என் மலர்tooltip icon

    இந்தியா

    குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் டிரோன், ஏர் பலூன் பறக்க தடை
    X

    குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் டிரோன், ஏர் பலூன் பறக்க தடை

    • குடியரசு தின அணிவகுப்பில் முற்றிலும் இந்திய தயாரிப்பு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
    • இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில், இந்திய தயாரிப்பான 105 எம்.எம். ரக பீரங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.

    புதுடெல்லி:

    குடியரசு தினத்தையொட்டி, வழக்கம்போல் ஜனவரி 26-ந் தேதி டெல்லியில் பிரமாண்ட அணிவகுப்புடன் கோலாகல கொண்டாட்டம் நடைபெற உள்ளது. அதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக, டெல்லியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு:-

    குடியரசு தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க சமூக விரோத சக்திகளும், பயங்கரவாதிகளும், இந்தியாவுக்கு எதிரானவர்களும் டிரோன்கள், பாராகிளைடர்கள், ஆளில்லாத குட்டி விமானங்கள் ஆகியவற்றை பறக்கவிட்டு பொதுமக்களுக்கும், தலைவர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடும்.

    இதை கருத்தில் கொண்டு, டெல்லி வான்பகுதியில் டிரோன்கள், பாராகிளைடர்கள், ஆளில்லாத குட்டி விமானங்கள், பாரா மோட்டார்கள், ஏர் பலூன்கள் ஆகியவற்றை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 18-ந் தேதியில் இருந்து பிப்ரவரி 15-ந் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் இந்த தடை அமலில் இருக்கும்.

    தடையை மீறி, யாராவது இந்த பொருட்களை பறக்கவிட்டால், இந்திய தண்டனை சட்டத்தின் 188-வது பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதற்கிடையே, குடியரசு தின அணிவகுப்பில் முற்றிலும் இந்திய தயாரிப்பு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 21 குண்டுகள் முழங்க பழமையான 25 பவுண்டர் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

    இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில், இந்திய தயாரிப்பான 105 எம்.எம். ரக பீரங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகவலை ராணுவ உயர் அதிகாரி பாவ்னிஷ் குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

    105 எம்.எம். ரக பீரங்கிகள், 1972-ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டவை. கான்பூர் மற்றும் ஜபல்பூரில் உள்ள ஆயுத தொழிற்சாலைகளில் இவை தயாரிக்கப்பட்டன. 1984-ம் ஆண்டில் ராணுவத்தில் சேர்க்கப்பட்டன. இந்த பீரங்கிகள், இலகுரகத்தை சேர்ந்தவை.

    Next Story
    ×