search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    6 மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு- புகை மூட்டத்தால் மக்கள் மிகவும் அவதி
    X

    6 மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு- புகை மூட்டத்தால் மக்கள் மிகவும் அவதி

    • டெல்லியில் 20 மீட்டர் தொலைவுக்குள் வருபவர்களை மட்டுமே லேசாக காண முடிந்தது.
    • டெல்லியில் பல்வேறு இடங்களில் வெண் புகை மூட்டம் சூழ்ந்திருந்தது.

    புதுடெல்லி:

    வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக மிக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. உத்தரபிரதேசத்தில் நேற்று பனி பொழிவு புகைமூட்டத்தால் 2 இடங்களில் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு 5 பேர் பலியானார்கள்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேச மாநிலங்களில் மிக கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது.

    பனிப்பொழிவு நீடித்ததால் வட மாநிலங்களில் இன்று காலை பல முக்கிய நகரங்களில் நீண்ட நேரத்துக்கு புகைமூட்டம் காணப்பட்டது. டெல்லியில் 20 மீட்டர் தொலைவுக்குள் வருபவர்களை மட்டுமே லேசாக காண முடிந்தது. அந்த அளவுக்கு டெல்லியில் பல்வேறு இடங்களில் வெண் புகை மூட்டம் சூழ்ந்திருந்தது.

    இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். அனைத்து வாகனங்களும் முன் விளக்குகளை எரிய விட்டபடி சென்றாலும் கூட மெல்ல ஊர்ந்தபடிதான் செல்ல முடிந்தது. அமிர்தசரஸ், கங்கா நகர், பாட்டியாலா, லக்னோ நகரங்களிலும் பனிப்பொழிவும், புகைமூட்டமும் இன்று காலை மக்களை திணற வைத்தது.

    இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை தகவலில் பனிப்பொழிவு மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பஞ்சாப், டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய 4 மாநிலங்களிலும் காலை மிக மிக கடுமையான பனிப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    அதிகாலை நேரங்களில் வட மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில் வாகன போக்குவரத்து முடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் வாகனங்களில் பயணிப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    கடும் பனிப்பொழிவு காரணமாக வட மாநிலங்களில் சில இடங்களில் விமான சேவை ஒத்திவைக்கப்பட்டது. சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

    டெல்லி, பஞ்சாப் இரு மாநிலங்களிலும் தெருக்களில் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது. இதனால் காலை நீண்ட நேரம் வரை மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடந்தனர்.

    Next Story
    ×