என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    வங்கி சேமிப்புத் திட்டங்கள் என்னென்ன?
    X

    வங்கி சேமிப்புத் திட்டங்கள் என்னென்ன?

    • பணத்தைப் பெற்ற வங்கிகள் அதைத் தேவைப்பட்டோருக்குக் கடனாகத் தந்து, வட்டியுடன் வசூலிக்கும் பொறுப்பை ஏற்றன.
    • நம் அனைவருக்கும் கண்டிப்பாக ஒரு வங்கிக் கணக்காவது இருக்கும்.

    மாலைமலர் வாசகர்களுக்கு அன்பார்ந்த வணக்கங்கள். செல்வம் என்னும் சிம்மாசனத்தில் அமர யாருக்குத்தான் ஆசை இல்லை? பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பார்கள். முக்தி என்னும் கோட்டைக்குள் நுழையப்போகும் பிணத்துக்கே அந்த கதி என்றால், தினந்தோறும் வாழ்வுடன் போராடிக் கொண்டிருக்கும் நம் போன்ற சாதாரண மனிதர்களுக்கு பணத்தை சம்பாதிக்கவேண்டும், சேமிக்கவேண்டும், வசதியாக வாழ வேண்டும் என்ற உத்வேகம் வரக் கேட்பானேன்? ஆகவேதான் தொடர்ந்து பணம் வரும் வழிகளையும், அதனை சேமித்துப் பெருக்கும் பர்சனல் பைனான்ஸ் முறைகளையும் பார்த்து வருகிறோம்.

    பர்சனல் பைனான்சில் முதலீடு என்பது கடன் (Debt) சார்ந்தவை, பங்கு (Equity) சார்ந்தவை என்று இரண்டாகப் பிரிக்கப்படுகிறது என்று பார்த்தோம். கடன் சார்ந்த முதலீடுகளில் இன்று வரை ராஜாவாக இருப்பவை வங்கிகள். பர்சனல் பைனான்சின் அடித்தளம் சேமிப்பு என்றால், சேமிப்பின் அடித்தளம் வங்கிகள். ஐயாயிரம் வருடங்களாக மனிதர்களுடன் உறவாடுபவை வங்கிச் சேவைகள். சுமேரியக் கோவில்களில் ஆரம்பித்து, இன்று நம் ஸ்மார்ட் போன்களில் உறையும் வரை வங்கியின் பயணம் நீண்ட நெடிய ஒன்று.

    முதலில் மக்கள் தங்களிடம் மீதி இருக்கும் பணத்தை வங்கிகளில் போட்டு, தங்கள் பணத்துக்குப் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் தேவையானபோது, தேவையான அளவு தொகையை மட்டும் எடுத்துக் கொள்ளும் வசதி ஆகியவற்றைப் பெற்றனர். பணத்தைப் பெற்ற வங்கிகள் அதைத் தேவைப்பட்டோருக்குக் கடனாகத் தந்து, வட்டியுடன் வசூலிக்கும் பொறுப்பை ஏற்றன.

    நம் அனைவருக்கும் கண்டிப்பாக ஒரு வங்கிக் கணக்காவது இருக்கும். இந்தியாவின் கடைக்கோடி மனிதனுக்கும் வங்கிச் சேவை கிட்ட வேண்டுமென்பதற்காக ஜன்தன் அக்கவுன்ட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நாம் இருக்கும் ஊரில் உள்ள ஒரு வங்கியில் அக்கவுன்ட்டை ஆரம்பித்ததுமே பாஸ் புக், செக் புக், ஏ.டி.எம். கார்ட், இமெயில் அலர்ட், எஸ்.எம்.எஸ். அலர்ட் என்று அத்தனையும் நமக்கு வந்து விடுகின்றன.

    வங்கி என்பது வெறும் சேவிங்ஸ் அக்கவுன்ட் மட்டுமல்ல; ரெக்கரிங் டெபாசிட், பிக்சட் டெபாசிட், 5 வருட வரி சேமிப்புத் திட்டம், சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் திட்டம், சுகன்யா சம்ரித்தி திட்டம் போன்ற டெபாசிட் திட்டங்களையும், வாகனக் கடன், வீட்டுக் கடன், கல்விக் கடன், நகைக் கடன், தனி நபர் கடன், வேளாண்மைக் கடன், வியாபாரக் கடன், கரன்ட் அக்கவுன்ட் போன்ற கடன் திட்டங்களையும், டெபிட் கார்ட், கிரெடிட் கார்ட், லாக்கர் போன்ற வசதிகளையும், உலகளாவிய பணப்பரிமாற்ற வசதிகளையும் உள்ளடக்கிய அட்சய பாத்திரம்.

    இங்கு உள்ள ஒவ்வொரு விதமான அக்கவுன்ட்டும் ஒவ்வொருவிதமான பயன் தரக்கூடியவை. சேவிங்ஸ் அக்கவுன்ட்: சேவிங்ஸ் அக்கவுன்ட் எனப்படும் எஸ்.பி. அக்கவுன்ட்டை எடுத்துக் கொண்டால், நம்மிடம் உபரியாக இருக்கும் பணத்தை பத்திரமாக வைத்து, அதற்கு வட்டியும் வழங்கும் ஓரிடம் என்று கூறலாம். மேலும் மாதாந்திர பில்கள், கடனுக்கான இ.எம்.ஐ., சேமிப்புக்கான எஸ்.ஐ.பி., இன்சூரன்சுக்கான ப்ரீமியம் –இவை எல்லாவற்றுக்கும் நம் எஸ்.பி. அக்கவுன்ட்டில் ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கலாம். அரசு தரும் மானியங்கள் இடைத்தரகர்கள் இன்றி, நம் எஸ்.பி.அக்கவுன்ட்டை வந்தடைகின்றன.

    வெளிநாடுகளுக்குச் செல்வோர் இன்டர்நேஷனல் டெபிட் கார்ட் வாங்கிக் கொண்டால் அந்நியச் செலாவணி பற்றிய கவலை இன்றி எஸ்.பி. அக்கவுன்ட்டில் உள்ள பணத்தை செலவழிக்கலாம். மேலும் நம் எஸ்.பி.அக்கவுன்ட்டுகளில் இருந்து உலகின் எந்த மூலைக்கும் பணத்தை அனுப்ப இயலும். இன்று பல வங்கிகளிலும் 18 முதல் 65 வயது வரை உள்ளவர்களுக்கு எஸ்.பி.அக்கவுன்டுடன் ஆக்சிடென்டல் டெத் இன்சூரன்சும் தருகிறார்கள். வருடத்திற்கு ரூ.100 செலுத்தினால் 2 லட்சம், ரூ. 200 செலுத்தினால் ரூ.4 லட்சம் இன்சூரன்ஸ் கிடைக்கிறது. வருடத்திற்கு 100 அல்லது 200 ரூபாய் செலுத்தி வங்கியில் ஒரு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதன் மூலம் எளிதாக இதனைப் பெறலாம். நீங்கள் அக்கவுன்ட் வைத்திருக்கும் வங்கியில் இது குறித்த மேலதிகத் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

    ரெக்கரிங் டெபாசிட்: இன்றைய எஸ்.ஐ.பி.யின் (SIP) பழைய வடிவம்தான் ரெக்கரிங் டெபாசிட். இதிலும் மாதாமாதம் பணம் சேர்த்து, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு வட்டியுடன் திரும்பப் பெறலாம். ஸ்கூல் பீஸ், தீபாவளி, பொங்கல் செலவுகள், சுற்றுலா, துணி மணி செலவுகள் போன்ற வருடாந்திரச் செலவுகளுக்கு தனித்தனியாக ஆர்.டி. ஆரம்பித்து சேர்த்து வந்தால், செலவு வரும் நேரம் திகைக்க வேண்டியிருக்காது.

    சுந்தரி ஜகதீசன்


    பிக்சட் டெபாசிட்: பிக்சட் டெபாசிட் என்பது, பெரிய தொகையை டெபாசிட் செய்து மாதாந்திர வட்டி பெறுதல் அல்லது வட்டியை டெபாசிடிலிருந்து எடுக்காமல், அதனையும் குட்டி போட வைத்து பெரிய தொகையை இன்னும் பெரிய தொகையாக்குதல் என்ற இரு விதமான வழிகள் கொண்டது.

    7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரை பிக்சட் டெபாசிட்டுகளை ஆரம்பிக்கலாம். 5 வருட வரி சேமிப்புத் திட்டமும் உள்ளது. வங்கிகளில் வைக்கப்படும் டெபாசிட்டுகளுக்கு ரூ.5 லட்சம் வரை அரசின் உத்திரவாதம் உள்ளது. பிக் டிக்கட் ஐட்டம்ஸ் என்று அழைக்கப்படுகிற மேற்படிப்பு, திருமணம், வாகனம் வாங்குதல், வீடு வாங்குதல் போன்ற பெரிய செலவுகளுக்கு சேமித்துவர பிக்சட் டெபாசிட் உதவும். இவை போன்ற பெரிய செலவுகளுக்கு கண்டிப்பாகக் கடன் தேவைப்படும். அந்தக் கடனுக்கு பத்து பர்சன்டாவது டவுன் பேமென்ட் தர வேண்டியிருக்கும். அதைச் சேர்ப்பதற்கும் வங்கிதான் வழி.

    கடன்கள் என்றதுமே நமக்கு உடனே நினைவுக்கு வருவதும் வங்கிகள்தான். கந்து வட்டிக்காரர்கள் கையில் சிக்கி சின்னாபின்னமடைந்த சாதாரண மக்களுக்கு ஆபத்பாந்தவனாக வந்தவை பொதுத் துறை வங்கிகள். இன்று தனியார் வங்கிகள், ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள், என்.பி.எஃப்.சி. என்று எத்தனை வந்தாலும், கடன்களுக்கு பொதுத்துறை வங்கிகள் விதிக்கும் கட்டணங்களும், வட்டி விகிதமுமே குறைவாக உள்ளன. வங்கிகள் தரும் கடன்கள், நகைக் கடன், வாகனக் கடன், வீட்டுக் கடன் என்று ஆரம்பித்து பிசினஸ் லோன், கார்பரேட் லோன் என்று படிப்படியாக வளர்ந்தன.

    டெலிகாம் மற்றும் டிஜிடலைசேஷன் வருகைக்குப் பின் வங்கிகளின் சேவை, இன்டர்நெட் பேங்கிங், போன் பேங்கிங், ஆர்.டி.ஜி.எஸ்., என்.இ.எஃப்.டி., ஐ.எம்.பி.எஸ். என்று மேலும் இறக்கை கட்டிப் பறக்கின்றன. பேங்க்கின் இன்டர்நெட் பக்கத்தில் எந்த நிதியாண்டில் நம்மிடமிருந்து எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு வரிப்பிடித்தம் செய்துள்ளன என்பதைக் காட்டும் 26ஏஎஸ் படிவம் காணக் கிடைக்கிறது.

    எஸ்.பி. அக்கவுன்ட்டில் அதிகப் பணம் சேர்ந்துவிட்டால் வங்கிக்கு சென்று எப்.டி ஆரம்பித்ததெல்லாம் அந்தக் காலம். இன்று அதற்கென இருக்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுத்தால் எப்பொழுதெல்லாம் நம் அக்கவுன்ட்டில் நாம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் சேர்கிறதோ, அப்பொழுதெல்லாம் ஒரு புதிய எப்.டி. ஒரு வருட காலத்திற்கு அன்றைய வட்டி விகிதத்தில் ஆரம்பிக்கப்படுகிறது. இதனால் உபரிப் பணம் குறைந்த வட்டியில் சேவிங்ஸ் அக்கவுன்ட்டில் இருப்பது தடுக்கப்படுகிறது. ஒருவேளை நம் சேவிங்ஸ் அக்கவுன்ட்டில் இருக்கும் பணத்தை விட அதிகப் பணத்திற்கு செக் கொடுத்தாலோ, அல்லது ஏ.டி.எம்.மில் எடுக்க முற்பட்டாலோ தேவையான அளவுப் பணம் இந்த எப்.டி.யில் இருந்து எஸ்.பி.அக்கவுன்ட்டுக்கு திரும்புகிறது.

    முன்பெல்லாம் பிசினஸ் செய்பவர்களுக்கு மட்டுமே கரன்ட் அக்கவுன்ட் வசதி தரப்படும். இன்று உங்களிடம் ரூ.50000-க்கு பிக்சட் டெபாசிட் இருந்தால் போதும்; அதன் மீது ரூ.37500 வரை லிமிட் கொண்ட கரன்ட் அக்கவுன்ட்டை வங்கியில் கேட்டுப் பெறலாம். அவசரமாக ரூ.1000 தேவை என்றால் கூட இந்தக் கரன்ட் அக்கவுன்ட்டிலிருந்து செக் அல்லது ஏ.டி.எம். மூலம் எடுக்கலாம்; மறுநாளே கூட திரும்பக்கட்டலாம்; மறுபடி எடுக்கலாம். இதற்கான வட்டி, பிக்சட் டிபாசிட்டின் வட்டியைப் பொறுத்தது என்பதால் 8 சதவீதம் அல்லது 9 சதவீதம் வட்டியில் கடன் கிடைக்கிறது. பர்சனல் லோன், கிரெடிட் கார்டு போன்றவற்றில் 18 சதவீதம், 36 சதவீதம் என்று வட்டி கட்டுபவர்களுக்கு வெறும் 8 சதவீதத்தில் கடன் என்பது வரப்பிரசாதம் அல்லவா?

    மியூச்சுவல் பண்டும், பங்குச்சந்தையும் மக்களின் மனதை ஆக்கிரமிக்கும் வரையில் தனிக்காட்டு ராஜாவாக விளங்கிய வங்கித் துறை இன்று பலம் குன்றுவதற்கு 3 காரணங்கள் உள்ளன:

    முதலாவதாக, வங்கி பிக்சட் டெபாசிட்டுகளில் 1990கள் வரை 13 சதவீதமும், அதற்கு அதிகமாகவும் கிடைத்து வந்த வட்டி, தற்போது 3.50 சதவீதம் முதல் 7 சதவீதம் வரையே தரப்படுகிறது. (ஸ்மால் பைனான்ஸ் வங்கிகளில் அதிகம் கிடைக்கும்).

    இரண்டாவதாக டெபாசிட்டுகளிலிருந்து கிடைக்கும் வட்டி ரூ. 40000-த்தை தாண்டினால் (சீனியர் சிட்டிசன்களுக்கு ரூ.50000) 10 சதவீதம் மூலவரிப்பிடித்தம் செய்யப்படுகிறது. இது முதலீட்டின் வளர்ச்சியை பாதிப்பதாக உள்ளது. (வரி கட்டவேண்டிய அவசியம் இல்லாதவர்கள் படிவம் 15 ஜி/எச் சமர்ப்பித்து வரிப் பிடித்தத்தை தவிர்க்கலாம்).

    மூன்றாவதாக, வங்கி டிபாசிட்டுகளுக்கு ரூ.5 லட்சம் வரையே அரசின் உத்தரவாதம் உள்ளது. "இந்த உத்தரவாதத்துக்கு அவசியம் வரப்போவதில்லை; ஏனெனில் நம் வங்கிகள் பலம் வாய்ந்தவை" என்று நாம் உணர்ந்தாலும், நெருடல் தொடர்கிறது.

    ஆனால் இன்றைய சூழ்நிலையில் பொருளாதார உலகில் வங்கிகள் இன்றி நாம் செயல்படமுடியாது. வள்ளுவர் இன்றிருந்தால் "பர்சனல் பைனான்ஸ் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் வங்கி வழி சேராதார்" என்று புதுக் குறளே எழுதி இருப்பார்.

    ஆனால் போகும் இடங்களிலெல்லாம் புதிது, புதிதாக வங்கிக் கணக்குகள் ஆரம்பித்து ஒவ்வொன்றிலும் ரூ.500, ரூ.1000 என்று போட்டுவைப்பது தவறு. பொதுத் துறை வங்கிகளில் ஒன்று, தனியார் வங்கிகளில் ஒன்று என இரண்டு அக்கவுன்ட்டுகளை வைத்துக் கொண்டு மற்றவற்றை க்ளோஸ் செய்வது நல்லது.

    நீங்கள் எத்தனை வங்கிகளில் அக்கவுன்ட் வைத்திருக்கிறீர்கள்?

    Next Story
    ×