search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெங்களூருவில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் - தலைவர்களை வரவேற்கும் பேனர்கள்
    X

    பெங்களூருவில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் - தலைவர்களை வரவேற்கும் பேனர்கள்

    • பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
    • பெங்களூருவில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஆம் ஆத்மி கட்சியும் பங்கேற்கிறது.

    பெங்களூரு:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார், துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையே, கடந்த மாதம் 23-ம் தேதி காங்கிரஸ், தி.மு.க., ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பீகார் தலைநகர் பாட்னாவில் கூடி ஆலோசனை நடத்தினர். அதில் பாராளுமன்ற தேர்தலை ஓரணியில் திரண்டு எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர்களின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இன்றும், நாளையும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பெங்களூரு தாஜ் வெஸ்ட் எண்டு ஓட்டலில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

    இதையொட்டி இன்று மாலை 6 மணிக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூடுகிறார்கள். அப்போது தலைவர்களுக்கு விருந்து அளிக்கப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர்களின் முக்கிய ஆலோசனை கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடக்கிறது.

    காங்கிரஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 24 கட்சிகள் பங்கேற்கின்றன.

    எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறும் ஓட்டலுக்கு முன்புறத்தில் தலைவர்களை வரவேற்கும் வகையில் அவர்களின் உருவ படங்கள் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளன. அந்த ஓட்டல் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, கூட்டணிக்கு என்ன பெயர் சூட்டுவது, குறைந்தபட்ச பொது செயல் திட்டங்களை உருவாக்குவது, ஒருவேளை எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால் பிரதமராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த கூட்டம் நடைபெறும் தேதி மற்றும் இடம் ஆகியவை தற்போது நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.

    Next Story
    ×