search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கண்ணூரில் கோர்ட்டு ஊழியர்கள் 8 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு
    X

    கண்ணூரில் கோர்ட்டு ஊழியர்கள் 8 பேருக்கு "ஜிகா" வைரஸ் பாதிப்பு

    • நீதிமன்றத்தில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
    • மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்பு பணியில் சுகாதாரத்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியபோது டெங்கு, எலிக்காய்ச்சல் உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவியது. அதன் தொடர்ச்சியாக கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவியது.

    அடுத்தடுத்து தொற்று நோய்கள் பரவியது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் காரணமாக நிபா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது.

    இந்நிலையில் அங்கு தற்போது ஜிகா வைரஸ் பரவி வருகிறது. கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ளது தலச்சேரி. இங்குள்ள மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரிந்து வரும் வக்கீல்கள், நீதிபதிகள், ஊழியர்கள் சிலருக்கு தலைவலி, கண்வலி, மூட்டுவலி உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தன.

    இதையடுத்து அங்கிருந்த 3 நீதிமன்றங்கள் 2 நாட்கள் மூடப்பட்டன. நீதிமன்றத்தில் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அதில் நோய் பாதிப்பு இருந்த 23 பேரிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. அதில் நீதிமன்ற ஊழியர்கள் 8 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.

    இதையடுத்து அவர்கள் 8 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜிகா வைரஸ் ஏடிஸ் கொசுக்களால் பரவக்கூடியது. இதனால் மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்பு பணியில் சுகாதாரத்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறும்போது, ஜிகா வைரஸ் பரவல் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கர்ப்பிணி பெண்கள் சுகாதாரத்துறையின் சிறப்பு கண்காணிப்பில் உள்ளனர் என்றார்.

    Next Story
    ×