search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இறந்த தாயின் டாக்டர் பட்டத்தை யூ.கே.ஜி. படிக்கும் மகளுக்கு வழங்கும் பல்கலைக்கழகம்
    X

    இறந்த தாயின் டாக்டர் பட்டத்தை யூ.கே.ஜி. படிக்கும் மகளுக்கு வழங்கும் பல்கலைக்கழகம்

    • தனது ஆய்வறிக்கையை 2018-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந்தேதி கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பிரியா சமர்ப்பித்தார்.
    • தகுந்த முடிவை எடுத்ததற்காக கோழிக்கோடு பல்கலைக்கழக சிண்டிகேட் பாராட்டப்பட வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் செம்புக்கா அழகப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜன்-மெர்சி தம்மதியின் மகள் பிரியா. இவரது கணவர் பியூஸ் பால். பிரியாவுக்கு ஆராய்ச்சி படிப்பில் டாக்டர் பட்டம் பெற வேண்டும் என்பது கனவாக இருந்துள்ளது.

    ஆகவே அவர் திருமணமான பிறகும் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். அவர் திருச்சூர் மாவட்டம் இருஞ்சாலக்குடா கிறிஸ்து கல்லூரியின் விலங்கியல் துறையில் ஆராய்ச்சி மாணவியாக இருந்து வந்தார். அவரது ஆய்வு 2011-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை நீடித்தது.

    தனது ஆய்வறிக்கையை 2018-ம் ஆண்டு ஏப்ரல் 28-ந்தேதி கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பிரியா சமர்ப்பித்தார். அவரது ஆய்வறிக்கைக்கு அதே ஆண்டு ஜூலை மாதம் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து முனைவர் பட்டம் பெற பிரியா தகுதியானார்.

    இந்நிலையில் பிரசவத்துக்காக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போது பிரியா பரிதாபமாக இறந்தார். இதனால் அவர் டாக்டர் பட்டத்தை பெற முடியாமல் போனது. டாக்டர் பட்டம் பெறுவது பிரியாவின் நீண்டநாள் கனவாக இருந்ததால், அவருக்கான பட்டத்தை, அவருடைய மகளிடம் வழங்கவேண்டும் என்று பல்கலைக்கழகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

    ஆய்வறிக்கை சமர்ப்பித்த வர் இல்லாதநிலையில், பிரியாவின் பட்டத்தை யூ.கே.ஜி.படிக்கும் அவரது மகளிடம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பல்கலைக்கழக சிண்டிகேட் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து பிரியாவின் டாக்டர் பட்டம், யூ.கே.ஜி. படித்துவரும் அவரது மகள் ஆன்ரியா பெற உள்ளார்.

    இந்த தகவலை கேரள மாநில உயர்கல்வித்துறை மந்திரி பிந்து தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும் அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஆராய்ச்சி தாயின் நீண்ட நாள் கனவை அவரது மகள் ஆன்ரியா பெறப்போகிறார் என்பது நமக்கு என்றென்றும் மறக்க முடியாக நினைவாக இருக்கும். பிரியா இல்லாத நேரத்தில் அவரது முயற்சிகள் மற்றும் அற்புதமான சாதனைகளுக்கு வணக்கம் செலுத்துவோம். இந்த விவகாரத்தில் தகுந்த முடிவை எடுத்ததற்காக கோழிக்கோடு பல்கலைக்கழக சிண்டிகேட் பாராட்டப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×