என் மலர்
இந்தியா

தந்தையை இழந்ததால் பிரதமர் மோடியின் வீட்டில் தங்கி படித்த முஸ்லிம் நண்பர் - நெகிழ வைக்கும் நட்பு
- இஸ்லாமிய பண்டிகையின் போது மோடியின் தாயார் அப்பாசுக்கு பிடித்த உணவுகளை சமைத்துக் கொடுத்தார்.
- அப்பாஸும் மோடியின் சகோதரர் பங்கஜ் மோடியும் ஒரே வகுப்பில் படித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளில் அவருடைய ஆரம்ப கால நண்பர் அப்பாஸ் பற்றிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி 2022-ம் ஆண்டு தனது தாயார் ஹீராபென் பற்றிய பதிவில் எனது வீட்டில் வளர்ந்த அப்பாஸ் மற்றும் தனது குழந்தைப் பருவ நினைவுகளை பதிவிட்டார். அப்போது தான் அப்பாஸ் பற்றிய தகவல் வெளியானது.
பிரதமர் மோடியின் எளிமையான குடும்பம் குஜராத் மாநிலத்தில் உள்ள வாட் நகரில் வசித்து வந்தது. பிரதமர் மோடியின் தந்தை தாமோதர் தாஸின் நண்பர் மியான் பாய். இவருடைய மகன் அப்பாஸ். மியான் பாய் திடீரென மரணம் அடைந்தார். இதனால் அவருடைய குடும்பம் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டது. அவருடைய மகன் அப்பாஸின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அவரை மோடியின் தந்தை தாமோதர்தாஸ் தனது வீட்டுக்கு அழைத்து வந்தார்.
அப்பாஸ், பிரதமர் மோடி மற்றும் அவருடைய சகோதரருடன் நட்புடன் பழகினார். அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
ஆண்டுதோறும் ரம்ஜான் உள்ளிட்ட இஸ்லாமிய பண்டிகையின் போது மோடியின் தாயார் அப்பாசுக்கு பிடித்த உணவுகளை சமைத்துக் கொடுத்தார்.
அப்பாஸும் மோடியின் சகோதரர் பங்கஜ் மோடியும் ஒரே வகுப்பில் படித்தனர். இருவரும் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களை பெற்றனர். பின்னர் அப்பாஸும், பங்கஜ் மோடியும் ஒன்றாக அரசு வேலையில் சேர்ந்தனர். 2022-ம் ஆண்டு அப்பாஸ் பணி ஓய்வு பெற்றார்.
தற்போது அவர் ஆஸ்திரேலியாவில் அவருடைய மூத்த மகனுடன் வசித்து வருகிறார்.
தனது வாழ்க்கையை சிறந்ததாக அமைக்க மோடியின் குடும்பம் ஆழமான பங்கு வகித்தது. மோடியின் தாயார் சொந்த பிள்ளையை போல் என்னிடம் பாசமாக இருப்பார் என அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, அப்பாஸின் நட்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






