என் மலர்
இந்தியா

உத்தரகாண்டில் மீண்டும் மேக வெடிப்பு: வெள்ளத்தில் சிக்கிய வீடுகள்- 5 பேர் பலி
- சம்பவ இடம் சென்ற மீட்புக்குழு தேடுதல், மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
- சுகி டாப் பகுதியில் மீண்டும் ஒரு மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி:
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள தாராலி பகுதியில் இன்று திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள கீர் கங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் அங்குள்ள கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், மண்ணில் பலர் புதையுண்டதாகவும் அஞ்சப்படுகிறது.
தகவலறிந்து மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 5 பேர் பலியாகினர் என முதல்கட்ட தகவல் வெளியானது. 20க்கும் மேற்பட்ட மக்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
உத்தரகாண்ட் வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியானோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உத்தரகாசியின் தாராலியில் நடந்த இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநில அரசின் கண்காணிப்பில் மீட்பு, நிவாரண குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், சுகி டாப் பகுதியில் மீண்டும் ஒரு மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.






