என் மலர்
இந்தியா

தெலுங்கு தேசம் கட்சிக்கு சபாநாயகர் பதவி தேவையில்லை- சந்திரபாபு நாயுடு
- ஆந்திர மாநிலம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது.
- அமராவதி கட்டுமான பணிகளுக்கு விரைந்து நடவடிக்க நிதி பங்களிப்பை கேட்க வேண்டும்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் என். டி. ஆர் மாவட்டம் விஜயவாடாவில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நடந்தது.
பாராளுமன்ற சபாநாயகர் தேர்தல் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா என்னிடம் போனில் பேசினார். நான் தெலுங்கு தேசம் கட்சிக்கு சபாநாயகர் பதவி தேவையில்லை. அரசுக்கு நிதி மட்டுமே வேண்டும் என்று கூறினேன்.
ஆந்திர மாநிலம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல உதவி வேண்டுமென கேட்டேன். ஆந்திர மக்கள் கூட்டணியை நம்பி ஆட்சியை கொடுத்ததாக அவரிடம் தெரிவித்தேன். மேலும் பதவிகள் கேட்டால் மாநில நலன்கள் பாதிக்கப்படும். மாநில நலன்களே நமக்கு முக்கியம்.
ஒவ்வொரு எம்.பி.க்கும் 3 துறைகளை ஒதுக்குகிறேன். அந்தந்த துறைகளில் உள்ள நிதி மற்றும் திட்டங்களை மாநிலத்திற்கு கொண்டுவர வேண்டும். எம்.பி.க்கள் சம்பந்தப்பட்ட மத்திய மந்திரிகளுடன் பேசி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
தெலுங்கு தேசம் கட்சிக்கு 16 எம்.பி.க்கள் பலம் இருப்பதால் மாநிலத்திற்கு கூடுதல் நிதி கிடைக்க முயற்சி எடுக்க வேண்டும். போலாவரம், அமராவதி கட்டுமான பணிகளுக்கு விரைந்து நடவடிக்க நிதி பங்களிப்பை கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பாராளுமன்ற சபாநாயகர் பதவியை சந்திரபாபு நாயுடு கேட்டு அடம்பிடிப்பதாக தகவல் வந்த நிலையில் சந்திரபாபு நாயுடு தற்போது பதவியை விரும்பவில்லை எனக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.






