search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    தேசிய குழந்தைகள் தினம்
    X

    தேசிய குழந்தைகள் தினம்

    • தன் வாழ்நாளில் 9 வருடங்களை சிறையில் கழித்த நேரு, சிறை நாட்களில் ‘உலக வரலாற்றின் காட்சிகள்’, ‘சுயசரிதை’, ‘இந்தியாவின் கண்டுபிடிப்பு’ உள்ளிட்ட நூல்களை எழுதினார்.
    • 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15 முதல், 1964-ம் ஆண்டு மே 27-ந் தேதி மரணம் அடையும் வரை இந்தியாவின் பிரதமராக இருந்தார்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம் அலகாபாத்தில், மோதிலால் நேரு- சுவரூபராணி தம்பதியருக்கு 1889-ம் ஆண்டு நவம்பர் 14-ந் தேதி மூத்த மகனாகப் பிறந்தார், ஜவஹர்லால் நேரு. செல்வ வளம் பொருந்திய வீட்டில் பிறந்த இவரது தந்தை வழக்கறிஞராக பணியாற்றினார். காஷ்மீர் கால்வாயைக் குறிக்கும் 'நெகர்' என்ற சொல்லே, மருவி ஜவஹர்லால் நேரு பரம்பரையைக் குறிக்கும் 'நேரு' என்று மாறியது.

    1916-ம் ஆண்டு லக்னோவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்திற்கு, தனது தந்தையுடன் சென்ற நேரு, அங்கு காந்தியடிகளைச் சந்தித்தார். இருப்பினும் 1919-ம் ஆண்டு ஜாலியன் வாலாபாக்கில் நடந்த படுகொலை சம்பவமே, நேருவை முழுமையாக காங்கிரசில் சேர்ந்து நாட்டிற்காக போராடத் தூண்டியது.

    1920-ம் ஆண்டு காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று, முதன் முறையாக சிறைக்குச் சென்றார், ஜவஹர்லால் நேரு. விரைவிலேயே காந்தியின் நம்பிக்கைக்கு உரியவர்களில் ஒருவராக மாறினார்.

    தன் வாழ்நாளில் 9 வருடங்களை சிறையில் கழித்த நேரு, சிறை நாட்களில் 'உலக வரலாற்றின் காட்சிகள்', 'சுயசரிதை', 'இந்தியாவின் கண்டுபிடிப்பு' உள்ளிட்ட நூல்களை எழுதினார். இந்த நூல்கள் அவருக்கு நற்பெயரை பெற்றுத் தந்ததுடன், இந்திய காங்கிரசிலும் நேருவின் மதிப்பை உயர்த்தியது.

    1929-ம் ஆண்டு லாகூரில் நடந்த இந்திய தேசிய காங்கிரசின் நிகழ்ச்சியை நேரு, தலைமையேற்று நடத்தினார். ஆங்கிலேய அரசின் பிடியில் இருந்து முழுமையான சுதந்திரம் வேண்டும் என்று அவர் பிரகடனப்படுத்தினார்.

    1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்ததும், டெல்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனிச் சிறப்பு நேருவுக்கு கொடுக்கப்பட்டது. பாராளுமன்ற ஜனநாயகம், உலகியல்வாதம், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள் பற்றிய அக்கறையில் வலிமையான திட்டங்களை உருவாக்க அவர் உறுதுணையாக இருந்தார்.

    1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15 முதல், 1964-ம் ஆண்டு மே 27-ந் தேதி மரணம் அடையும் வரை இந்தியாவின் பிரதமராக இருந்தார். அவரது அஸ்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய தேசம் முழுவதும் தூவப்பட்டது. குழந்தைகளிடம் அன்போடு பழகிவந்த, ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினம், இந்தியாவின் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

    Next Story
    ×