என் மலர்

  இந்தியா

  டெல்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மி-பா.ஜ.க கவுன்சிலர்கள் மோதல்
  X

  டெல்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மி-பா.ஜ.க கவுன்சிலர்கள் மோதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாநகராட்சி கூட்டம் நடந்தாலும், தொடர்ந்து 2 கட்சியினரும் கடும் மோதலில் ஈடுபட்டனர்.
  • ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் போலீஸ் நிலையத்தை நாடியுள்ளனர்.

  புதுடெல்லி:

  டெல்லி மாநகராட்சியில் மொத்தம் 250 வார்டுகள் உள்ளன. இங்கு அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்றால் 126 வார்டு கவுன்சிலர்களின் ஆதரவு வேண்டும்.

  இந்த மாநகராட்சிக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

  இதில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. 134 வார்டுகளில் அந்த கட்சி வெற்றி பெற்று டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது.

  எனினும், துணைநிலை கவர்னர் நியமித்த உறுப்பினர்கள் மேயர் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக எழுந்த பிரச்சனையால், தேர்தல் முடிந்து 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் மேயரை தேர்வு செய்ய முடியவில்லை.

  நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது எனக்கூறி ஆம் ஆத்மி போர்க்கொடி உயர்த்தியது. இதனால் மேயர் தேர்தலுக்காக 3 முறை மாநகராட்சி கூட்டம் நடந்தபோதும், ஆம் ஆத்மி, பா.ஜ.க. இடையே நிகழ்ந்த மோதலால் கூட்டம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு, மேயரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்தது.

  இந்நிலையில், கடந்த 17-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அளித்த உத்தரவை அடுத்து, மேயர் தேர்தலுக்காக மாநகராட்சி கூட்டம் நடத்துவதற்கு துணைநிலை கவர்னர் வி.கே. சக்சேனா ஒப்புதல் வழங்கினார். அதன்படி கடந்த 22-ந் தேதி மேயர் தேர்தல் நடந்தது.

  இதில் ஆம்ஆத்மி சார்பில் ஷெல்லி ஓபராய், பா.ஜ.க சார்பில் ரேகா குப்தா ஆகியோர் மேயர் வேட்பாளராக களமிறங்கினர். இதில் ஆம்ஆத்மி சார்பில் போட்டியிட்ட ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்றார்.

  அதன்பின்னர் துணை மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ஆலே முகமது இக்பால் வெற்றி பெற்றார். அதன்பின்னர் நிலைக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான நடைமுறை தொடங்கியது.

  நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு செல்வாக்கு இருந்ததால் பா.ஜ.க. கவுன்சிலர்கள் தேர்தலை நடத்தவிடாமல் அமளி செய்தனர். பாட்டில்கள், பேப்பர்களை சுருட்டி வீசினர்.

  கூச்சலுக்கு மத்தியில் மாநகராட்சி கூட்டம் நடந்தாலும், தொடர்ந்து 2 கட்சியினரும் கடும் மோதலில் ஈடுபட்டனர்.இரண்டு கட்சியின் கவுன்சிலர்களும் சபையின் மையப்பகுதிக்கு வந்து ஒருவைரையொருவர் அடித்தும், உதைத்தும் தாக்கி கொண்டனர்.

  ஆண் கவுன்சிலர்கள் இப்படி நடக்க, பெண் கவுன்சிலர்களும் குடுமிப்பிடி சண்டையிட்டு கொண்டனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2-வது நாளாக நேற்று மாநகராட்சி கூட்டம் தொடங்கியது. நேற்றைய கூட்டத்தில் கடும் அமளியே நிலவியது.

  இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் போலீஸ் நிலையத்தை நாடியுள்ளனர். மேயர் ஷெல்லி ஓபராய், ஷரிகா சவுத்ரி, அசு தாகூர் ஆகியோர் கம்லா மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் பாஜக கவுன்சிலர்கள் மீது புகார் செய்துள்ளனர்.

  அந்த புகாரில், பா.ஜ.கவினர் டெல்லி மாநகராட்சி நிலைக்குழு தேர்தலை நடத்தவிடாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தோடு மட்டுமில்லாமல் சபையை சேதப்படுத்தியும், ஆம் ஆத்மி கட்சியின் கவுன்சிலர்களை தாக்கியதாக கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்க உள்ளனர்.

  இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியினர் டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோராவை சந்தித்து புகார் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

  இதுபற்றி டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய் கூறியதாவது:- பா.ஜ.கவினரின் கோரிக்கையை ஏற்று நிலைக்குழு தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் தேர்தலுக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு எங்கள் கட்சி கவுன்சிலர்களையும் தாக்கினர்.

  பா.ஜ.கவை சேர்ந்த ரவி நெகி, அர்ஜூன் மார்வா, சந்தன் சவுத்ரி ஆகியோர் மேயர் இருக்கும் மேடைக்கு வந்து என்னையும் தாக்க முயன்றனர்.

  சவுத்ரி என்பவர் எனது இருக்கையை பிடித்து இழுத்தார். அப்போது அங்கு இருந்த பெண் காவலர்கள் என்னை சுற்றி நின்று பாதுகாப்பு அளித்தனர். தேர்தலை நடத்த விடாமல் அமளி மற்றும் மோதலில் ஈடுபடுவதன் மூலம் அவர்கள் தங்களின் தோல்வியை ஒப்புக்கொள்கின்றனர்'.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இருப்பினும் டெல்லி மாநகராட்சியில் நிலைக்குழு தேர்தல் பாதியில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், டெல்லி மாநகராட்சியின் நிலைக்குழு தேர்தல் தொடர்பாக பா.ஜ.க.வினர் நீதிமன்றத்தை நாட முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  Next Story
  ×