search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டிக் டாக் மூலம் பிரபலமாகும் ஆசையில் வாழ்க்கையை இழந்த கல்லூரி மாணவி
    X

    டிக் டாக் மூலம் பிரபலமாகும் ஆசையில் வாழ்க்கையை இழந்த கல்லூரி மாணவி

    • பெண்கள் ‘டிக் டாக்’ மூலம் பாடுவது உள்ளிட்ட பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பலருடன் பழக்கம் ஏற்படுகிறது. இது சில நேரங்களில் ஆபத்தில் முடிகிறது.

    திருவனந்தபுரம்:

    சமூக வலைதளங்களில் இன்று பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் குறிப்பாக 'டிக்டாக்' வலைதளம் மூலம் 'யூ-டியூப்'பில் தங்கள் திறமைகளை பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

    ஆனால் சிலர் அதனை தவறாக பயன்படுத்தி வருவது தான் வேதனையான விஷயம். பெண்கள் 'டிக்டாக்' மூலம் பாடுவது உள்ளிட்ட பல செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது பலருடன் பழக்கம் ஏற்படுகிறது. இது சில நேரங்களில் ஆபத்தில் முடிகிறது.

    இது போல ஆபத்தில் சிக்கி வாழ்வை இழந்துள்ளார் கேரள கல்லூரி மாணவி ஒருவர். இது பற்றிய விவரம் வருமாறு:-

    திருவனந்தபுரம் அருகே உள்ள சிறையின் கீழ் பகுதியைச் சேர்ந்தவர் வினீத் (வயது 25). இவர் கேரளாவில் பிரபலமான 'டிக்டாக்' நடிகராக உள்ளார். இவர் 'டிக்டாக்'கில் எந்த வீடியோ வெளியிட்டாலும் அது சில நிமிடங்களிலேயே பெரிதாக வைரலாகிவிடும்.

    இதனால் இவரது 'டிக்டாக்' கிற்கு மவுசு அதிகம். குறிப்பாக கல்லூரி மாணவிகள், பெண்கள் இவருக்கு ரசிகைகளாக உள்ளனர். அந்த வகையில் கல்லூரி மாணவி ஒருவர், வினீத்துக்கு நெருக்கமாகி உள்ளார். இருவரும் அடிக்கடி 'வீடியோ கால்' மூலம் பேசி வந்துள்ளனர்.

    அப்போது மாணவிக்கு தெரியாமல் அவரை ஆபாசமாக வினீத் படம் எடுத்துள்ளார். இந்த நிலையில் 'டிக்டாக்'கில் பிரபலமடைவது எப்படி? என சொல்லித் தருகிறேன் என மாணவியிடம் கூறிய வினீத், அவரை திருவனந்தபுரம் வருமாறு கூறியுள்ளார்.

    இதனை நம்பிய மாணவியும் திருவனந்தபுரம் வந்தார். மாணவியை சந்தித்த வினீத், தான் கார் வாங்கப் போவதாகவும் அதற்கு உடன் வரும்படியும் கூறினார். மேலும் முகத்தை கழுவி விட்டு புத்துணர்ச்சியுடன் செல்லலாம் என லாட்ஜிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாணவியிடம், தான் வைத்திருந்த அவரது ஆபாச படங்களை காட்டியுள்ளார். இதனை பார்த்த மாணவி அதிர்ச்சி அடைந்தார். அந்த படங்களை காட்டி மாணவியை மிரட்டி வினீத் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இதற்கிடையில் வினீத்தின் செல்போனை, மாணவி பார்த்த போது பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தம்பானூர் போலீசில் மாணவி புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து வினீத்தை கைது செய்தனர்.

    அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தபோது அதில் மேலும் பல பெண்களின் ஆபாச படங்கள் இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசாரிடம் வினீத்தின் செல்போன் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அந்த செல்போனை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதற்கிடையே கைது செய்யப்பட்ட வினீத், மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து வினீத் சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×