என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    உசுரே நீ தானே! அத்தியாயம்-25
    X

    உசுரே நீ தானே! அத்தியாயம்-25

    • மேரி அழுகையுடன் அப்படியே சாய்ந்து ஒரு பாறையில் அமர்ந்தாள்.
    • ராஜேஷ் தைரியமாய் நிற்க, டேவிட் ‘டிரிக்’கரில் விரல் வைக்க, அழகர் உள்பட மொத்த போலீஸ் டீமும் பதறியது.

    அழுதபடியே தொடர்ந்து பேசினாள் மேரி... "உங்கள காப்பாத்தணும்னு தனி ஆளா போலீஸ் ஸ்டேஷனுக்கு, வந்தேன். வந்து பார்த்தா உங்களை மிரட்டி கார்ல ஏத்தி.. ராஜேஷோட ஆளுங்க எங்கேயோ கொண்டு போக போறாங்கன்னு யூகிச்சு யாருக்கும் தெரியாம டிக்கியில ஏறி... இவ்ளோ தூரம் மூச்சுவிட முடியாம சிரமப்பட்டு நீங்க வந்த கார்லதான் நானும் வந்தேன்.. கடைசியில பார்த்தா எல்லாத்துக்கும் காரணம் என் அப்பான்னு நெனைக்கிறப்போ நெஞ்சுக்குழில நெருப்ப வெச்ச மாதிரி இருக்குப்பா…" தலையில அடித்தபடி மேரி அழ, தேவசகாயம் மவுனமாய் நின்று கொண்டிருந்தான்.

    டேவிட்டின் துப்பாக்கி முனை எப்போது அழுத்தப்படுமோ என்ற பயத்தில், ராஜேஷ் மற்றும் அவன்கூட வந்தவர்கள் வெலவெலத்து போய் நின்று கொண்டு இருந்தனர்.

    மேரி அழுகையுடன் அப்படியே சாய்ந்து ஒரு பாறையில் அமர்ந்தாள். இப்போது பெருமாள் வெடித்தான்.

    "தேவசகாயம்.. நானும் கட்சியில் இருக்கிறதால, எங்கட்சிக்கு பிடிக்காதேன்னு, என் தங்கச்சி திவ்யா வேற மதத்துகாரனை காதலிக்கிறான்னு தெரிஞ்சதும் எதிர்ப்பு தெரிவிச்சேன், அவங்க கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு தடுக்க ரொம்ப முயற்சி பண்ணேன். இன்னும் சொல்லப் போனா அவங்க கல்யாணத்தை நிறுத்த நான் முயற்சி பண்ணதுதான் இந்த கதையோட ஆரம்ப அத்தியாயமே. ஆனா- பாருங்க.. ஆரம்பத்துல இருந்து எதிர்த்த நான், டேவிட்டும், திவ்யாவும் கல்யாணம் பண்ணிகிட்டாங்கன்னு தெரிஞ்சதும், ஒதுங்கிட்டேனே தவிர இப்படி உங்கள மாதிரி திட்டம் போடல. உங்க வயசுக்கு நீங்க மத்தவங்களை வாழ்த்தணும். இப்படி வாழவேண்டியவங்க வாழக்கையில வீணா விளையாடி, உங்க மானத்தை மட்டுமல்ல...மரியாதையையும் இழந்து நிக்குறீங்க. சே.. உங்களை பார்க்கவே அருவருப்பா இருக்குது சார்..!" பெருமாள் முகம் சுழித்து, வெறுப்பை உமிழ்ந்தான்.

    டேவிட்டின் நண்பர்கள் நெல்சன் முன் வந்து, "அப்பான்னுதான் உங்களை கூப்பிடுவோம். அதுக்கு காரணம், நீங்க டேவிட்டோட அப்பா அப்படிங்கிறதால மட்டுமல்ல. உங்க வயசுக்கு நாங்க குடுத்த மரியாதைதான் இது. நானும் கிறிஸ்டியன்தான் சார். ஆனா, உங்களுடைய மதவெறி ஆபத்தான, அசிங்கமான ஒரு குணம். இதே டேவிட் இடத்துல நான் இருந்தா எடுக்கிற முடிவு வேற மாதிரி இருந்திருக்கும்.."

    அவன் சொல்லி முடிக்கவும் ராஜேஷ் கத்தினான். "என்னடா.. ஆளு ஆளுக்கு இதான் சமயம்னு அந்தாளை பிடிச்சு உலுக்குறீங்க.. ஆமாய்யா அந்த தேவசகாயம் என்கூட சேர்ந்து திட்டமிட்டு, இந்த தில்லாலங்கடி வேலை செஞ்சது தப்புதான்! அதுக்கு என்ன பண்ண போறீங்க.. எங்க தைரியம் இருந்தா.. அந்த டேவிட் கையில துப்பாக்கி இருக்குல்ல.. டொப்பு டொப்புனு என்னையும், அந்த தேவசகாயத்தையும் சுடச்சொல்லுங்களேன்.."

    பெருமாள் டேவிட்டை பார்க்க, டேவிட் ராஜேஷை முறைத்தான்.

    "என்னயா டேவிட் முறைக்கிற. நியாயப்படி பார்த்தா உன் பொண்டாட்டிய நான் கடத்தி இருக்கேன், அது என்னவோ சொல்வாங்களே என்ன அது..?" யோசித்த ராஜேஷ், நினைவுக்கு வந்தவனாய் தொடர்ந்தான்.

    "ஆங்.. நீ தொட்டு தாலி கட்டின, உன் பொண்டாட்டி தாலிய, கட் பண்ணி பார்சல் அனுப்பினவன் நான். கொச்சையா சொல்லனும்னா தாலிய அறுத்து எரிஞ்சவன் நான். நியாயப்படி பார்த்தா நான்தான் முதல் குற்றவாளி. உங்க அப்பா ரெண்டாவது குற்றவாளி. புரியுதா..?" - எகத்தாளமாய் ராஜேஷ் பேசினான்.

    டேவிட்டின் கண்கள் சிவந்தது. ராஜேஷ் தொடர்ந்தான்.

    "அதனால… நீ ஆம்பளையா இருந்தா என்னை ஒரு புல்லட்டால சோலிய முடுச்சுட்டு, இன்னொரு புல்லட்டால உன் அப்பனையும் முடுச்சுடு. கோர்ட்ல கேட்டா யாரோ சொன்னாங்களே.. அது மாதிரி தற்காப்புக்கு சுட்டேன்னு சொல்லிக்கோ… சுடு… சுடு… சுடு… சுடுமா..!"தன் சட்டைப்பட்டனை திறந்து மார்பை காட்டினான் ராஜேஷ்.

    இயக்குநர் A. ெவங்கடேஷ்

    டேவிட்டின் ரத்தம் சூடேறியது. துப்பாக்கியை அவன் நெஞ்சுக்கு நேராக நீட்டினான். - திவ்யா திகைத்து போய் பார்க்க.. டேவிட்டின் நண்பன் தியாகு கத்தினான்.

    "சுடுறா.. மாப்பிள்ளை இவன் எல்லாம் பூமிக்கு பாரம்தான்.."

    ராஜேஷ் தைரியமாய் நிற்க, டேவிட் 'டிரிக்'கரில் விரல் வைக்க, அழகர் உள்பட மொத்த போலீஸ் டீமும் பதறியது.

    "சுடுறா.. மாப்ளே.." - செந்தில் குரல் கொடுத்தான்.

    இப்போது, ட்ரிக்கரை அழுத்தப்போன டேவிட், துப்பாக்கியை கீழ் இறக்க, எல்லோரும் அவனையே பார்க்க, டேவிட் பேசினான்.

    "நான் எப்பவுமே தப்பு செய்ற மனிதர்களை மன்னிக்கணும்னு நெனைக்கிறவன். காரணம் - பயம் இல்ல பக்குவம். அவங்க அவங்களுக்கு ஒரு நியாயம், ஒரு காரணம் அவங்க பண்ற செயலுக்கு வச்சிருப்பாங்க. அது தப்புன்னு அவங்க உணரனும்னா, அவங்களுக்கு தண்டணை தர்றதை விட மன்னிக்கிறது தான் சரி..!" சொன்ன டேவிட் தொடர்ந்தான்.

    "ராஜேஷ் விளையாட்டுல கூட சில சமயம் இந்த விளையாட்ட விளையாட வேண்டாம்னு முடிவு எடுக்கணும். தப்பா விளையாடி தோற்கறதை விட, விளையாடாம இருக்கிறது கூட ஒரு வகையில் வெற்றிதான்..!" டேவிட் சொல்லி முடிக்கவும், அவன் கையில் இருந்த, ரிவால்வர் பறிக்கப்பட்டு, ராஜேஷ் மார்பின் மீது 'படபட' வென்று குண்டுகள் பாய, ராஜேஷ் சரிந்து விழுந்தான்.

    ஒரு கணம் 'என்ன நடந்தது' என அனைவரும் யூகிக்கும் போதுதான் தெரிந்தது ராஜேஷை சுட்டு விட்டு, குண்டுகள் தீர்ந்து துப்பாக்கியுடன் தேவசகாயம் நின்றுகொண்டு இருந்தார்.

    "அவசரப்பட்டுடீங்களே அப்பா.." டேவிட் அழும் குரலில் சொன்னான். "இல்லே டேவிட்.. இப்பதான் நிதானமா செயல்பட்டு இருக்கேன். மதம் என்னை மனுஷனா நடக்க விடலை… உன் கல்யாணம் எனக்கு பிடிக்கலேன்னா நான் ஒதுங்கி போயிருக்கணும்.. இப்படி தரம் தாழ்ந்து இந்த ராஜேஷ் கூட சேர்ந்து செயல்பட்டு இருக்க கூடாது. என்ன நீயும், திவ்யாவும் மன்னிச்சுடுங்க.. கண்ணீர் மல்க, தன் உதடு வெடிக்க பேசினார் தேவசகாயம்.

    ஏதோ சொல்ல, டேவிட் வாயை திறக்க முயல, அவன் வாயை பொத்தி, "எதுவும் சொல்லாத டேவிட்.. நான் வாழத்தகுதி இல்லாத ஒரு ஆளு.." - சொன்னவர், அடுத்த கணம் யாரும் எதிர்பார்க்காமல், அந்த காட்டு பகுதியில் இருந்து இறங்கி, ரோடு நோக்கி ஓடினார். என்ன? ஏது? என்று உணரும் முன் ரோட்டில் படுவேகமாய் வந்த லாரியின் குறுக்கே பாய்ந்தார். 'ஐயோ' என்ற ஒட்டுமொத்த பேரின் கூக்குரல் காடு எங்கும் ஒலிக்க, உடல் சிதறி உருக்குலைந்தார் தேவசகாயம்.

    அதே நேரம்! டேவிட் நண்பர்கள் கொடுத்த தகவல்படி போலீஸ் படைகள் வேனில் வந்து இறங்கவும் சரியாய் இருந்தது.

    ஆயிற்று! ஒரு வருஷம் ஓடிப்போனது!

    எல்லாம் முடிந்து, தேவசகாயம் மாலையுடன் போட்டோவாய் தூங்கிக் கொண்டிருந்தார். நடந்த சம்பவங்களை எல்லோரும் மறந்து அவர் அவர் வேலைகளில் ஈடுபட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். போலீஸ், கோர்ட் என விசாரித்து ராஜேஷின் கூட்டாளிகள் ஜெயில் தண்டனை பெற்றுவர, அழகர் தற்காலிக பணி நீக்கத்தில் இருந்தார். வழக்கு போய் கொண்டிருக்கிறது.

    அதே குறுக்குத்துறை முருகன் கோவில்.

    சாமி கும்பிட்டுவிட்டு வெளிப்பிரகாரத்தில் அமர்ந்திருந்தனர் திவ்யாவும், டேவிட்டும். இருவரும் இப்போது இருவேறு கம்பெனிகளில் வேலைகிடைத்து, போய் வந்தாலும், பகுதி நேரமாய், இன்னும் தங்களது 'திவ்ய கானங்கள் வைப்ஸ்' இசைக்குழுவை நடத்திக்கொண்டு இருந்தனர். இருவருக்குமே நேரம் கிடைப்பது அரிதாய் இருந்தாலும் மாதா மாதம் ஒரு இரண்டாம் செய்வாய்க்கிழமை இந்த குறுக்குத்துறை முருகன் கோவிலுக்கு வருவதை மட்டும் தவற விடுவதே இல்லை.

    தன்னை பெரிய ஆபத்தில் இருத்து காப்பாற்றியது இந்த முருகன்தான் என்பதில் திவ்யாவுக்கு அப்படி ஒரு நம்பிக்கை. அவள் நம்பிக்கையை மதித்து டேவிட்டும் அவளுடன் வருகிறான். அதேபோல, டேவிட்டின் நம்பிக்கைக்காக வாரம் தவறாமல் அவனுடன் ஞாயிற்றுகிழமை சர்ச்சுக்கு செல்ல திவ்யாவும் தவறவிடுவதில்லை.

    அப்போது பைக்குகள் சத்தம் கேட்டு இருவரும் திரும்பி பார்க்க, டேவிட் நண்பர்கள் நெல்சன், தியாகு, செந்தில் முகம் நிறைய மகிழ்ச்சியுடன் ஓடி வந்தனர்.

    "என்னடா… ரொம்ப சந்தோஷமா வர்ரீங்க… என்ன விஷயம்?"

    "மாப்ளே.. நாம எதிர்பாராமலே பெங்களூர்ல நமக்கு ஒரு கச்சேரி புக் ஆகிருக்குடா…"

    - நெல்சன் மூச்சு வாங்க சொன்னான்.

    "ஆமாம்., மாப்ளே நாம வாங்குற தொகையை விட ரெண்டு மடங்கு.." - செந்தில் குதித்தான்.

    "ஆரம்பத்துல பிரியா கச்சேரி பண்ணோம்.. இப்போ ரெண்டு மடங்கு சம்பளம்.. இதான் மாப்ளே வளர்ச்சி…" - தியாகு சொன்னான்.

    அனைவரின் முகத்திலும் சந்தோஷம் தாண்டவமாடியது. இப்படித்தான் 'முதல் வெளியூர் கச்சேரி' என்று மேலூர் போகும் சமயம் திவ்யாவை ஆபத்து சூழ்ந்தது. இம்முறை பெங்களூர் செல்லப்போகும் அவளை எந்த ஆபத்தும் நெருங்காது என திவ்யா நம்பினாலும், அவள் மனசுக்குள் ஒரு பயம் வரத்தான் செய்தது. ஆனால் - மகிழ்ச்சியில் டேவிட் அவளை பார்த்து "உசுரே நீதானே…" என விசிலில் பாடி, தோளை அணைத்தான்.

    (முற்றும்)

    E-Mail: director.a.venkatesh@gmail.com / வாட்ஸப்: 7299535353

    Next Story
    ×