search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகாவில் பா.ஜ.க. நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை- தொண்டர்கள் போராட்டம்-பதட்டம்
    X

    கர்நாடகாவில் பா.ஜ.க. நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை- தொண்டர்கள் போராட்டம்-பதட்டம்

    • கர்நாடக மாநிலம் சூல்யா தாலுகா நெட்டாறு பகுதியை சேர்ந்தவர் பிரவீன்.
    • கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம் சூல்யா தாலுகா நெட்டாறு பகுதியை சேர்ந்தவர் பிரவீன்(வயது 32). இவர் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பா.ஜ.க யுவமோர்ச்சா மாவட்டச் செயலாளராக இருந்தார். மேலும் நெட்டாறு பகுதியில் சிக்கன் கடை நடத்தி வந்தார்.

    நேற்று இரவு இவர் தனது கடையை மூடிக்கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத சிலர் மோட்டார் சைக்கிளில் வந்து, கோடாரி, வாளால் அவரை சரமாரியாகத் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

    அவரின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரவீனை கொலை செய்தவர்கள் முகமூடி அணிந்து வந்துள்ளனர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் கேரள மாநிலம் பதிவு எண்களை கொண்டதாகும்.

    பிரவீன் கொலை குறித்து பெல்லாரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிரவீன் கொலைக்கு எதிராக பா.ஜ.க உறுப்பினர்கள் பலர் இரவிலிருந்து தெருவில் அமர்ந்து குற்றவாளியை விரைவில் கைது செய்ய ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். பா.ஜ.க.வினரின் போராட்டம் விடிய, விடிய நடந்தது. புத்தூரில் உள்ள மருத்துவமனை முன்பாக இந்து அமைப்பினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

    பெல்லாரே, நெட்டாரி பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. பிரவீன் கொலையை கண்டித்து புத்தூர், சூல்யா, கடப்பா தாலுகா முழுவதும் இந்து அமைப்பினர் இன்று பந்த் நடத்தினர். இதனால் அந்த பகுதி வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    பிரவீன் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தட்சிண கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த எங்கள் கட்சித் தொண்டர் பிரவீன் காட்டு மிராண்டித்தனமாகக் கொல்லப்பட்டது கண்டிக்கத்தக்கது.

    இதுபோன்ற கொடூரச் செயல்களில் ஈடுபடுபவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள். பிரவீனின் ஆத்மா சாந்தியடையட்டும். இந்த துக்கத்தைத் தாங்கும் சக்தியை அவரின் குடும்பத்தாருக்கு இறைவன் வழங்கட்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

    இதனிடையே கொலை செய்யப்பட்ட பிரவீனின் சடலத்தை புத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து பெல்லாரிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்ல அமைப்புகள் முடிவு செய்துள்ளன. நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க புத்தூர், சூல்யா மற்றும் கடப்பா தாலுகாக்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    பிரவீனின் உடல் பெல்லாரி அருகே நெட்டாரில் உள்ள வீட்டில் தகனம் செய்யப்படுகிறது. புத்தூர், பெல்லாரி, சூல்யா ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெல்லாரியில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×