என் மலர்
இந்தியா
ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் குறைத்த RBI - வீடு, வாகனக் கடன்களுக்கான EMI குறைகிறது
- இதனால் வங்கிக் கடன் வாங்குபவர்களின் வட்டி, EMI மேலும் குறைய வாய்ப்புள்ளது.
- கார் கடன், வீட்டு கடன், தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டி குறைந்து EMI குறையும்.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதமாகும். 2 மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி கூடி, ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கும்.
கடந்த பிப்ரவரி 5-ந் தேதி ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக அதாவது 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. 6.25 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா இதை அறிவித்துள்ளார்.
மும்பையில் ரிசர்வ் வங்கியின் 2025-26ம் நிதி யாண்டுக்கான நிதி கொள்கை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடந்தது. இந்த கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் மேலும் கூறியதாவது:-
ரிசர்வ் வங்கி, நிதியாண்டு 2026-க்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை முந்தைய மதிப்பீட்டான 6.7 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக குறைத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா மீது விதித்து உள்ள 104 சதவிகித வரி விதிப்பு ஆகியவை உலக வர்த்தகத்தில் பொருளாதார நிச்சயமற்றத் தன்மையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் பணவீக்கம் குறைந்து பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளதால், ரெப்போ விகிதத்தை குறைத்துள்ளோம்.
விவசாய உற்பத்தி மற்றும் வீழ்ச்சி அடைந்து வரும் கச்சா எண்ணை விலைகளை கருத்தில் கொண்டு நடப்பு நிதியாண்டுக்கான பணவீக்க கணிப்பு 4.2 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.
வளர்ந்து வரும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து ரிசர்வ் வங்கி விழிப்புடன் உள்ளது. உலக ளாவிய நிச்சயமற்ற தன்மைகள் நாணயத்தின் மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தகூடும்.
இவ்வாறு ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்தார்.
ரெப்போ விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளதால் வங்கிகள் மூலம் மக்களுக்கு அளிக்கப்படும் கடன்கள் மீதான வட்டி குறையும். ஏற்கனவே கடன் பெற்று இ.எம்.ஐ. செலுத்தி வரும் மக்களுக்கு மாதத் தவணை தொகை குறையும். வீடு, வாகன வட்டி குறையும் வாய்ப்பு ஏற்பட்டு மக்களி டம் சற்று பணம் இருக்கும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.






