search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அமளியால் சபை நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிப்பு- இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
    X

    அமளியால் சபை நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிப்பு- இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

    • இன்று காலை 11 மணிக்கு மீண்டும் பாராளுமன்றம் கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
    • இன்று பிற்பகல் 2 மணி வரை பாராளுமன்றத்தை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

    பாராளுமன்றம் கடந்த 13ம் தேதி கூடியது. அன்று முதல் தொடர்ந்து 5 நாட்கள் பாராளுமன்ற இரு அவைகளும் எம்.பி.க்களின் அமளியால் முடங்கியது.

    லண்டனில் ராகுல் காந்தி இந்திய ஜனநாயகம் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளும் பாரதீய ஜனதா எம்.பி.க்களும், அதானி முறைகேடு தொடர்பாக பாராளுமன்ற கூட்டு நடவடிக்கை குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் 5 நாட்களாக பாராளுமன்றத்தில் எந்த ஒரு விவாதமும் நடைபெறாமல் ஒத்திவைக்கபட்டது.

    இன்று காலை 11 மணிக்கு மீண்டும் பாராளுமன்றம் கூடியதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அதானி முறைகேடு விவகாரம் தொடர்பாக பிரச்சினை எழுப்பினார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனக்கோரி அவர்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று கோஷங்கள் எழுப்பினார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாரதீய ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினர் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள். இதனால் சபையில் ஒரே கூச்சலும், குழப்பமுமாக இருந்தது.

    அவர்களை அமைதி காக்குமாறும், தங்கள் இருக்கைக்கு சென்று அமரு மாறும் சபாநாயகர் ஓம்பிர்லா பல முறை கூறினார். ஆனாலும் அவர்கள் அதை கேட்கவில்லை. தொடர்ந்து அவர்கள் அமளியில் ஈடுபட்டு முழக்கங்கள் எழுப்பியவாறு இருந்தனர்.

    இதனால் சபையை நடத்த முடியாத சூழ்நிலை நிலவியது. இதைத்தொடர்ந்து இன்று பிற்பகல் 2 மணி வரை பாராளுமன்றத்தை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

    இதேபோல் மேல்- சபையிலும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் இதே பிரச்சினையை வழக்கம் போல எழுப்பினார்கள். சபை தலைவர் ஜெகதீப் தன்கர் கேட்டுக்கொண்டும் அவர்கள் இடைவிடாமல் கோஷங்கள் எழுப்பிய வண்ணம் இருந்தனர். இதனால் மேல்- சபை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    இதையடுத்து, இரு அவைகளும் மீண்டும் தொடங்கிய நிலையில், எம்.பிக்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை மற்றும் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    Next Story
    ×