என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    லட்சத்தில் சம்பாதிக்கக் கூடிய ஜாதக அமைப்பு எப்படி இருக்கும்
    X

    லட்சத்தில் சம்பாதிக்கக் கூடிய ஜாதக அமைப்பு எப்படி இருக்கும்

    • ஒரு ஜாதகத்தில் லக்னம் என்பது ஜாதகரின் விதிப்பயனை கூறும் இடமாகும்.
    • லக்ன பாவத்திற்கு அடுத்தபடியாக தன ஸ்தானம் மிக முக்கியம்.

    ஒரு காலத்தில் காலனா சம்பாதித்து குடும்பமே நிம்மதியாக வாழ்ந்த வாழ்க்கை முறையை தாத்தா, பாட்டி மூலம் அறிந்திருப்போம். தற்போது ஒரு லட்சம் சம்பாதித்தால் கூட கடன், இ.எம்.ஐ. என்று அடிப்படைத் தேவை கூட நிறைவு செய்ய முடியாத வாழ்க்கையை பலர் வாழ்கிறார்கள். படித்து முடித்தவுடன் சுயதொழிலோ உத்தியோகமோ என்னோட குறைந்தபட்ச வருமானம் ஒரு லட்சம் ஆக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இளைஞர்களும் இளம் பெண்களும் முனைப்புடன் செயல்படுகிறார்கள்.

    இன்றைய கலாச்சாரத்திற்கு லட்ச ரூபாய் மிகக் குறைந்த சம்பளமாக உள்ளது. திருமணத்திற்கு வரன் தேடும் பெண் வீட்டார் குறைந்தது ஒரு லட்சம் சம்பாதிக்கும் மாப்பிள்ளை வரனாக அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். மகனுக்கு வரன் தேடும் பெற்றோர்கள் மருமகளாக வரப்போகும் பெண் லட்சம் ரூபாய் சம்பாதிக்க வேண்டும். அத்துடன் சீதனமாக பொன், பொருள் கொண்டு வர வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். இன்று சமுதாயத்தில் லட்ச ரூபாய் சம்பளம் வாங்குவது ஒரு கவுரவ பிரச்சினையாக உள்ளது. வருமானத்தை அதிகரித்து வாழ்வாதாரத்தை உயர்த்த பலர் வெளியூர் வெளிநாட்டிற்கு அதிகமாக செல்கிறார்கள். வெளியூர் வெளிநாட்டிற்கு சென்றால் மட்டுமே வாழ்வாதாரம் உயரும் என்ற நம்பிக்கை பலருக்கும் இருக்கிறது.

    ஒருவருக்கு சமுதாய அங்கீகாரத்தை வழங்குவதில் பணம் முன்னிலை வகிக்கிறது. சமுதாயத்தில் பணப்பற்றாக்குறை காரணமாக நிதி நெருக்கடி அதிகம் காணப்படுகிறது. நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் பலர் தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள். பணம் எப்படி வாழ்க்கையை உருவாக்குகிறதோ, அதேபோல் பணம் மனிதனை எல்லாவற்றையும் இழக்கத் தூண்டுகிறது. இதை தான் நமது முன்னோர்கள் பணம் பாதாளம் வரை பாயும் என்பதை சொல்லி வைத்தார்கள். ஒருவர் குறைந்த பட்சம் ஒரு லட்ச ரூபாய் சம்பாதிக்க வேண்டும் எனில் அவருடைய ஜாதகத்தில் என்ன அமைப்பு இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

    லக்னம்: ஒரு ஜாதகத்தில் லக்னம் என்பது ஜாதகரின் விதிப்பயனை கூறும் இடமாகும். ஒருவருக்கு லட்சங்களில் சம்பாதிக்கும் யோகம் இருக்கிறதா என்பதை அறிய, சில கிரக நிலைகள் முக்கியமாகும். லக்னம் லக்னாதிபதி வலுவாக இருந்தால் ஜாதகரின் சிந்திக்கும் திறன் சிறப்பாக இருக்கும். தன்னுடைய திறமையான செயல் பாட்டால் தனது வாழ்வாதாரத்தை அதிகரிக்கக் கூடிய மனோபலன் உருவாகும். ஒருவரின் விதியில் அவரின் வாழ்வாதாரம் எதைச் சார்ந்து இருக்கும் அவர் என்ன சம்பாதிப்பார் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும். லக்னம் லக்னாதிபதி வலிமை படைத்தவர்கள் விதியை மதியால் வெல்லக்கூடிய வல்லமை படைத்தவர்கள். லக்னம் லக்னா திபதி சுப வலிமை பெற்றவர்கள் விதியை தங்கள் வசப்படுத்தி வருமானத்தை உயர்த்துவார்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் வெற்றி வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.

    தன ஸ்தானம்

    லக்ன பாவத்திற்கு அடுத்தபடியாக தன ஸ்தானம் மிக முக்கியம். ஒரு ஜாதகத்தில் இரண்டாம் இடமான தன ஸ்தானமே ஒருவரின் தனவரவை நிர்ணயிக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் தன ஸ்தானஅதிபதி ஆட்சி உச்சம் பெற்றால் பணமழை பொழிந்து கொண்டே இருக்கும். தனத்தை பெருக்குவது பற்றியும், தன் குடும்பத்தை காப்பது பற்றியும் சிந்தனை மிகைப்படுத்தலாக இருக்கும். பேச்சுத் திறமையால் வருமானம் ஈட்டும் காரியவாதிகள். பேச்சுத் தொழிலை மூலதனமாக கொண்டவர்கள். பல வழிகளில் வருமானம் ஈட்டும் தந்திரவாதிகள்.

    இரண்டாம் இடத்துடன் சந்திரன் சம்பந்தம் பெற்றால் அன்றாடம் பணம் கொழிக்கக்கூடிய தொழிலில், உத்தியோகத்தில் இருப்பார்கள். தன ஸ்தானத்திற்கு சூரியன், சுக்ரன் செவ்வாய், புதன் எனப்படும் மாத கிரகங்கள் சம்பந்தம் இருந்தால் மாதம் ஒரு முறை வருமானம் தரக்கூடிய தொழில். உத்தியோகம் மூலம் சம்பாதிப்பார்கள். இந்த ஸ்தானத்திற்கு குரு சனி போன்ற வருட கிரகங்கள் தொடர்பு பெற்றால் வரக்கூடிய வருமானம் குறைந்தது லட்சத்திலும் அதிகபட்சம் கோடியிலும் இருக்கும். அவரவரின் பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பொறுத்து லட்சம் அல்லது கோடியை தொடக்கூடிய வகையில் வருமானம் குவியும். இந்த பாவகத்தில் இயற்கை வக்ர கிரகங்களான ராகு கேதுவோ அல்லது வக்ர, நீச்ச கிரகங்களோ நின்றால் வருமானம் ஏற்ற இறக்கமாக இருக்கும். அவர்களின் வருமானத்தை உறுதி செய்ய முடியாது. இந்த இடம் வலிமையாக இருந்தால், ஒருவருக்கு லட்சம் சம்பாதிக்கும் வாய்ப்பு அதிகம். பூர்வ புண்ணிய ஸ்தானம்.

    சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பது பழமொழி. ஒருவர் குறிப்பிட்ட வருமானம் பெற வேண்டும் என்று விதி அவருடைய ஜாதகத்தில் இருந்தால் மட்டுமே அதை நடைமுறைப்படுத்த முடியும். இதை மேலும் புரியும் படி கூறினால் ஒரு நாளில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஜனனம் நிகழ்கிறது. ஒரே நேரத்தில் பிறந்த அனைவரின் வாழ்க்கையும் ஒன்று போல் இருக்காது. இது அவரவரின்

    தாத்தா பாட்டி முன்னோர்கள் பெற்றோர்கள், ஜாதகர் செய்த பாவ புண்ணிய செயல்களுக்கு ஏற்பவே இருக்கும். கடந்து வந்த ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே இந்த ஜென்மம் இருக்கும். ஒருவர் செல்வ செழிப்பான பெற்றோருக்கு பிறந்து அனைத்து விதமான யோகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற அமைப்பு இருந்தால் அதை கடவுளே நினைத்தால் கூட மாற்றி அமைக்க முடியாது.

    பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பதிவாகாத ஒரு சம்பவம் இந்த ஜென்மத்தில் நடக்காது. கடந்த ஜென்மத்தில் ஒருவர் புண்ணிய பலன்கள் அதிகம் சேர்த்து வைத்திருந்தால் இந்த ஜென்மத்தில் பொருளாதார சிரமம் கடன், வறுமை இருக்காது. நல்ல வீடு வாகன யோகம் உண்டு. பெற்றோர்களின் அன்பும் ஆசிர்வாதமும் நிரம்பி இருக்கும். எத்தகைய சூழ்நிலையிலும் பிறரை எதிர்பாராமல் தனது மற்றும் தன்னை சார்ந்தவர்களின் தேவையை நிறைவு செய்யும் வலிமை பெற்றவர்கள். நிலையான நிரந்தரமான வருமானம் தரக்கூடிய தொழில் உத்தியோகம் உண்டு. தொட்டது துலங்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஜாதகரைத் தேடி வந்து கொண்டே இருக்கும்.

    குல தெய்வ அருள் கடாட்சம், தெய்வ அனுகிரகம் நிரம்ப பெற்றவர்கள். கவுரவப் பதவி, பூர்வீகச் சொத்தால் ஆதாயம், நிச்சயம் உண்டு. ஜாதகர் புத்திசாதுர்யம் நிரம்பியவராக இருப்பார். மேலே கூறிய இவற்றில் சில குறைபாடு வரும் போது வாழ்க்கை பாதையில் தடுமாற்றம் ஏற்படுகிறது. அதிர்ஷ்டம் மற்றும் புண்ணிய பலம் குறைந்து பொருள் வரவில் தடை ஏற்படுகிறது.

    11-ம் பாவகம்

    பணத்திற்காக ஒருவர் வேலை செய்தால் அவர்களுக்கு 2 அல்லது 5ம் பாவகம் மிக வலிமையாக உள்ளது என்று புரிந்து கொள்ளலாம். அதிர்ஷ்டத்தை நம்பி வாழ்பவர்களுக்கும் பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் அதாவது திடீரென அதிக பணம் வருவது அல்லது மிகப் பெரிய பணத்தை வாழ்வாதாரத்தை பாதிக்க கூடிய இழப்பு இருந்தால் எட்டாம் பாவகம் வேலை செய்கிறது என்று பொருள். பணம் யாருக்கெல்லாம் வேலை செய்கிறதோ அவர்கள் ஜாதகத்தில் 11-ம் அதிபதி மிகச் சுபத்துவத்துடன் இயங்கும். உலகில் உள்ள அனைத்து விதமான தொழிலையும் முயற்சி செய்வார்கள். புதிய புதிய தொழிலை, தொழில் யுக்தியை கண்டுபிடிப்பார்கள். பல தொழில் வித்தகர்கள். குறைந்தது 100 பேரை வைத்து வேலை செய்பவர்களுக்கு ஜாதகத்தில் 11-ம்மிடம் சாதகமாக இருக்கும்.

    உப ஜெய ஸ்தானமான 11-ம் பாவகத்தின் முலம் பல்வேறு வகையில் தனபிராப்தி, சொத்து சேருதல், எதிர்பாராத அசுர வளர்ச்சி, திடீர்யோகம், உழைப்பில்லாத செல்வம், உயில் சொத்து, பினாமி பணம், சொத்து பல வகையில் வருவாய், லாபம் போன்றவை ஏற்படும். தேவைக்கு அதிகமாக பணம் பொன், பொருள் உள்ளவர்கள் ஜாதகத்தில் 11-ம் மிடமான லாப ஸ்தானம் வலிமையாக இயங்கும். ஒரு சிலர் குறுகிய காலத்தில் பணம், புகழ், அந்தஸ்து பெறுவது 11-ம் அதிபதியின் தசை புக்தி காலங்களில் மட்டுமே என்றால் அது மிகையாகாது.

    பதினொன்றாம் அதிபதி மற்றும் 11-ல் நின்ற கிரகம் பலம் பெற்றால் ஜாதகர் அதிர்ஷ்டப்பிறவி. கூட்டுக் குடும்பத்தில் சித்தப்பா, மூத்த சகோதரருடன் வசதியான கூட்டுக் குடும்பத்தில் பிறந்து வாழ்வார்கள். அவர்களால் லாபமும், அதிர்ஷ்டமும் உண்டாகும். கோடீஸ்வர யோகம், சமுதாய அந்தஸ்து, அரசியல் ஆர்வம், அதிகாரம், கவுரவம் உண்டு. தொட்டதெல்லாம் பொன்னாகும். கூட்டுத் தொழிலில் வெற்றி தரும். அதிகமான ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் இருக்கும். குடும்பம் அமைந்த பிறகு பண வரவு அதிகமாகும். ஜாதகருக்கு பணம் சார்ந்த விஷயங்கள் அனைத்தும் லாபம் தரும். சிறுவயதிலேயே வருமானம் ஈட்டத் துவங்குவார்கள். வங்கித் தொழில், வட்டித் தொழில், பைனான்ஸ், சீட்டு பிடித்தல் போன்றவற்றில் நல்ல ஆதாயம் உண்டு. குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து கூட்டுத் தொழில் நடத்துவார்கள். சுருக்கமாக கவுரவத் தொழில் உண்டு. இந்த ஸ்தானத்தில் நிற்கும் கிரகங்களால் தீமைகள் ஏற்படாது.

    10-ம்மிடமான தொழில் ஸ்தானத்திற்கு 2-ம்மிடம் 11-ம்மிடமான லாப ஸ்தானம். 2-ம் பாவத்திற்கு 10-ம் பாவகமே 11-ம்மிடமான லாப ஸ்தானம். 5-ம் பாவகத்திற்கு 7-ம்மிடமே 11-ம்மிடமான லாப ஸ்தானம். 5-க்கு சம சப்தமம் 11-ம்மிடமான லாப ஸ்தானம். 5-ல் நிற்கும் அனைத்து கிரகங்களுமே 11-ம்மிடமான லாப ஸ்தானத்தை பார்க்கும். 11-ல் நிற்கும் கிரகம் 5-ம்மிடத்துடன் சம்பந்தம் பெறும். இதை மேலும் உங்களுக்கு புரியும்படி கூறினால் ஒருவர் அதிர்ஷ்டம் மற்றும் தொழிலில் அதிகம் சம்பாதித்தால் 5,11-பாவக சம்பந்தம் உள்ளது எனப் பொருள்.

    சனிபகவான்

    ஒரு ஜாதகத்தில் எத்தனையோ யோகமான அமைப்புகள் இருந்தாலும் சனி பகவானின் தயவு ஜாதகருக்கு வேண்டும். ஒருவரின் தொழில் உத்தியோகத்தை நிர்ணயம் செய்யும் சனி பகவான் கொடுக்கும் இடத்தில் இருந்தால் ஜாதகம் வாழ்வாதாரம் உயரும். குறைந்தபட்ச மாத வருமானம் ஒரு லட்ச ரூபாயாக இருக்கும். சனி பகவானின் நிலைப்பாடு சரியாக இல்லை என்றால் ஜாதகரால் ஒரு ரூபாய் கூட சம்பாதிக்க முடியாது. ஒருவரின் தகுதி தராதரத்தை நிர்ணயம் செய்பவர் சனி பகவானே. தகுதி வாய்ந்த ஒருவரின் வாழ்க்கையை குன்றின் மேல் ஏற்றிய விளக்கமாக பிரகாசிக்கச் செய்வார். தகுதி இல்லாதவரின் வாழ்க்கை குடத்திற்குள் எரியும் விளக்கமாக இருக்கும்.

    ஒருவரின் வளமான வாழ்க்கைக்கு பணம் மிக முக்கிய காரணியாகும். லவுகீக வாழ்வில் உள்ள அனைத்து தேவைகளையும் நிறைவு செய்து கொள்ள மனிதனால் படைக்கப்பட்ட பணம் தற்போது மனிதனை ஆள்கிறது. உளவியல் ரீதியாக லட்சத்தில் வருமானம் என்ற விசயத்தை உற்று நோக்கினால் ஒரு உண்மை அனைவருக்கும் புலப்படும். யாரெல்லாம் பணத்திற்காக வேலை செய்கிறார்களோ அவர்கள் வாழ்நாள் முழுவதும் பணத்திற்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். யாருக்கெல்லாம் பணம் வேலை செய்கிறதோ அவர்கள் பணத்தை எளிமையாக ஏவல் செய்யும் சூட்சும வலிமை படைத்தவர்கள். அதாவது ஒருவருக்கு பணம் வேலை செய்தால் அவருக்கு பணம் அடிமை. ஒருவர் பணம் சம்பாதிக்க வேலை செய்தால் பணத்திற்கு அவர் அடிமை. பணத்தை அடிமையாக்க தெரியாதவர்களுக்கு லட்ச ரூபாய் சம்பாதிப்பது சாத்தியமல்ல. பணத்தை ஆளத் தெரிந்தவர்கள் நிச்சயம் லட்சத்தில் சம்பாதிப்பார்கள்.

    செல்: 98652 20406

    Next Story
    ×