என் மலர்tooltip icon

    இந்தியா

    பெங்களூருவில் டெங்கு காய்ச்சல் குழந்தைகளுக்கு அதிகரிப்பு
    X

    பெங்களூருவில் டெங்கு காய்ச்சல் குழந்தைகளுக்கு அதிகரிப்பு

    • டெங்குவை கட்டுப்படுத்த பெங்களூரு நகரில் பல்வேறு இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் டாக்டர்கள் தலைமையில் டெங்கு தடுப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
    • பெங்களூருவில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை கண்டறிந்து, சுகாதார சீர்கேட்டை தடுக்கும் பணி அரசு சார்பில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெங்களூருவில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூருவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரி வார்டில் மட்டும் டெங்குவால் பாதிக்கப்பட்ட 12 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் டெங்குவை கட்டுப்படுத்த பெங்களூரு நகரில் பல்வேறு இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் டாக்டர்கள் தலைமையில் டெங்கு தடுப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. முகாமில் பொதுமக்கள் பரிசோதிக்கப்பட்டு அவர்களுக்கு சத்து மாத்திரைகள் கொடுக்கப்படுகிறது. மேலும் சாதாரண காய்ச்சல், தலைவலி, வாந்தி ஏற்பட்டுள்ளவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்கள் உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதனிடையே பெங்களூருவில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை கண்டறிந்து, சுகாதார சீர்கேட்டை தடுக்கும் பணி அரசு சார்பில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து சுகாதாரத்துரையினர் நகரின் பல்வேறு பகுதிகளில் பிளச்சிங் பவுடர் தூவியும், கொசு மருந்து அடித்தும் வருகின்றனர்.

    இதுகுறித்து கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் கூறுகையில், மாவட்ட வாரியாக சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. டெங்கு பரவல் காரணமாக பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை. பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. கொசுவை அழிக்கும் பணியில் பெங்களூரு மாநகராட்சி ஊழியர்கள், அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களின் இருப்பிடத்தை சுற்றிலும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

    Next Story
    ×