search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிறுமியை கடத்திய கும்பலை பிடிக்க மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை
    X

    சிறுமியை கடத்திய கும்பலை பிடிக்க மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை

    • கடத்தப்பட்ட சிறுமியை மீட்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
    • வரைபடம் அனைத்து போலீஸ நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள ஓயூர் பகுதியை சேர்ந்தவர் ரெஜி. இவரது மனைவி சிஜி. இவர்களுக்கு ஜோனதன்(வயது9) என்ற மகனும், அபிகேல் சாரா(6) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

    தினமும் மாலை பள்ளிக்கு சென்று வந்ததும், தங்களின் வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டுக்கு டியூசனுக்கு செல்வார்கள். அதேபோல் நேற்று மாலை சிறுவனும், சிறுமியும் சென்றனர். அப்போது காரில் வந்த ஒரு கும்பல், சிறுமி சாராவை கடத்திச் சென்றது.

    அநத கும்பலிடம் சிக்காமல் சிறுவன் ஜோனதன் தப்பி வீட்டுக்கு ஓடிவந்து, நடந்த சம்பவத்தை தனது தாயிடம் தெரிவித்தான். சிறுமியை மர்ம நபர்கள் காரில் கடத்திச்சென்ற சம்பவம் குறித்து பூயப்பள்ளி போலீஸ் நிலையத்துக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கடத்தப்பட்ட சிறுமியை மீட்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அது மட்டுமின்றி மாநிலம் முழுவதும் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் சிறுமி கடத்தல் தொடர்பாக தகவல் கொடுக்கப்பட்டு போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். மாநிலம் முழுவதும் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்ட னர்.

    இந்நிலையில் சிறுமியின் தாய்க்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய பெண், உங்களின் மகள் எங்களிடம் பத்திரமாக இருக்கிறார். அவரை மீண்டும் உங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றால் ரூ.5லட்சம் தரவேண்டும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

    அந்த போனின் எண்ணை வைத்து உரிமையாளரின் முகவரியை கண்டுபிடித்து அங்கு சென்றனர். அப்போது அந்த போன், பாரப்பள்ளி குளமடையில் உள்ள கடைக்காரரின் போன் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் விசாரித்த போது ஆட்டோ ரிக்சாவில் வந்த இருவர், தங்களது போனை இரவல் வாங்கி பேசிவிட்டு திரும்பி தந்துவிட்டு சென்று விட்டதாக தெரிவித்தனர்.

    ஆனால் அவர்கள் கடையில் இருந்து சற்று தூரமாகச்சென்று பேசியதால் யாரிடம் என்ன பேசினார்கள் என்பது தெரியாது என தெரிவித்தனர். கடத்தல்காரர்கள் சிக்கி விடக்கூடாது என்பதற்காக சம்பந்தம் இல்லாத கடைககாரர்களிடம் போனை வாங்கி பேசி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

    சிறுமியின் சகோதரனிடம் நடத்திய விசாரணையில் கடத்தல் கும்பலில் ஒரு பெண் உள்பட 4 பேர் இருந்தது தெரியவந்தது. மேலும் சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில் சிறுமியை கடத்த பயன்படுத்திய கார் அடையாளம் காணப்பட்டது.

    ஆனால் அதில் போலி பதிவு எண்ணை கடத்தல்காரர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதனால் அவர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டது.


    இந்நிலையில் நேற்று இரவு மேலும் ஒரு போன் அழைப்பு கடத்தல்காரர்களிடம் இருந்து சிறுமியின் தாய்க்கு வந்தது. அப்போது சிறுமியை ஒப்படைக்க ரூ.10லட்சம் வேண்டும் என்றும், போலீசிடம் செல்லக்கூடாது எனவும் கூறியுள்ளனர். அப்போதும் அவர்கள் சம்பந்தம் இல்லாத ஒரு நபரிடம் போனை வாங்கி பேசியிருக்கிறார்கள்.

    கடத்தல்காரர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதால் கடத்தல்காரர்கள் கேரளாவில் இருந்து தப்பிச்செல்ல வாய்ப்பு இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் கடத்தல்காரர்கள் பற்றி அவர்கள் போன் வாங்கிய பேசிய கடைக்காரர்கள் மற்றும் பலரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் முகக்கவசம் அணிந்து வந்தது தெரியவந்தது. சிறுமியின் சகோதரன் மற்றும் போன் கொடுத்த கடைக்காரர்கள் உள்ளிட்டோர் கூறிய தகவல்களின் அடிப்படையில் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒரு நபரின் வரைபடத்தை போலீசார் வரைந்தனர்.

    அந்த வரைபடம் கேரளாவில் உள்ள அனைத்து போலீஸ நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. அதனை வைத்து கடத்தல்காரர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    சி.சி.டி.வி. மேராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை பார்க்கும் போது, சிறுமி சாராவை கடத்தல்காரர்கள் திட்டமிட்டு கடத்திச்சென்றது உறுதியாகி இருக்கிறது. பிணயத்தொகையை உயர்த்தியபடி இருப்பதால் பணத்துக்காகவே சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

    சிறுமியின் தந்தை ரெஜி பத்தனம்திட்டாவில் உள்ள மருத்துவமனையில் ஊழியராகவும், தாய் சிஜி கொட்டியத்தில் உள்ள மருத்துவமனையில் நர்சாகவும் பணிபுரிகின்றனர். அவர்களது குழந்தைகள் தினமும் மாலையில் டியூசனுக்கு தனியாக சென்று வருவதை நோட்டமிட்டு கடத்தல்காரர்கள் சிறுமியை கடத்தி சென்றிருக்கின்றனர்.

    சிறுவன் ஜோனதனையும் கடத்தவே கடத்தல்காரர்கள் திட்டமிட்டு இருக்கின்றனர். ஆனால் அவன் அவர்களது பிடியில் சிக்காதவாறு தள்ளி நின்றதால், அவன் கடத்தல் கும்பலிடமிருந்து தப்பியிருக்கிறான். சிறுமி கடத்தப்பட்டு வெகுநேரம் ஆவதால், அவரை மீட்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை ரகசியமாக மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×