search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் ஓடும் ரெயிலில் 3 பேர் எரித்து கொலை: பெட்ரோல் ஊற்றிய நபருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு?
    X

    ரெயில் தண்டவாளத்தில் நேரில் ஆய்வு செய்த போலீஸ் தனிப்படையினர்.

    கேரளாவில் ஓடும் ரெயிலில் 3 பேர் எரித்து கொலை: பெட்ரோல் ஊற்றிய நபருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு?

    • ஆலப்புழா - கண்ணூர் ரெயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற சம்பவத்திற்கு பின்னணியில் பயங்கரவாதிகளின் சதி திட்டம் இருக்குமோ என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.
    • கேரள போலீஸ் டி.ஜி.பி. உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கண்ணூர் செல்லும் எக்ஸ்கியூட்டிவ் ரெயில் நேற்று முன்தினம் இரவு ஆலப்புழாவில் இருந்து புறப்பட்டது.

    எலத்தூர் அருகே ரெயில் சென்ற போது டி 1 பெட்டியில் இருந்த மர்மநபர் ஒருவர் அந்த பெட்டியில் பயணம் செய்த பெண் மற்றும் பயணிகள் மீது திடீரென பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்தார். இதை பார்த்த மற்ற பயணிகள் அலறியடித்தப்படி ரெயிலின் அபாய சங்கலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.

    இதனை கண்டதும் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றிய நபர், ரெயிலில் இருந்து குதித்து தப்பியோடினார். இந்த சம்பவத்தில் ஒரு பெண், ஒரு குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள். ரெயில் கண்ணூர் வந்து சேர்ந்த பின்னர் பெட்டியில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண்ணும், குழந்தையையும் காணவில்லை.

    போலீசார் எரிக்கப்பட்டவர்களின் உடல்களை தேடிய போது, அவை தண்டவாளத்தில் கருகிய நிலையில் கிடந்தன. உடல்களை கைப்பற்றிய போலீசார், அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர்கள் யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் அவர்கள் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. மேலும் அவர்கள் ரெயில் பெட்டியில் இருந்து கீழே குதித்த போது அடிப்பட்டு இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. இதுபோல இன்னொருவரின் உடலும் அந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே பயணிகள் மீது தீ வைத்த நபரை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். இதில் சிவப்பு தொப்பி அணிந்த நபர் ஒருவர் ரெயிலில் இருந்து இறங்கி மெயின் ரோட்டிற்கு செல்வது தெரியவந்தது. அந்த நபர் சிறிது நேரம் சாலையில் காத்திருந்தார்.

    அப்போது இன்னொரு நபர் மோட்டார் சைக்கிளில் அங்கு வருகிறார். அந்த நபருடன், ரெயிலில் இருந்து குதித்த நபர் மோட்டார் சைக்கிளில் ஏறி செல்கிறார். அந்த நபர் யார்? என்பதை கண்டுபிடிக்க ரெயிலில் இருந்த பயணிகளிடம் கேட்டு போலீசார் படம் வரைந்தனர். அந்த படத்தை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி மர்மநபரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் கண்ணூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு காயங்களுடன் வடமாநில வாலிபர் ஒருவர் சிகிச்சைக்கு சென்றார். அவரை உள்நோயாளியாக தங்கி சிகிச்சை அளிக்கும்படி டாக்டர் அறிவுறுத்தினார். ஆனால் அவர் உள்நோயாளியாக தங்க மறுத்து ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறினார். இதுபற்றி டாக்டர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர்கள் விரைந்து வந்து விசாரித்த போது அந்த நபர் நொய்டாவை சேர்ந்த ஷெகரூக் ஷபி என தெரியவந்தது. அவரிடம் நடந்த முதல் கட்ட விசாரணையில் அந்த நபருக்கு ரெயிலில் பெட்ரோல் ஊற்றிய விவகாரத்தில் தொடர்பு இல்லை என தெரியவந்தது. இருப்பினும் போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே சம்பவம் நடந்த ரெயில் பெட்டியில் இருந்து போலீசார் ஒரு டைரி, செல்போன், நோட்டு புத்தகம் உள்ளிட்ட சில பொருட்களை கைப்பற்றினர். அந்த பொருட்கள் ரெயிலில் தீவைத்த நபருக்கு சொந்தமானதாக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். மேலும் அந்த நோட்டு புத்தகத்தில் இந்தி மொழியில் சில குறிப்புகள் எழுதப்பட்டிருந்தன.

    மேலும் கன்னியாகுமரி, குளச்சல், கழக்கூட்டம், சிறையின்கீழ் என்ற ஊர்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தது. சில எழுத்துக்கள் தண்ணீர் பட்டு அழிந்திருந்தது. எனவே அந்த டைரியில் எழுதப்பட்ட தகவல்கள் என்ன? என்பதை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    போலீசார் கைப்பற்றிய செல்போனில் சிம்கார்டு எதுவும் இல்லை. இதனால் மர்மநபர் சிம்கார்டை கழற்றி விட்டு செல்போனை தூக்கி வீசி இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். அந்த செல்போனின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை கண்டு பிடித்து அதில் இருக்கும் தகவல்களை மீட்டெடுக்க சைபர் கிரைம் போலீசார் முயற்சி மேற்கொண்டு உள்ளனர்.

    இதில் மர்ம நபர் பற்றிய முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    ஆலப்புழா - கண்ணூர் ரெயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற சம்பவத்திற்கு பின்னணியில் பயங்கரவாதிகளின் சதி திட்டம் இருக்குமோ என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக கேரள போலீஸ் டி.ஜி.பி. உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி மத்திய உள்துறையின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. அவர்களும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தேசிய புலனாய்வு அமைப்பினரும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோழிக்கோட்டில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் ரெயிலில் கிடைத்த பொருள்களையும் பார்வையிட்டனர். இந்த வழக்கில் பயங்கரவாதிகள் தொடர்பு இருப்பது தெரியவந்தால், என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த வழக்கை ஏற்று விசாரிக்க தொடங்குவார்கள் என தெரிகிறது.

    கேரளாவில் ஏற்கனவே மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் சம்வத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக கண்ணூர் மாவட்டத்தில் அவர்கள் அடிக்கடி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் இந்த சம்பவமும் நடந்ததா? என்பது பற்றி என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×