search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இலங்கை படகு-இங்கிலாந்து கப்பல் உதவியால் நடுக்கடலில் தத்தளித்த குமரி மீனவர்கள் மீட்பு
    X

    இலங்கை படகு-இங்கிலாந்து கப்பல் உதவியால் நடுக்கடலில் தத்தளித்த குமரி மீனவர்கள் மீட்பு

    • விசைப்படகில் திடீர் பழுது ஏற்பட்டதால் அதில் இருந்த மீனவர்கள் தவிப்புக்கு உள்ளானார்கள்.
    • நாங்கள் படகை நங்கூரமிட்டு நிறுத்தி இருந்த நிலையில், 23-ந் தேதி அந்த பகுதியில் புயல் காற்று வீசியது.

    திருவனந்தபுரம்:

    குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 26-ந் தேதி ஆழ்கடலில் மீன்பிடிக்க ஒரு விசைப்படகு புறப்பட்டுச் சென்றது.

    அந்த விசைப்படகில் இரவிபுத்தன்துறையைச் சேர்ந்த மீனவர்கள் வர்க்கீஸ், டைட்டஸ், ஆண்டணிதாசன், குளச்சலை சேர்ந்த விஜூ, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சின்னையன் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சிலரும் இருந்தனர். அவர்கள் ஆழ்கடலில் சாலமன் தீவு பகுதியில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் அவர்களது விசைப்படகில் திடீர் பழுது ஏற்பட்டதால் அதில் இருந்த மீனவர்கள் தவிப்புக்கு உள்ளானார்கள். அவர்கள் பெரும் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டு, இந்திய கடலோர காவல் படையால் கேரள மாநிலம் விழிஞ்சம் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

    அவர்கள் தாங்கள் கரை திரும்ப இலங்கை விசைப்படகு மற்றும் இங்கிலாந்து கப்பல் பெரும் உதவி புரிந்ததாக கூறி அதில் இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:-

    கடந்த மாதம் 4-ந் தேதி சாலமன் தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எங்களது படகின் கியர்பாக்ஸ் திடீரென பழுதானது. இதனால் படகை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து படகின் உரிமையாளர் வர்கீஸ், பழுதை சரி செய்வதற்காக அதன் பாகத்தை எடுத்துக் கொண்டு, அந்த வழியாக வந்த தேங்காப்பட்டணம் படகில் ஏறிச் சென்று விட்டார்.

    நாங்கள் படகை நங்கூரமிட்டு நிறுத்தி இருந்த நிலையில், 23-ந் தேதி அந்த பகுதியில் புயல் காற்று வீசியது. இதில் நங்கூரம் உடைந்ததால் படகு காற்றின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டது. இதனால் நாங்கள் அச்சத்திற்கு உள்ளானோம்.

    அப்போது அந்தப் பகுதியில் இலங்கை மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் எங்கள் நிலை அறிந்து தங்களது படகில் ஏற்றி, பாதுகாப்பாக அருகில் இருந்த தீவில் கொண்டு வந்து விட்டுச் சென்றனர். அந்த தீவில் சுமார் 5 நாட்கள் உணவின்றி தவிப்புக்குள்ளானோம்.

    எங்களை காப்பாற்றப் போவது யார்? என எதிர்பார்த்திருந்த நிலையில், அந்த வழியாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கிராம்பியன் என்டூரன்ஸ் என்ற பல்நோக்கு கப்பல் வந்தது. நாங்கள் சைகை காட்டி கப்பலை உதவிக்கு அழைத்தோம். அதில் இருந்தவர்கள் எங்களை காப்பாற்றி மீட்டனர்.

    பின்னர் இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விழிஞ்சம் கடற்படையினர், இந்திய சர்வதேச கடல் எல்லை பகுதிக்கு வந்தனர். அவர்களிடம் எங்களை ஒப்படைத்து விட்டு இங்கி லாந்து கப்பல் சென்று விட்டது. கடற்படையினர் எங்களை விழிஞ்சம் துறைமுகம் அழைத்து வந்தனர்.

    நாங்கள் இன்று உயிருடன் இருக்க காரணமாக இருந்த இலங்கை மீனவர்கள், இங்கிலாந்து கப்பலில் இருந்தவர்களுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டு உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதற்கிடையில் பழுதான படகின் பாகத்தை சரி செய்து எடுத்துக்கொண்டு அதன் உரிமையாளர் கடலுக்குச் சென்றார். அவருக்கு மீனவர்கள் கரை திரும்பிய விவரத்தை சேட்டிலைட் போன் மூலம் கடற்படையினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×