search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    3ம் கட்ட அகழாய்வு பணி- திருவள்ளூர் அருகே ஆச்சரியமூட்டும் பழங்கால பொருட்கள் கண்டுபிடிப்பு

    • பட்டறைபெரும்புதூரில் ஏற்கனவே 2 கட்ட அகழாய்வு பணிகள் முடிந்து உள்ளன.
    • அகழ்வாராய்ச்சி வருகிற செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது.

    தமிழகம் 15 லட்சம் ஆண்டுகள் மனிதகுல வரலாற்று தொன்மை கொண்டது. இதன் தொன்மையை கண்டறிய முறையான அகழாய்வுகள் அவசியம் ஆகும். தமிழக அரசின் தொல்லியல் துறை செய்த அகழாய்வில் அறிவியல் அடிப்படையிலான ஆய்வின் முடிவுகள் மூலம் தமிழகத்தின் வரலாற்றில் புதிய வெளிச்சம் ஏற்பட்டு உள்ளது. கீழடி அகழாய்வு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து உள்ளது. இந்த அகழாய்வு தொல்லியலாளர்கள் இடையே மட்டும் இல்லாமல் உலக தமிழர்களிடையேயும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழர்கள் 6-ம் நூற்றாண்டில் படிப்பறிவும் எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை உறுதியாக நிலைநிறுத்தி இருக்கிறது.

    சமீபகால தொல்லியல்துறையின் சாதனைகள் மூலம் நமது நீண்ட கால வரலாற்றில் காணும் பண்பாடு மற்றும் கால வரிசை இடைவெளிகளை நிரப்புவதற்கு நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது. எனவே நிர்ணயித்த இலக்கை அடைய தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல், வரலாற்று காலம் வரையிலான தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழாய்வு செய்ய அரசு திட்டமிட்டு உள்ளது.

    அதன்படி திருவள்ளூர் மாவட்டம் பட்டறைபெரும்புதூர், கீழடி, அரியலூர் மாவட்டம் கங்கை கொண்டசோழபுரம், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை உள்பட 8 இடங்களில் அகழாய்வு செய்யும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் தொடங்கி வைத்தார்.

    இதில் பட்டறைபெரும்புதூரில் ஏற்கனவே 2 கட்ட அகழாய்வு பணிகள் முடிந்து உள்ளன. இதைத்தொடர்ந்து தற்போது 3-வது கட்டமாக அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

    அகழாய்வு பணி நடைபெறும் பட்டறை பெரும்புதூர் கிராமம் திருவள்ளூரில் இருந்து திருத்தணி செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொசஸ்தலை ஆற்றுப் படுகையில் இருந்து சிறிது தூரத்தில் உள்ளது. கடந்த 2015-16, 2017-18 ஆகிய 2 ஆண்டுகள் இப்பகுதியில் ஏற்கனவே அகழாய்வுகள் செய்யப்பட்டன. ஆலைமேடு, நத்தமேடு, இருளன்தோப்பு மற்றும் சிவன் கோவில் ஆகிய இடங்களில் தொல்லியல் துறையினர் 33 குழிகள் சுமார் 825 சதுர மீட்டர் பரப்பளவில் அகழாய்வு செய்து 1404 தொல்பொருட்களை கண்டு பிடித்தனர். மனித எலும்புத் துண்டுகள், கல்லாயுதங்கள், செம்பு, இரும்பு ஆகிய உலோகங்கள் கண்ணாடிப் பொருள்கள், சங்கு சார்ந்த வளையல்கள், பவள மணிகள், பச்சை மணிகள், பானை ஓடுகள் முதலியன கிடைத்துள்ளன.

    இதில் சில பழங்கால மண்பானை ஓடுகளில் பிராமி எழுத்துகளும் இடம்பெற்றுள்ளன. இதேபோல் பட்டறை பெரும்புதூரில் பல கோயில் சார்ந்த கல்வெட்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில் பல்லவ மன்னன் அபராஜிதவர்மன் காலத்திய கல்வெட்டுகள் முக்கியமானது. இவை தொல்லியல் துறையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

    தற்போது பட்டறை பெரும்புதூரில் 3-ம்கட்ட அகழாய்வு பணி 3 குழிகளில் நடைபெற்று வருகிறது. கண்ணாடி மணிகள், சுடுமண் மணிகள், விளையாட்டு சில்லுகள், பானை ஓடுகள் உள்ளிட்ட பழைய உபகரணங்கள் கிடைக்கப்பெற்றது. தொடர்ந்து இந்த ஆய்வு பணி நடந்து வருகிறது. இதில் சுமார் 25 பேர் தினமும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த அகழ்வாராய்ச்சி வருகிற செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது. 6 மாதங்கள் நடைபெறும் இந்த விரிவான அகழ்வாராய்ச்சி தொல்லியல் துறையை சேர்ந்த பாஸ்கர் தலைமையில் நடந்து வருகிறது. இதில் பழங்கால தமிழர்களின் வாழ்க்கை முறை குறித்த மேலும் பல ஆச்சரியமூட்டும் பொருட்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

    Next Story
    ×