search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நரபலி கொடுத்த வழக்கில் மந்திரவாதி உள்பட 2 பேருக்கு வழங்கப்பட்ட போலீஸ் காவலை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு
    X

    நரபலி கொடுத்த வழக்கில் மந்திரவாதி உள்பட 2 பேருக்கு வழங்கப்பட்ட போலீஸ் காவலை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

    • நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் உடல் 56 துண்டுகளாக வெட்டப்பட்டு, கொலையாளிகள் அதனை சமைத்து சாப்பிட்டதாகவும் கூறப்பட்டது.
    • பகவல் சிங்-லைலா தம்பதியின் வீட்டில் உள்ள பிரிட்ஜில் இருந்து சுமார் 10 கிலோ நரமாமிசமும் கைப்பற்றப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தர்மபுரியை சேர்ந்த பத்மா, எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி என்ற 2 பெண்கள் மாயமானார்கள்.

    இது தொடர்பாக எர்ணாகுளம் போலீசார் முகமது ஷபி என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பத்தினம்திட்டா, இலத்தூரை சேர்ந்த பகவல் சிங்-லைலா தம்பதியின் வீட்டில் அவர்களை கொலை செய்ததாக கூறினார்.

    அதன்பேரில் போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களை 12 நாள் காவலில் எடுத்து போலீசார் நடத்திய விசாரணையின் போது கொலை செய்யப்பட்ட 2 பேரும் நரபலி கொடுக்கப்பட்டது தெரியவந்தது.

    நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து தினமும் புதுபுது தகவல்கள் வெளியானது. நரபலி கொடுக்கப்பட்ட பெண்களின் உடல் 56 துண்டுகளாக வெட்டப்பட்டு, கொலையாளிகள் அதனை சமைத்து சாப்பிட்டதாகவும் கூறப்பட்டது.

    மேலும் பகவல் சிங்-லைலா தம்பதியின் வீட்டில் உள்ள பிரிட்ஜில் இருந்து சுமார் 10 கிலோ நரமாமிசமும் கைப்பற்றப்பட்டது.

    இதுபற்றி கொச்சி போலீஸ் கமிஷனர் நாகராஜ் கூறும்போது, இந்த வழக்கை அறிவியல் பூர்வமாக விசாரித்து வருகிறோம். சைபர்கிரைம் போலீஸ் உதவியுடன் தடயங்களையும் சேகரித்து வருகிறோம்.

    அதில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது. அதனை கோர்ட்டில் தெரிவிப்போம் என்றார்.

    இந்த நிலையில் நரபலி வழக்கில் கைதான மந்திரவாதி முகமது ஷபி, பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோர் சார்பில் கேரள ஐகோர்ட்டில் வக்கீல் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அந்த வழக்கில் மந்திரவாதி உள்பட 3 பேருக்கும் கீழ் கோர்ட்டு 12 நாள் போலீஸ் காவல் வழங்கியதை ஏற்க முடியாது. இந்த வழக்கில் போலீசார் தினமும் கட்டுக்கதைகளை கூறிவருகிறார்கள். மேலும் போலீசார் அவர்களை தொடர்ந்து சித்ரவதை செய்து வருகிறார்கள். அவர்கள் தொடர்ந்து தவறான தகவலை பரப்பி வருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். மந்திரவாதிக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×