என் மலர்
இந்தியா

ஹேமா கமிட்டி அறிக்கை மீது நடவடிக்கை எடுக்காததற்கு கேரள அரசுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்
- வழக்கில் புகார் அளித்தவர் வழக்கை தொடர விரும்பவில்லை என்றால் அதை மதிக்க வேண்டும்.
- புகாருடன் காவல் துறையை அணுகினால் 4 ஆண்டுகளுக்கு பிறகு எம்.ஐ.ஆர்.பதிவு செய்யப்படுமா?
திருவனந்தபுரம்:
மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்டவைகளை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை கமிட்டியை அரசு அமைத்தது. அதன் விசாரணை அறிக்கையில் பட வாய்ப்புக்காக பல நடிகைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இதையடுத்து நடிகைகளின் பாலியல் புகார்களின் அடிப்படையில் மலையாள திரையுலகை சேர்ந்த 10 பேர் உள்பட மொத்தம் 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
இந்தநிலையில் நடிகைகள் புகாரின் பேரில் நடிகர்கள் உள்ளிட்டவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்காக கேரள ஐகோர்ட் சிறப்பு பெஞ்ச் அமைத்தது. தற்காலிக தலைமை நீதிபதி முகமது முஸ்தாக், நீதிபதிகள் ஜெயசங்கரன் நம்பியார், சுதா ஆகியோர் அந்த பெஞ்சில் இடம்பெற்றுள்ளனர்.
ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை சிறப்பு பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஹேமா கமிட்டி அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்காத கேரள அரசுக்கு ஐகோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. விசாரணையின் போது நீதிபதிகள் கூறியதாவது:-
இந்த வழக்கில் புகார் அளித்தவர் வழக்கை தொடர விரும்பவில்லை என்றால் அதை மதிக்க வேண்டும். அறிக்கையின் ரகசியத்தன்மை பேணப்பட வேண்டும். புகார் கொடுப்பவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் மன அழுத்த சூழ்நிலை இருக்கக் கூடாது. அவர்களின் தனியுரிமை முழுமையாக பராமரிக்கப்பட வேண்டும்.
சிறப்பு புலனாய்வு குழுவின் மீது அவசர நடவடிக்கை இருக்கக் கூடாது. சிறப்பு புலனாய்வு குழுவிடம் வாக்குமூலம் அளித்தவர்கள் உள்பட தாங்கள் விசாரிக்கும் விஷயங்கள் குறித்த தகவல்களை வெளியிட வேண்டாம்.
பெரும்பான்மையான பெண்கள் பிரச்சனைகளை எதிர்கொண்ட போதிலும், அவற்றை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது வருந்தத்தக்கது.
ஹேமா கமிட்டி அறிக்கையில் உள்ள தகவல்களை வெளியிடக் கூடாது என்று கூறும்போது அந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று தான் அர்த்தம்.
இந்த விஷயத்தில் அரசு ஏன் செயலற்று மவுனமாக இருந்தது?. அரசு தரப்பில் பயங்கரமான செயலற்ற தன்மை உள்ளது. இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்காதது ஆச்சரியமாக உள்ளது. ஒரு குற்றம் நடந்திருந்தால் அதை விசாரிக்க வேண்டும் என்பது பொது அறிவு. அது நடக்கவில்லை.
பலாத்காரம் மற்றும் போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டதற்கான உண்மை அந்த அறிக்கையில் உள்ளது. புகாருடன் காவல் துறையை அணுகினால் 4 ஆண்டுகளுக்கு பிறகு எம்.ஐ.ஆர்.பதிவு செய்யப்படுமா?
இவ்வாறு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும் இந்த விவகாரத்தில் பல்வேறு உத்தரவுகளையும் ஐகோர்ட் பிறப்பித்துள்ளது.






