search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சீனாவை எதிர்கொள்ள லடாக்கில் 135 கிலோ மீட்டர் தூரத்துக்கு நெடுஞ்சாலை பணிகள் தொடக்கம்
    X

    சீனாவை எதிர்கொள்ள லடாக்கில் 135 கிலோ மீட்டர் தூரத்துக்கு நெடுஞ்சாலை பணிகள் தொடக்கம்

    • இந்தியா-சீனா இடையே எல்லை பகுதிகளில் பிரச்சினை இருந்து வருகிறது.
    • புதிய சாலையானது இந்திய ஆயுதப்படைகளின் திறமைக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    இந்தியா-சீனா இடையே எல்லை பகுதிகளில் பிரச்சினை இருந்து வருகிறது. குறிப்பாக லடாக் எல்லையையொட்டிய சீன பகுதிகளில் அந்த நாட்டு ராணுவம் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் சீனாவை எதிர்கொள்வதற்காக கிழக்கு லடாக் பகுதிகளில் சுற்றுலா திட்டங்களை மேம்படுத்தவும், அப்பகுதியில் முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் பெரிய அளவிலான நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இதன் ஒரு பகுதியாக கிழக்கு லடாக்கில் 135 கிலோ மீட்டர் தூரத்துக்கு முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் புதிய சாலை அமைக்கும் பணியை இந்தியா தொடங்கி உள்ளது. இந்த சாலை பாங்காங்த்சோவின் தெற்கு பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த சுசுல் மற்றும் கிழக்கு லடாக்கில் உள்ள டெம்சோக் பகுதியை இணைக்கும் முக்கிய சாலையாக அமைய உள்ளது. இது இந்தோதிபெத் எல்லை பகுதியில் முக்கிய சாலையாகவும் அமையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த சாலை அமைக்கும் பணி கடந்த 26-ந்தேதி குடியரசு தினத்தன்று அடிக்கல் நாட்டு விழாவுடன் தொடங்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளில் இந்த சாலை அமைப்பு திட்டத்தை முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    கிழக்கு லடாக் பகுதியில் இருந்து நாட்டின் 3 முக்கிய சாலைகள் இணைக்கும் வகையில் இந்த சாலை அமைய உள்ளது. இந்த சாலை கிட்டத்தட்ட சிந்து நதியை ஒட்டியே செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. சுசுல் பகுதியானது பாங்காங் ஏரிக்கு தெற்கே அமைந்துள்ளது. அதே நேரத்தில் டெம்சோக் பகுதியானது இந்திய-சீன எல்லையில் ஜீரோ கோடு வழியாக இந்தியாவின் கடைசி பகுதியில் உள்ள சிறிய கிராமம் ஆகும். இந்த சாலை அமைப்பதற்கான அனுமதியை 2016-ம் ஆண்டு அப்போதைய ஜம்மு-காஷ்மீர் அரசு வழங்கியது. இந்த திட்டம் யூனியன் பிரதேசத்தில் ஷாங்தாங் குளிர் பாலை வன வன விலங்கு சரணாலயம் வழியாக செல்கிறது.

    2017-ம் ஆண்டு இந்த சாலை அமைக்கும் திட்டம் தேசிய வன விலங்கு வாரியத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. அந்த வாரியம் சாலை பணிக்கான ஒப்புதலையும் வழங்கியது. இதைத்தொடர்ந்து 2018-ல் எல்லை சாலைகள் அமைப்பு மூலம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தற்போது பணிகள் தொடங்கி உள்ளது.

    இந்த புதிய சாலையானது இந்திய ஆயுதப்படைகளின் திறமைக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×