும்.

    தக்காளியை அரைத்து வடிகட்டி தினமும் குடித்தால் தோல் மினுமினுப்பு ஏறும்... தங்கம் போல தோல் தகதகவென்று இருக்கும். முகச்சுருக்கங்கள் மறையும். இளமைப் பொலிவோடு வலம் வரலாம்.

    குறைந்தபட்சம் வீட்டில் செய்யும் தக்காளி ரசத்தையாவது வீணாக்காமல் சாப்பிடுவோம்.

    வாட்ஸ்அப்: 8925764148

    Next Story
    ×