search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோழிக்கோட்டில் 10 நாட்களுக்கு பிறகு பள்ளி-கல்லூரிகள் நாளை திறப்பு
    X

    கோழிக்கோட்டில் 10 நாட்களுக்கு பிறகு பள்ளி-கல்லூரிகள் நாளை திறப்பு

    • புதிதாக யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதால் கோழிக்கோடு மாவட்டத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன.
    • கடைகள் திறப்பு நேரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று பாதித்து 2 பேர் அடுத்தடுத்து பலியாகினர். இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலை தயார்செய்து, அவர்களில் நோய் அறிகுளிகள் உள்ளவர்களுக்கு நிபா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.

    அதில் முதலில் இறந்த நபரின் 9 வயது மகன், மைத்துனர், சுகாதார பணியாளர் உள்பட மேலும் 4 பேருக்கு நிபா வைரஸ் பாதித்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

    தொற்று பாதித்தவர்களின் தொடர்பில் இருந்ததாக 1,200பேர் கண்டறியப்பட்டனர். அவர்களில் நோய் அறிகுறிகள் இருந்த பலருக்கு நிபா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் புதிதாக யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கோழிக்கோடு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

    அதிலும் தொற்று பாதித்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வசித்த பகுதிகளாக கண்டறியப்பட்ட 9 பஞ்சாயத்துகள் மற்றும் மாநகராட்சி பகுதியில் 100 வார்டுகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு, அங்கு கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

    இந்நிலையில் புதிதாக யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதால் கோழிக்கோடு மாவட்டத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. கடைகள் திறப்பு நேரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

    தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களுக்கும் தொடர் விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் கடந்த 10 நாட்களாக கல்வி நிலையங்கள் அனைத்ததும் அடைக்கப்பட்டிருந்தன.

    மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் புதிதாக தொற்று பாதிப்பு இல்லாத காரணத்தால் பள்ளி-கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களையும் நாளை மீண்டும் திறக்க கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் கீதா உத்தரவிட்டுள்ளார்.

    அதே நேரத்தில் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதில் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் என அனைவரும் கல்வி நிலையங்களுக்கு முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    மேலும் அவர்கள் பயன்படுத்தும் வகையில் பள்ளி மற்றும் வகுப்பறை நுழைவு வாயில்களில் சானிடைசரை வைக்கவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. கட்டுப்பாட்டு மண்டலங்களில் செயல்படும் பள்ளி-கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் தொடரும் வரை ஆன்லைனில் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    Next Story
    ×