search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வாகன சோதனை நடத்துவதாக ஜவுளி கடை ஊழியரிடம் ரூ.5 லட்சம் வழிப்பறி செய்த போலீஸ்காரர்
    X

    வாகன சோதனை நடத்துவதாக ஜவுளி கடை ஊழியரிடம் ரூ.5 லட்சம் வழிப்பறி செய்த போலீஸ்காரர்

    • கார் தாஜ் கிருஷ்ணா ஓட்டல் சந்திப்பு அருகே சென்றபோது போலீஸ் சீருடையில் பைக்கில் வந்த 2 பேர் காரை வழிமறித்தனர்.
    • பணப்பையில் இருந்த பணத்தை எண்ணிப் பார்த்தபோது ரூ.15 லட்சம் மட்டுமே இருந்தது. ரூ.5 லட்சம் காணாமல் போனது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலையொட்டி பணம் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க போலீசார் மற்றும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதனை பயன்படுத்தி போலீஸ்காரர் ஒருவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஜவுளிக்கடை ஊழியர்களிடம் வழிப்பறி செய்துள்ளார்.

    ஐதராபாத், பஷீர் பார்க்கை சேர்ந்தவர் பிரதீப் ஷர்மா (வயது 30). இவர் பேகம் பஜார், மெஹதி பட்டினத்தில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். அக்சய் என்பவர் ஜவுளிக்கடைகளில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ரூ.20 லட்சத்துடன் பிரதீப் சர்மா, அக்சய், பிரதீப் சர்மாவின் டிரைவர் சங்கர் ஆகியோர் காரில் பஞ்ச குட்டாவில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்வதற்காக ரூ.20 லட்சத்துடன் புறப்பட்டு சென்றனர்.

    கார் தாஜ் கிருஷ்ணா ஓட்டல் சந்திப்பு அருகே சென்றபோது போலீஸ் சீருடையில் பைக்கில் வந்த 2 பேர் காரை வழிமறித்தனர்.

    அதேபோல் போலீஸ் என எழுதப்பட்ட கார் அங்கு வந்து நின்றது. அப்போது போலீஸ் சீருடையில் வந்தவர்கள் தேர்தலையொட்டி வாகன சோதனை நடத்துகிறோம் என தெரிவித்தனர்.

    காரை சோதனை செய்தனர். காரில் இருந்த பையில் ரூ.20 லட்சம் இருந்ததால் கருப்பு பணமா என விளக்கம் கேட்டு விட்டு கைராபாத் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே பிரதீப் சர்மா உட்பட 3 பேரையும் அழைத்துச் சென்றனர்.

    பின்னர் பணப்பையை பிரதீப் சர்மாவிடம் கொடுத்துவிட்டு சென்றனர். பணப்பையில் இருந்த பணத்தை எண்ணிப் பார்த்தபோது ரூ.15 லட்சம் மட்டுமே இருந்தது. ரூ.5 லட்சம் காணாமல் போனது. இதுகுறித்து பிரதீப் சர்மா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் போலீஸ் சீருடைகள் வந்து பணத்தை பறித்து சென்றதாக சந்தேகம் அடைந்தனர்.

    மேலும் போலீசார் பணம் வழிப்பறி நடந்த இடங்களில் பொருத்தப்பட்டு கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது வழிப்பறிக்கு பயன்படுத்தியது கமிஷனர் அலுவலகத்தில் உள்ள இன்ஸ்பெக்டரின் கார் என தெரிய வந்தது. வழிப்பறியில் ஈடுபட்ட நபர் ஆயுதப்படையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டரின் கார் டிரைவர் என கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் ஆயுதப்படை போலீஸ்காரர் கைது செய்தனர்.

    மேலும் அவருடன் வந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீஸ்காரர் ஒருவரே நண்பர்களுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×