search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அரசு அலுவலகங்களில் வெடிகுண்டு இருப்பதாக மொட்டை கடிதம் போட்ட தாய்-மகன்
    X

    அரசு அலுவலகங்களில் வெடிகுண்டு இருப்பதாக மொட்டை கடிதம் போட்ட தாய்-மகன்

    • போலீசார், மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
    • போலீசார் 7 செல்போன்கள் மற்றும் 2 பெண் டிரைவர்கள், மொட்டை கடிதங்களை பறிமுதல் செய்தனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கொல்லம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பெயர், முகவரி எதுவும் இல்லாமல் ஒரு மொட்டை கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் இங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக எழுதப்பட்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சியான ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் கலெக்டர் அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தி கொண்டிருந்தனர். ஆனால் அங்கு குண்டு இல்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த கடிதத்தை யார் அனுப்பியது என்பதை கண்டறியும் பணியில் போலீசார் இறங்கினர்.

    அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களையும் ஆய்வு செய்தனர்.

    அப்போது கேமிராவில் பதிவாகி இருந்த வாலிபர் மற்றும் பெண் ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதுபோன்று பல்வேறு இடங்களில் குண்டு வைத்ததாக வந்த தகவலின் பேரில் போலீசார் சோதனை செய்ய இடங்களில் இவர்கள் இருந்துள்ளனர். இதனால் சந்தேகம் அதிகரிக்கவே அவர்கள் யார் என்பது குறித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் கொல்லம் அருகே உள்ள பத்தாப்புறத்தை சேர்ந்தவர் கொச்சு தெரசா(வயது62) மற்றும் அவரது மகன் சாஜன்(33) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள், வெடிகுண்டு இருப்பதாக மொட்டை கடிதம் போட்டது நாங்கள் தான் என ஒப்புக்கொண்டனர்.

    தொடர்ந்து நடந்த விசாரணையில், கொச்சு தெரசா அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது இவருக்கு வரும் பென்ஷனை வைத்து வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையே தான் அவர்களுக்கு வெடிகுண்டு இருப்பதாக மொட்டை கடிதம் போடும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    அப்படி செய்வதன் மூலம் போலீசார் சம்பந்தப்பட்ட இடங்களில் மோப்பநாய்கள் மூலம் சோதனை போடுவார்கள். அப்படி நடக்கும் போது, அந்த இடத்திற்கு சென்று, அதனை பார்ப்போம். அப்போது எங்களுக்குள் ஒருவித ஆனந்தம் ஏற்படும். இதனால் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டோம் என தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் அவர்களது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 50க்கும் மேற்பட்ட மொட்டை கடிதங்கள் எழுதி வைக்கப்பட்டு இருந்தது.

    போலீசார் 7 செல்போன்கள் மற்றும் 2 பெண் டிரைவர்கள், மொட்டை கடிதங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×