search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்தது நான் அல்ல- கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் பரபரப்பு தகவல்
    X

    விமானத்தில் பெண் மீது சிறுநீர் கழித்தது நான் அல்ல- கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் பரபரப்பு தகவல்

    • பாதிக்கப்பட்ட பெண் ஏர் இந்தியா தலைவருக்கு புகார் கடிதம் அனுப்பியபிறகுதான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
    • கைது செய்யப்பட்ட வங்கி அதிகாரியின் ஜாமீன் மனுவை நீதிபதி நிராகரித்தார்.

    புதுடெல்லி:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி வந்து கொண்டிருந்தது. அப்போது பிஸினஸ் வகுப்பில் பயணம் செய்த ஷங்கர் மிஸ்ரா என்பவர், சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார். சிறுநீர் கழித்த நபர் மது போதையில் இருந்தார். இதுதொடர்பாக ஏர் இந்தியா விமானப் பணிப்பெண்களிடம் அந்த பெண் புகார் தெரிவித்தார். இதையடுத்து அந்த பெண்ணுக்கு புதிய ஆடைகளை வழங்கிய பணிப்பெண்கள் அதே இருக்கையிலேயே அமருமாறு தெரிவித்தனர். விமான இருக்கைகள் முழுவதும் நிரம்பியிருந்ததால் அவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். அந்த பெண்ணும் வேறு வழியின்றி பயணித்துள்ளார்.

    பின்னர் விமானம் டெல்லியில் தரையிறங்கியதும், தவறு செய்த நபர் மீது எந்த நடவடிக்கையையும் ஏர் இந்தியா நிர்வாகம் எடுக்கவில்லை. இது அந்த பெண்ணுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து ஏர் இந்தியாவை நடத்தும் டாடா குழுமத் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு அந்த பெண் புகார் கடிதம் எழுதினார். இதன்பிறகுதான் இந்த முகம் சுளிக்க வைக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. பெண் பயணியிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட வங்கி அதிகாரியான சங்கர் மிஸ்ரா என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. அவரது ஜாமீன் மனுவையும் நீதிபதி நிராகரித்தார்.

    இந்த நிலையில், ஷங்கர் மிஸ்ராவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி டெல்லி நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணையின் போது ஷங்கர் மிஸ்ரா தரப்பில் பெண் மீது சிறுநீர் கழிக்கவில்லை என்ற வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது. அந்த வயதான பெண்மணிக்கு உடல்நல பாதிப்பு இருந்ததாகவும் இதன் காரணமாகவே அந்த பெண்ணே சிறுநீர் கழித்ததாகவும் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×