என் மலர்
இந்தியா

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- போக்சோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது
- மாணவி யாரிடமும் தெரிவிக்காமல் இருந்திருக்கிறார்.
- 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தனக்கு கவுன்சிலிங் அளித்தவரிடம் சப்-இன்ஸ்பெக்டர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த தகவலை தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது50). இவர் திருச்சூர் மாவட்டம் இரிஞ்சாலக்குடா ரூரல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாலா என்ற போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்தார். அப்போது 9-ம் வகுப்பு படித்த பள்ளி மாணவி ஒருவரை, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் காரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
கொடுங்கல்லூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இதனை அந்த மாணவி யாரிடமும் தெரிவிக்காமல் இருந்திருக்கிறார். இந்தநிலையில் அந்த மாணவி, சம்பவம் நடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தனக்கு கவுன்சிலிங் அளித்தவரிடம் சப்-இன்ஸ்பெக்டர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த தகவலை தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மாணவிக்கு கவுன்சிலிங் கொடுத்த ஆலோசகர், அதுபற்றி இரிஞ்சாலக்குடா மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் பற்றி விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது அவர் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவரின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரனை கொடுங்கல்லூர் போலீசார் கைது செய்தனர்.






