search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காஷ்மீரில் கிராமத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு- பொதுமக்கள் 4 பேர் பலி
    X

    காஷ்மீரில் கிராமத்திற்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு- பொதுமக்கள் 4 பேர் பலி

    • கிராமத்திற்குள் புகுந்து அப்பாவி பொது மக்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
    • பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும். தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும்.

    ஜம்மு:

    காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள அப்பர் டாங்ரி என்ற கிராமத்திற்குள் நேற்று இரவு பயங்கரவாதிகள் திடீரென புகுந்துள்ளனர். பின்னர் அங்குள்ள 3 வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்கள் மீதும் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர்.

    இதில் 10-க்கும் மேற்பட்டோர் துப்பாக்கி குண்டு பாய்ந்து அலறி துடித்தனர். சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இதில் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே 3 பேர் இறந்துவிட்டனர். படுகாயம் அடைந்த ஒருவரை விமானம் மூலம் ஜம்முவிற்கு கொண்டு சென்ற போது வழியிலேயே அவரும் இறந்து விட்டார்.

    இதனால் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்ந்தது. மேலும் இந்த சம்பவத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியானவர்கள் தீபக் குமார், சதீஷ்குமார், பிரீத்தம் லால் மற்றும் சிவ் பால் என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    கிராமத்திற்குள் புகுந்து அப்பாவி பொது மக்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இருந்து பயங்கரவாதத்தை ஒழிப்பதாக பாரதிய ஜனதா உறுதியளித்த நிலையில், பாதுகாப்பு விஷயத்தில் யூனியன் நிர்வாகம் தோல்வி அடைந்துவிட்டதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரவீந்தர் சர்மா குற்றம் சாட்டி உள்ளார்.

    ஜம்மு காஷ்மீரின் இயல்பு நிலை பற்றிய பாரதிய ஜனதாவின் கூற்றுகள் இந்த சம்பவத்தால் அசைக்கப்பட்டுள்ளது. அவர்கள் முதலில் காஷ்மீரிலும், இப்போது ஜம்முவிலும் சிறுபான்மை சமூகத்தை பாதுகாக்க தவறிவிட்டனர்.

    பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும். தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதே போல மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத்தின் புதிய கட்சியான தி டெமாக்ரடிக் ஆசாத் கட்சியும், ரஜோரியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    அந்த கட்சியின் மூத்த தலைவர் கூறுகையில், பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டுகிறோம் என்றார்.

    தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஜாவேத் ரானா, அப்னி கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மந்திரி சவுத்ரி சுல்பிகர் உள்பட பல்வேறு கட்சிகளும் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    ரஜோரியில் உள்ள ஆஸ்பத்திரியின் முன்பு திரண்டிருந்த ஏராளமானோர் பாகிஸ்தானிற்கு எதிராக கண்டன கோஷங்களையும், யூனியன் ஆளுனரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள்.

    இதற்கிடையே பொதுமக்கள் மீதான பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த போராட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.

    Next Story
    ×