என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

அது அல்லவோ தானம்!
- கர்ணனிடம் தன் வள்ளல் தன்மை காரணமாக எந்த கர்வமும் இல்லை.
- கீரியிடமே கேட்போம் என முடிவு செய்த தர்மபுத்திரர் அதைக் கனிவோடு பார்த்துப் பேசலானார்:
நிறைவடைந்தது பாண்டவர்கள் நிகழ்த்திய ராஜசூய யாகம். அப்படியொரு யாகத்தை உலகம் அதுவரை பார்த்ததுமில்லை. கேட்டதுமில்லை. மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற யாகம் அது. அதில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை எண்ணி மாளாது.
அப்புறம் முக்கியமாக வேள்விக்கு வந்து தானம் பெற்றுச் சென்றவர்கள்.
கேட்டவர்க்கெல்லாம் கேட்டதையெல்லாம் அள்ளிக் கொடுத்தார் தர்மபுத்திரர். வரிசை வரிசையாக வந்து நின்று அணியும் மணியும் பொன்னும் பொருளும் பெற்றுச் சென்றவர்கள் ஏராளம். ஏராளம்.
அந்த வேள்வியில் தான் நிகழ்த்திய தான தர்மங்கள் பற்றிய பெருமிதத்தோடு அமர்ந்திருந்தார் தர்மபுத்திரர். அருகே அதே பெருமிதத்தோடு பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் நால்வரும் அமர்ந்திருந்தார்கள்.
அவர்களின் நண்பனும் உறவினனும் கடவுளுமான கண்ணன் புல்லாங்குழலோடு ஒரு சிம்மாசனத்தில் புன்னகை பூத்த முகத்துடன் அமர்ந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
மற்றவர் மனத்தை முகத்தைப் பார்த்தே படிக்கும் ஆற்றல் பெற்ற மாயக் கண்ணன் பாண்டவர்கள் மனத்தில் ஓடும் எண்ண அலைகளை உணராமல் இருப்பானா? கண்ணன் முகத்தில் ஒரு மெல்லிய சிரிப்பு மலர்ந்து மறைந்தது.
கொஞ்சம் கர்வத்தின் ரேகை பாண்டவர் அனைவர் முகத்திலும் படர்ந்திருக்கிறதே!
அதில் பெரிய தவறொன்றும் இல்லைதான். நல்ல விஷயத்தைப் பற்றி ஒருதுளி கர்வம் மனத்தில் தோன்றினால் அதைப் பெரிய குறையென்று சொல்ல முடியாது. நல்லதைச் செய்ததற்காகத் தோன்றும் கர்வம்தானே அது! அர்ச்சுனன் பீமன் நகுலன் சகாதேவன் வரையில் அது பெரிய குறையில்லை என்பது சரி.
திருப்பூர் கிருஷ்ணன்
ஆனால் உத்தமர்கலெல்லாம் தேடினாலும் கிடைக்காத மிக உயர்ந்த உத்தமரான தர்மபுத்திரர் மனத்திலும் கர்வமா? இது ஏற்கும்படியாக இல்லையே?
அவரின் உயர்ந்த குணங்களின் காரணமாக அவர் ஏறும் தேர், பூமியிலேயே படாமல் தரைக்கு மேலேயே அந்தரத்தில் ஓடும் என்கிறார்கள். அவ்வளவு உத்தமரின் மனத்தில் கர்வம் என்ற நச்சுக் கிருமி நுழைந்தது எப்படி?
இவர் தான் செய்த தான தர்மத்தைப் பற்றி கர்வம் கொள்கிறாரே? கெளரவர் அணியில் உள்ள கர்ணன் செய்யும் தான தர்மங்களின் கால் தூசுக்கு இவை ஈடாகுமா? அள்ளி அள்ளி அல்லவா கொடுக்கிறான் கர்ண வள்ளல்?
நாடெங்கும் அவன் கொடைக் குணத்தைப் புகழாதவர்கள் இல்லை. ஆனாலும் கர்ணனிடம் தன் வள்ளல் தன்மை காரணமாக எந்த கர்வமும் இல்லை.
என்ன செய்வது? அப்பேர்ப்பட்ட வள்ளலான மாவீரன் கர்ணன் எதிர் அணியில் இருக்கிறானே? எதிர்காலத்தில் ஏற்படப் போகும் போரில் கர்ணனை வெல்வதுதான் கடினமாக இருக்கும்.
இப்படிப்பட்ட சிந்தனைகள் கண்ணன் மனத்தில் ஓடின. ஒரு பெருமூச்சு புறப்பட்டது கண்ணனிடமிருந்து.
கண்ணன் தங்களையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்த தர்மபுத்திரர் `என்ன கண்ணா பார்க்கிறாய்?` என்று கேட்டார்.
தர்மபுத்திரர் மனத்தில் எழும் கர்வ உணர்வை நீக்க வேண்டும் என முடிவு செய்த கண்ணன் நகைத்தான். `நான் உங்களை எங்கே பார்த்தேன்? கீழே தரையை அல்லவா பார்த்தேன்?` என்று சொல்லிச் சிரித்தான்.
கண்ணன் பார்வை சென்ற இடம் நோக்கி பஞ்ச பாண்டவர் அனைவரின் பார்வையும் போயிற்று...
அங்கே திடீரென வந்து நின்றது ஒரு கீரிப் பிள்ளை. எங்கிருந்து வந்தது இது? இவ்வளவு நேரம் இதுபோன்ற ஒரு பிராணியை இந்தக் கூடத்தில் எங்கும் பார்க்கவில்லையே?
பாண்டவர்கள் வியப்போடு அந்தக் கீரிப் பிள்ளையைப் பார்த்தார்கள். காரணம் அதன் பாதி உடல் வழக்கமான கீரிக்கு உள்ளதைப் போல்தான் இருந்தது. ஆனால் மீதிப் பாதி உடல் தங்க நிறத்தில் பளபளவென மின்னியது.
குந்தியின் ஐந்து பிள்ளைகளையும் பார்த்துக் கலகலவென ஏளனமாய்ச் சிரித்தது கீரிப் பிள்ளை.
தர்மபுத்திரர் திகைத்தார். ஒரு மன்னனைப் பார்த்து ஏளனமாக நகைக்கிறதே இது? இந்த நகைப்பின் பின்னணி என்ன?
அதன் பாதி உடலின் பொன்னிறம் வியப்பளிக்கிறதே? உலகில் இப்படி ஒரு விந்தையான கீரியை யாரும் பார்த்திருக்க முடியாது. அந்தத் தங்க நிறம் அதற்கு எப்படி வந்தது?
கீரியிடமே கேட்போம் என முடிவு செய்த தர்மபுத்திரர் அதைக் கனிவோடு பார்த்துப் பேசலானார்:
`கீரியே! நீ சிரித்தது எங்களுக்கு வியப்பளிக்கிறது என்றால் உன் மேனியில் பாதிப்பகுதி தங்க நிறத்தில் மின்னுவது அதைவிட அதிக வியப்பைத் தருகிறது. நீ சிரித்த காரணம் என்ன? உன் தங்க நிறம் உனக்கு எப்படி வந்தது? நாங்கள் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம். கொஞ்சம் சொல்லேன்!`
தர்மபுத்திரரின் கேள்விகளுக்கு பதில்சொல்லும் எண்ணத்தில் கீரிப் பிள்ளை நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு ஒரூ கனைப்புக் கனைத்த பின்னர் கணீரென்ற குரலில் பேசத் தொடங்கியது. பஞ்ச பாண்டவர்களோடு எல்லாம் தெரிந்த கண்ணனும் எதுவுமே தெரியாததுபோல் கீரியின் பேச்சைக் கேட்கலானான்.
`மன்னனே! என்ன பெரிய தானம் செய்துவிட்டாய் நீ? இருப்பதில் கொடுப்பது தானமா? யோசித்துப் பார். இருப்பதையே கொடுப்பதல்லவா தானம்?
முன்பு சக்துப்ரஸ்தர் என்றொரு முனிவர் இருந்தார். வறுமையில் வாடிய ஏழை முனிவர். மனைவியோடும் மகனோடும் மருமகளோடும் ஒரு குடிசையில் வசித்து வந்தார்.
அவர்கள் அனைவருமே பலநாள் பட்டினி. அவர்கள் வீட்டில் அடிக்கடி இப்படி எதிர்பாராத நிர்பந்த ஏகாதசிகள் வரும். அதைப் பற்றிப் பொருட்படுத்தாமல் தண்ணீரைக் குடித்து சமாளித்து விடுவார்கள்.
ஆனால் அதென்னவோ சோதனைபோல் இப்போது கொஞ்ச நாளாய் அவர்கள் உண்பதற்கு ஒன்றுமே கிடைக்கவில்லை.
அதன்பின் பலநாட்களுக்குப் பிறகு ஒருநாள் மிகக் குறைவாக அந்த முனிவருக்குக் கொஞ்சம் உணவு கிடைத்தது. அந்த உணவையேனும் அந்தக் குடும்பத்தினர் உண்ணவில்லையென்றால் பட்டினியால் அவர்கள் சாக வேண்டியதுதான். அவ்வளவு பசி அவர்களுக்கு.
கிடைத்த உணவை குடும்பத்தில் இருந்த நால்வரும் சமமாகப் பகிர்ந்துண்ண எண்ணி ஒன்றாக அமர்ந்தார்கள். சமமாகப் பிரித்தும் விட்டார்கள்.
அப்போது வாயிலில் வந்து நின்றான் பசியால் தவித்த ஒருவன். அவனது ஒட்டிய வயிறும் குழிவிழுந்த கண்களும் அவனும் பலநாள் பட்டினி என்பதை உணர்ந்தின. எனக்கு ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா என வாய்விட்டுக் கேட்டான் அவன்.
என்ன இக்கட்டு! என்ன செய்வது இப்போது? கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகிறதே?
முனிவர் யோசித்தார். தான் பட்டினியால் இறந்தாலும் பரவாயில்லை. வந்தவன் முதலில் பசியாறட்டும். அதுவே இப்போது முக்கியம்.
முனிவர் தன் பங்கு உணவை அன்போடு அவனுக்களித்தார். பலநாள் பட்டினிக்காரன். அதைச் சாப்பிட்டும் அவன் பசி தீரவில்லை.
முனிவர் ஏதொன்றும் பேசாமல் அமைதியாக இருந்தார். முனிவரின் மனைவி யோசித்தாள். பின் தானே முன்வந்து தன் பங்கு உணவையும் அவனுக்கு அளித்தாள். அதைச் சாப்பிட்டும் அவன் பசி முழுமையாக அடங்கவில்லை.
பின்னர் முனிவரின் மனைவியைப் பின்பற்றி, அடுத்தடுத்து முனிவரின் மகனும் அதன்பின் மருமகளும் தங்கள் பங்கு உணவையும் மகிழ்ச்சியோடு அவனுக்குக் கொடுத்துவிட்டார்கள். பசியாறியபின் விருந்தினன் முகத்தில் தென்பட்ட மலர்ச்சியைக் கண்டு அவர்கள் களிப்படைந்தார்கள்.
இந்தக் குடும்பத்தினர் தங்களிடம் இருந்த அனைத்தையும் அப்படியே தானம் செய்துவிட்டார்களே! தங்களுக்குக் கொஞ்சமேனும் வேண்டும் என்று அவர்கள் கருதவில்லையே!
அந்தக் குடிசையில் ஒரு பொந்தில் வாழ்ந்துவந்த நான், வியப்புடன் அந்த அரிய காட்சியைப் பார்த்தவாறிருந்தேன்.
வந்து நின்ற விருந்தாளி மறுகணம் மகாவிஷ்ணுவாய் மாறியதைப் பார்த்தேன். அவர்களின் விருந்தோம்பல் நெறியையும் உயிர்போகும் வேளையிலும் தானம் செய்யத் தயங்காத ஈகைக் குணத்தையும் பாராட்டினார் திருமால்.`
கீரிப்பிள்ளை பேசும் பேச்சை எல்லோரும் ஆவலோடு கேட்டுக் கொண்டிருந்தார்கள். திருமால் என்று கீரி குறிப்பிடுவது தன்னைத்தான் என்பதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் கண்ணனும் அதைக் கேட்டவாறிருந்தான். கீரி தன் பேச்சைத் தொடர்ந்தது:
`அப்புறம் என்ன நடந்தது தெரியுமா? அடுத்த கணம் புஷ்பக விமானம் குடிலின் வாயிலுக்கு வந்தது. அந்தக் குடும்பத்தினர் அனைவரையும் அந்த விமானம் சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றதைக் கண்டேன் நான்.
பரவசத்தில் தத்தளித்த நான் அந்தப் புனிதக் குடிசை மண்ணில் விழுந்து புரண்டேன். என்ன ஆச்சரியம்! என் மேனியின் ஒரு பாதி தங்கமாயிற்று. இப்போது எல்லாக் கீரிப் பிள்ளைகளும் என்னை மிகுந்த மதிப்போடு பார்க்கின்றன.
அந்த நிகழ்வுக்குப் பின் எங்கெங்கே தானதர்மங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் சென்று விழுந்து புரண்டு பார்க்கிறேன். என் உடலின் இன்னொரு பாதியையும் தங்கமாக்க வேண்டும் என்ற ஆசைதான் காரணம்.
ஆனால் மன்னனே! என் ஆசை இதுவரை நிறைவேறவே இல்லை. நீ நிறைய தானதர்மங்கள் செய்தாய் என மக்கள் பேசிக் கொண்டார்கள். அதைக் கேட்டு ஆவலோடு இங்கும் வந்து புரண்டு பார்த்தேன். ஆனால் எனக்கு இங்கும் ஏமாற்றம்தான்!`
கீரியின் பேச்சைக் கேட்ட தர்மபுத்திரர் அளவற்ற வியப்படைந்தார். கீரியின் விழிகளைச் சற்று உற்றுப் பார்த்தார். அந்த விழிகளில் கண்ணன் விழிகளின் சாயல் தெரிவதுபோல் தோன்றியது. எல்லா உயிர்களிலும் இருக்கும் பரம்பொருள் கீரியின் விழிகளில் மட்டும் தென்பட மாட்டானா என்ன?
அடுத்த கணம் கண்ணனை ஒரு சுற்றுச் சுற்றிக்கொண்டே கீரிப்பிள்ளை வாயிலைத் தாண்டி வெளியே ஓடியது.
தானம் செய்த அந்தக் குடும்பத்தினரை மனத்தால் நினைத்து இருகரம் கூப்பி வணங்கினார் தர்மபுத்திரர். தானே பெரிய வள்ளல் என்ற அவர் கர்வம் அன்று ஒடுங்கியது. தன் பக்தன் மனம் மேம்பட்டதைக் கண்டு மகிழ்ந்தது கண்ணன் மனம்...
தொடர்புக்கு: thiruppurkrishnan@gmail.com






