search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஜெயலலிதாவின் கனவு நனவாக வேண்டும்...
    X

    ஜெயலலிதாவின் கனவு நனவாக வேண்டும்...

    • ஏராளமான ஜெயலலிதாவின் விருப்பங்கள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருக்கின்றன.
    • ஜெயலலிதாவால் அங்கீகாரம் பெற்று, கட்சியிலும், ஆட்சியிலும் பதவி பெற்றவர்கள், இன்றைக்கும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள்.

    சமீபத்தில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சைதை துரைசாமி மூலம் ஒரு கல்வி அறக்கட்டளை தொடங்கும் முயற்சியில் ஜெயலலிதா இருந்தார் என்று முகநூலில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.

    இதுகுறித்து என்னிடம் பலரும் விசாரித்த நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று அவரது நிறைவேறாத கனவை அ.தி.மு.க. தலைவர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும், தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்க வேண்டியது என் கடமை என்றே கருதுகிறேன்.

    நான் பெருநகர சென்னை மேயராக இருந்தபோது, என்னுடைய சொந்த நிதியில் நடத்திவரும் மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். அறக்கட்டளை பணியை விரிவுபடுத்துவதற்காக அதிக நிதி தேவைப்பட்டது. எனவே, எனது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான ஒரு மதிப்புமிக்க சொத்தை விற்பனை செய்து, அதில் பெரும் தொகையை வைப்பு நிதியாக வைத்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் மனிதநேய அறக்கட்டளையை நடத்துவதற்கு முடிவெடுத்தேன்.

    ஜெயலலிதா முன்னிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயராக சைதை துரைசாமி பொறுப்பேற்றுக்கொண்ட காட்சி.

    நான் மேயராக இருந்ததால், சொத்து விற்பனை குறித்து, ஜெயலலிதாவிடம் அனுமதி பெறுவதற்காக, 2015-ம் ஆண்டு ஒரு கடிதம் கொடுத்தேன். என் கடிதத்தைப் பார்த்ததும் ஜெயலலிதா எனக்கு அழைப்பு விடுத்தார். நான் அவரை சந்தித்ததும், 'நீங்கள் மனிதநேய அறக்கட்டளையை யாருடைய உதவியும் இன்றி, சொந்த நிதியில், மிகச்சிறப்பாகவும், மிகத்திறமையாகவும் நடத்திவருவதைப் பார்த்து உண்மையிலே நான் பெருமைப்படுகிறேன். இப்போது சொத்தை விற்பனை செய்வதற்கு என்ன அவசியம்?' என்று கேட்டார்.

    உடனே நான், 'அம்மா… நமது தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 12,500-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி மன்றங்கள் உள்ளன. அத்தனை கிராமத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் படிப்பதற்கும், பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து, போட்டித் தேர்வுகளில் பங்கெடுக்க வேண்டும். மனிதநேயம் தன்னால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்' என்றேன்.

    உடனே நெகிழ்ந்து போன ஜெயலலிதா, "உங்கள் நோக்கம் மிகவும் சிறப்பானது. மனிதநேயம் அறக்கட்டளைக்காக எந்த ஒரு சொத்தையும் நீங்கள் விற்பனை செய்யக்கூடாது. அவை எல்லாம் உங்கள் மகன் வெற்றிக்குத்தான் சேர வேண்டும். தற்போது நீங்கள் செய்ய விரும்பும் விரிவாக்கப் பணிக்கான அனைத்து உதவிகளையும் நான் செய்து தருகிறேன்'' என்று கூறினார்.

    மேலும் அவர், "நான் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பும் பொறுப்பும் தருகிறேன். என் பெயரிலும் ஒரு அறக்கட்டளை தொடங்கி, நீங்கள் விரும்பும் வகையில் மாணவர்களுக்கு சேவை செய்யுங்கள். கடைசி மனிதன் இருக்கும் வரையில் என் பெயரிலான அறக்கட்டளை தொடர்ந்து இயங்க வேண்டும். அறக்கட்டளைக்கு தேவையான வைப்பு நிதியை நான் தருகிறேன். மேலும், சில சொத்துகளை அறக்கட்டளை பெயரில் எழுதி வைக்கிறேன். அந்த வருமானத்தில் இருந்து அறக்கட்டளை எல்லா காலமும் தொடர்ந்து இயங்க வேண்டும்'' என்று கேட்டார்.

    பின்னர் என்னிடம், "நீங்கள் நேர்மையாகவும், திறமையாகவும் செயல்படுவதாலே, இந்த அறக்கட்டளை நடத்தும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைக்கிறேன். நீங்கள் பூங்குன்றனை உடன் இணைத்து அறக்கட்டளையை நடத்துங்கள். உங்கள் இருவர் மீதும் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. எனக்கு அம்மா உணவகம் மூலம் மக்களிடம் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தீர்கள். அதேபோல், இந்த அறக்கட்டளைக்கும் மக்களிடம் எனக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும்'' என்று தனது அக்கறையை வெளிப்படுத்தினார்.

    அதன் பிறகு, 2 முறை ஜெயலலிதாவிடம் இந்த இலவச கல்வி அறக்கட்டளை பற்றி நேரில் சந்தித்தபொழுது கேட்டேன். "விரைவில் உங்களை அழைக்கிறேன்'' என்று உறுதி அளித்தார். ஆனால், அதன்பிறகு ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு மற்றும் சில காரணங்களால், அவரது ஆசை அடுத்தகட்டத்துக்கு நகரவே இல்லை. ஜெயலலிதாவின் கனவு நிறைவேறவில்லை என்ற வருத்தத்தையே அவரது உதவியாளர் பூங்குன்றன் பதிவாக வெளியிட்டிருக்கிறார்.

    இப்படி ஏராளமான ஜெயலலிதாவின் விருப்பங்கள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருக்கின்றன.

    இப்போதும், பூங்குன்றன் வெளிப்படையாக இதை சொன்னதால், இந்த உண்மையை பொதுவெளியில் வெளியிடுகிறேன்.

    ஜெயலலிதாவால் அங்கீகாரம் பெற்று, கட்சியிலும், ஆட்சியிலும் பதவி பெற்றவர்கள், இன்றைக்கும் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அல்லது தனித்தனியாக ஜெயலலிதா பெயரில் அறக்கட்டளை நிறுவி, அவருடைய லட்சியக் கனவை நிறைவேற்றுவதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.

    1980-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். சொன்ன, "நீதான் அ.தி.மு.க.வின் முதல் மேயர்.." என்ற கனவை நனவாக்கி, 5.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவும், பதவியேற்பு நிகழ்ச்சிக்கு நேரில் வந்தும் என்னை அங்கீகரித்தவர் ஜெயலலிதா. எனவே ஜெயலலிதாவுக்காக, எம்.ஜி.ஆர். தொண்டன் சைதை துரைசாமி, எதையும் செய்ய தயாராக இருக்கிறேன். ஜெயலலிதாவின் புகழ் காலத்தை வென்று வாழட்டும்.

    - பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி

    Next Story
    ×