என் மலர்
இந்தியா

காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம்: கனடா தூதரை நேரில் அழைத்து அதிருப்தி தெரிவித்த மத்திய அரசு
- பஞ்சாப்பில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை போலீசார் தேடி வருகிறார்கள்.
- கனடாவில் இந்திய தூதரக வளாகத்திற்கு வெளியே உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பியது.
புதுடெல்லி:
பஞ்சாப்பில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை போலீசார் தேடி வருகிறார்கள். அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து, அமெரிக்கா, கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்திய தூதரகங்கள் முன்பு போராட்டம் நடந்தது.
இந்த நிலையில் கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்தி வருவது போராட்டம் தொடர்பாக இந்தியாவுக்கான கனடா தூதருக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியது.
கனடா தூதரை நேரில் அழைத்து கடும் அதிருப்தியை மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளிப்படுத்தியது. மேலும் கனடாவில் இந்திய தூதரக வளாகத்திற்கு வெளியே உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேள்வி எழுப்பியது.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறும்போது, எங்கள் தூதர்களின் பாதுகாப்பையும், தூதரக வளாகத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கனடா அரசு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவர்கள் வழக்கமான தூதரக செயல்பாடுகளை நிறைவேற்ற முடியும்.
இந்திய தூதரகத்தின் பாதுகாப்பை மீறும் வகையில் போலீஸ் முன்னிலையில் இத்தகைய போராட்டங்கள் எப்படி அனுமதிக்கப்பட்டது என்பது குறித்து இந்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது என்றார்.