என் மலர்
இந்தியா

பட்டாம்பூச்சிகளுக்காகவே ஒரு பூங்கா: சுற்றுலா பயணிகளை ஈர்க்க ஒடிசா அரசு திட்டம்
- 155 ஏக்கர் பரப்பளவில் உள்ளது புதராஜா காட்டுப்பகுதி.
- பட்டாம்பூச்சிகள் இனப்பெருக்கத்திற்கு சாதகமான பல செடிகளும், ஓடும் நீரும் ஏற்கெனவே இங்கு உள்ளது.
இந்தியாவின் கிழக்கில் வங்காள விரிகுடா கடற்பகுதியில் உள்ள மாநிலம் ஒடிசா.
பழங்குடியினரின் கலாச்சாரங்களுக்கும், பல இந்து கோயில்களுக்கும் புகழ் பெற்ற இந்த மாநிலத்தில் உள்ள மகாநதி கரையோரம் உள்ளது சம்பல்பூர் நகரம்.
சம்பல்பூரில், 155 ஏக்கர் பரப்பளவில் உள்ள புதராஜா வனப்பகுதி ஒரு முக்கியமான சுற்றுலா மையமாகும். அங்குள்ள ஒரு மலை மேல் உள்ள சிவன் கோயிலில் இருந்து அந்த நகரம் முழுவதையும் காண முடியுமென்பதால், விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதுண்டு.
இந்த வனப்பகுதியில் பட்டாம்பூச்சிகளுக்கான ஒரு மிக பெரிய பூங்காவை உருவாக்க அந்த மாநில அரசு முடிவெடுத்திருக்கிறது.
இது குறித்து இவ்வனப்பகுதிக்கான வனத்துறை அதிகாரி நீலன்னவர் தெரிவித்ததாவது:-
ரூ.25 லட்சம் திட்ட மதிப்பில் உருவாக்கப்படும் இது ஒரு திறந்தவெளி பூங்காவாக இருக்கும். பட்டாம்பூச்சிகள் இனப்பெருக்கம் செய்வதற்கு உதவும் வகையில் ஏற்கெனவே இங்கு பல செடிகளும், ஓடும் நீரும் அதிகம் உள்ளது. இதை மேம்படுத்தும் வகையில் தேன் அதிகம் உள்ள நூற்றுக்கணக்கான செடி வகைகள் அங்கு பயிரிடப்பட்டு அதன் மூலம் பட்டாம்பூச்சிகள் ஈர்க்கப்படும்.
அந்த பூங்காவில் அனைவரையும் கவரும் வகையில் அழகூட்டும் வேலைகளும் செய்யப்படும். பல்வேறு வகையான பட்டாம்பூச்சிகளின் வசிப்பிட, உணவு, மற்றும் இனப்பெருக்க தேவைகளுக்கு வசதியான ஒரு பூங்காவாக இது அமையும். இதன் மூலம் அடுத்த சில வருடங்களில் அவற்றின் இனம் பன்மடங்காக பெருகவும், அதன் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவம் கிடைக்கவும் இது பயன்படும். இதற்கான வரைபடம் ஓரிரு நாட்களில் தயாராகி விடும். மழைக்காலம் முடிந்ததும் பணிகள் தொடங்கப்படும். இந்த டிசம்பர் இறுதிக்குள் பூங்கா மக்களின் பார்வைக்கு திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுற்றுலா பயணிகளை, அதிலும் குறிப்பாக குழந்தைகளை, ஈர்க்கும் பூங்காவாக அமைவது மட்டுமல்லாமல், இப்பூங்கா இப்பகுதியில் சுற்றுச்சூழல் சமநிலைக்கும் உதவும் என சுற்றுச்சூழல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.






