என் மலர்
இந்தியா

நாடு முழுவதும் 1000 ஐ.டி.ஐ.களை மேம்படுத்துவதே எங்கள் இலக்கு- பிரதமர் மோடி பேச்சு
- 1,200 தொழில் திறன் ஆய்வகங்களையும் மோடி திறந்து வைத்தார்.
- புதிதாகப் பணியமர்த்தப்பட்ட 4,000-க்கும் அதிகமானவர்களுக்கு பணி நியமனக் கடிதங்களையும் பிரதமர் வழங்கினார்.
புதுடெல்லி:
பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு இந்த மாதம் அல்லது நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் வருகிற 6 அல்லது 7-ந்தேதி அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தேர்தல் நடைபெற உள்ள பீகார் மாநிலத்துக்கு பிரதமர் மோடி இன்று பல்வேறு திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார்.
டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று காலை நடைபெற்ற விழாவில் அவர் இளைஞர்களை மையமாக கொண்ட ரூ.62 ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார். அகில இந்திய அளவில் ஐ.டி.ஐ.யில் முதல் 46 இடங்களை பிடித்தவர்களை மோடி பாராட்டினார்.
ரூ.60,000 கோடி முதலீட்டில் மத்திய நிதியுதவி பெறும் திட்டமான பி.எம்-சேது (மேம்படுத்தப்பட்ட ஐ.டி.ஐ.கள் மூலம் பிரதமரின் திறன் அளித்தல் மற்றும் வேலைவாய்ப்பில் மாற்றம் செய்தல்) திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் நாடு முழுவதும் உள்ள 1,000 அரசு ஐ.டி.ஐ.களை கொண்டது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதல் கட்டத்தில் பாட்னா, தர்பங்காவில் உள்ள ஐ.டி.ஐ.களில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
400 நவோதயா வித்யாலயாக்கள் மற்றும் 200 ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ள 1,200 தொழில் திறன் ஆய்வகங்களையும் மோடி திறந்து வைத்தார். 1,200 தொழில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதும் இந்தத் திட்டத்தில் அடங்கும்.
பீகாரின் புதுப்பிக்கப்பட்ட முதல்-மந்திரியின் சுய உதவித்தொகை உறுதித் திட்டத்தைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
இதன்படி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் பட்டதாரி இளைஞர்கள் 2 ஆண்டுகளுக்கு தலா ரூ.1,000 மாதாந்திர உதவித்தொகை பெறுவார்கள். மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பீகார் மாணவர் கடன் அட்டைத் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
தொழில் சார்ந்த படிப்புகள் மற்றும் தொழிற்கல்வியை வழங்க பீகாரில் உள்ள ஜன் நாயக் கற்பூரி தாக்கூர் திறன் பல்கலைக்கழகத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். பீகாரின் 4 பல்கலைக் கழகங்களில் புதிய கல்வி மற்றும் ஆராய்ச்சி வசதிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மொத்தம் ரூ.160 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 27,000-க்கும் அதிகமான மாணவர்களுக்கு இதில் பயன் கிடைக்கும்.
பீகாரில் புதிதாகப் பணியமர்த்தப்பட்ட 4,000-க்கும் அதிகமானவர்களுக்கு பணி நியமனக் கடிதங்களையும் பிரதமர் வழங்கினார். மேலும் முதலமைச்சரின் சிறார் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 9 மற்றும் 10-ம் வகுப்பு பயிலும் 25 லட்சம் மாணவர்களுக்கு நேரடிப் பயன் பரிமாற்றத்தின் மூலம் ரூ.450 கோடி உதவித்தொகையை பிரதமர் மோடி வழங்கினார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் அரசு ஐ.டி.ஐ மாணவர்களுக்கு பெரிய அளவில் பட்டமளிப்பு விழா என்ற புதிய பாரம்பரியத்தை தொடங்கியது. இந்த பாரம்பரியத்தில் மற்றொரு மைல் கல்லை நாம் அனைவரும் காண்கிறோம்.
இன்றைய விழா திறன்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை குறிக்கிறது. நாடு முழுவதும் இளைஞர்களுக்காக கல்வி மற்றும் திறன்மேம்பாட்டு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் 1,000 ஐ.டி.ஐ.களை மேம்படுத்துவதே எங்கள் இலக்காகும். பட்டதாரிகளுக்கு மாத உதவி தொகை ரூ.1000 வழங்கப்படுகிறது. இந்த திட்டங்கள் மாணவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கான உத்தரவாதமாகும்.
பீகார் அதிக இளைஞர் மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் ஒன்றாகும். எனவே, பீகாரின் இளைஞர்களின் ஆற்றல் அதிகரிக்கும் போது, நாட்டின் பலமும் இயல்பாகவே அதிகரிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் மட்டும், பீகார் இளைஞர்களுக்கு சுமார் 10 லட்சம் நிரந்தர அரசு வேலைகள் வழங்கப்பட்டு உள்ளன. பீகார் இளைஞர்களின் திறனை மேலும் மேம்படுத்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. ஆர்.ஜே.டி-காங்கிரஸ் ஆட்சியுடன் ஒப்பிடும்போது பீகாரின் கல்வி பட்ஜெட் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது
பீகாரில் விளையாட்டு தொடர்பான சர்வதேச அளவிலான உள்கட்டமைப்பு கூட இல்லாத ஒரு காலம் இருந்தது. இன்று, பீகாரில் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.






