search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே தூக்கிப்போடப்பட்ட சிறுமி மரணம்- அட்டூழியம் செய்த தனியார் ஆஸ்பத்திரிக்கு சீல்
    X

    ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே தூக்கிப்போடப்பட்ட சிறுமி மரணம்- அட்டூழியம் செய்த தனியார் ஆஸ்பத்திரிக்கு சீல்

    • சிறுமியின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவரை ஆஸ்பத்திரியில் இருந்து ஊழியர்கள் வெளியே கொண்டுவந்து போட்டுவிட்டனர்.
    • உடல்நிலை மோசமடைந்தபோது வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்ற வாகனம் ஏற்பாடு செய்வதற்குள் வெளியே கொண்டுவந்து போட்டுவிட்டனர்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் கிரோர் நகரில் 12-ம் வகுப்பு படித்த மாணவி பாரதி. இவர் காய்ச்சல் காரணமாக அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த செவ்வாய்க்கிழமை சேர்க்கப்பட்டார்.

    நேற்று முன்தினம் அந்த சிறுமியின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் அவரை ஆஸ்பத்திரியில் இருந்து ஊழியர்கள் வெளியே கொண்டுவந்து போட்டுவிட்டனர்.

    அதையடுத்து அவரை ஒரு மோட்டார்சைக்கிளில் ஏற்றி வேறு ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல அவரது குடும்பத்தினர் முயன்றனர். ஆனால் மோட்டார்சைக்கிளில் ஏற்றப்பட்ட நிலையில் அந்தச் சிறுமி இறந்துவிட்டார்.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஆஸ்பத்திரியின் தவறான சிகிச்சையால்தான் சிறுமி உயிரிழந்துள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்தபோது வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்ற வாகனம் ஏற்பாடு செய்வதற்குள் வெளியே கொண்டுவந்து போட்டுவிட்டனர் என்றும் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

    உத்தரபிரதேச துணை முதல்-மந்திரியும், சுகாதாரத்துறை மந்திரியுமான பிரஜேஷ் பதக் இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து வெளியிட்ட எக்ஸ் பதிவில், 'சிறுமி மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த ஆஸ்பத்திரிக்கு 'சீல்' வைக்கப்பட்டு, அங்கிருந்த மற்ற நோயாளிகள் இடம் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்து, ஆஸ்பத்திரியின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.

    இந்த மாத தொடக்கத்தில், அமேதியில் உள்ள, சஞ்சய் காந்தி ஆஸ்பத்திரியில் இதுபோல அலட்சியம் காரணமாக ஒரு நோயாளி இறந்ததாக புகார் எழுந்தது. அதையடுத்து அந்த ஆஸ்பத்திரியை மூட உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டது.

    ஆஸ்பத்திரியை திறக்க அனுமதிக்க கோரி காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சியினர் போராட்டம் நடத்தினர். அதுதொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    Next Story
    ×