search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாம்புடன் செல்பி எடுக்க ஆசைப்பட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி
    X

    பாம்புடன் செல்பி எடுக்க ஆசைப்பட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி

    • பாம்புடன் செல்பி எடுக்க ஆசைப்பட்ட வாலிபர் பாம்பு கடித்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • வாலிபர் உயிரிழந்தது குறித்து கந்துகோல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், தூளூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டா ரெட்டி (வயது 28). இவர் கந்தகுரு பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் கடையிலிருந்து வீட்டிற்கு வந்தபோது பஸ் நிலையம் அருகே பாம்பாட்டி ஒருவர் பாம்பை வைத்து வித்தை காட்டிக் கொண்டு இருந்தார். இதனைக் கண்ட மணிகண்டா ரெட்டிக்கு பாம்புடன் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என ஆசை வந்தது.

    பாம்பாட்டியிடம் சென்ற மணிகண்டா ரெட்டி பாம்புடன் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இதற்கு பாம்பாட்டி மறுப்பு தெரிவித்தார். இருப்பினும் பாம்பாட்டியை வற்புறுத்தி பணம் தருவதாக கூறி தன்னுடைய கழுத்தில் பாம்பை சுற்றி விட வேண்டும் என கேட்டதால், அவரும் பணம் வருவதால் சம்மதம் தெரிவித்து பாம்பை மணிகண்டா ரெடியின் கழுத்தில் சுற்றிவிட்டார்.

    அப்போது மணிகண்டா ரெட்டி பாம்புடன் செல்பி எடுத்து கொஞ்சினார். பின்னர் தனது கழுத்தில் இருந்து பாம்பை எடுத்தபோது பாம்பு திடீரென மணிகண்டாவை கடித்து விட்டது. இதையடுத்து பாம்பை கழுத்தில் இருந்து வீசி எறிந்து விட்டு வலியால் அலறி துடித்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு மணிகண்டா ரெட்டியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கந்துகோல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாம்புடன் செல்பி எடுக்க ஆசைப்பட்ட வாலிபர் பாம்பு கடித்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×