என் மலர்
புதுச்சேரி

புதுச்சேரியில் கோடிக்கணக்கில் போலி மாத்திரை, மருந்து தயாரித்து விற்பனை செய்த 2 பேர் கைது
- சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொழிற்சாலைக்கு சோதனை செய்ய சென்றனர்.
- பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி மருந்துகள், அதனை தயாரிக்கும் எந்திரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் இருந்து பிரபல மருந்து நிறுவனம் பெயரில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்வதாக புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு புகார் வந்தது.
அதன் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மருந்துகளை மொத்தமாக விற்பனை செய்து வந்தது சீர்காழியை சேர்ந்த ரானா, காரைக்குடியை சேர்ந்த மெய்யப்பன் என தெரியவந்தது.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 பேரையும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் வசிக்கும் மதுரையை சேர்ந்த ராஜா என்பவர் மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் போலி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார்.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொழிற்சாலைக்கு சோதனை செய்ய சென்றனர். அப்போது கதவுகள் மூடப்பட்டிருந்தது. இதனால் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி மருந்துகள், அதனை தயாரிக்கும் எந்திரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார், டி.ஐ.ஜி.சத்திய சுந்தரம் மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தொழிற்சாலைக்கு வந்த டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம் போலி மருந்து தொழிற்சாலை மற்றும் குடோன்களை சோதனையிட்டு போலி மருந்துகளை பறிமுதல் செய்து அவற்றை ஆய்வுக்காக மருந்துகள் கட்டுப்பாட்டு ஆய்வாளர் இந்துமதி குழுவினரிடம் ஒப்படைத்தார்.
அதேபோல் 4 குடோன்களில் இருந்த பல கோடி மதிப்புள்ள போலி மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்து, தொழிற்சாலை மற்றும் குடோன்களுக்கு சீல் வைத்தனர்.






