search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில்  44 பேர் கைது
    X

    படப்பையில் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சகாபுதீனை போலீசார் அழைத்து சென்ற காட்சி.

    தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் 44 பேர் கைது

    • திருப்பூர் குமார்நகரை அடுத்த வலையங்காடு பகுதியில் உள்ள நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
    • கைதானவர்களிடம் இருந்து செல்போன்கள், சிம்கார்டுகள், போலி ஆதார் மற்றும் பான் கார்டுகள் மற்றும் வெளிநாட்டு பணம் கைப்பற்றப்பட்டு உள்ளன.

    புதுடெல்லி:

    வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை, ஒரு கும்பல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு கொத்தடிமைகளாக விற்பனை செய்துள்ளனர்.

    அவர்களுக்கு இந்தியாவை சேர்ந்தவர்களை போல போலியான ஆதார் அட்டை தயாரித்து சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் பணிக்கு அமர்த்தி உள்ளனர். இது தொடர்பாக புகார் எழுந்துள்ளது.

    அதன் அடிப்படையில் போலி அடையாள அட்டை தயாரித்து வெளிநாட்டினரை இந்தியாவுக்குள் ஊடுருவ வைத்த கும்பலை கைது செய்ய என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்கள் உள்பட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.

    இதேபோல் புதுச்சேரி, திரிபுரா, காஷ்மீர், அசாம், மேற்கு வங்காளம், கர்நாடகம், தெலுங்கானா, அரியானா மற்றும் ராஜஸ்தான் என மொத்தம் 10 மாநிலங்களில் 55 இடங்களில் நேற்று ஒரே நாளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினர்.

    இந்த சோதனையின்போது அதிகாரிகளுடன், அந்தந்த மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தமிழ்நாட்டை பொறுத்தவரை காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியில் உள்ள ஒரு ஜூஸ் கடையில் நேற்று அதிகாலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு வேலை பார்த்து வந்த சகாபுதீன் (வயது 28) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

    அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி விசாரணையில் வங்காளதேசத்தை சேர்ந்த அவர், போலி ஆதார் அட்டை மூலம் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கூறி வேலைக்கு சேர்ந்தது தெரியவந்தது.

    இவர் கடந்த சில மாதங்களாக அதே கடையின் மாடியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள கோவிந்தாபுரம் பகுதியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 10 பேர் நேற்று காலை ஒரு வீட்டில் திடீரென சோதனையில் இறங்கினர். அப்போது அங்கு தங்கியிருந்த முன்னா, மியான் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர்.

    முதல்கட்ட விசாரணையில் வங்காளதேசத்தை சேர்ந்த முன்னா திரிபுரா மாநிலத்தில் வசிப்பது போல ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதார் கார்டுகளை போலியாக தயாரித்து வைத்திருந்ததும், கோவிந்தாபுரம் பகுதியில் உள்ள ஒரு ஜூஸ் கடையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து முன்னாவை கைது செய்தனர்.

    சென்னை பள்ளிக்கரணை பகுதியிலும் சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.

    இதேபோல் திருப்பூர் குமார்நகரை அடுத்த வலையங்காடு பகுதியில் உள்ள நிறுவனத்திலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வங்காளதேச நபரின் புகைப்படத்தை அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் காண்பித்து அந்த நபர் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேடுதல் வேட்டை நடைபெற்றது. ஆனால் வங்காளதேச நபர் தங்கியிருக்கும் இடம் மற்றும் அவர் வேலை செய்யும் நிறுவனம் குறித்த முழுமையான விவரங்கள் கிடைக்காததால் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

    அதேபோல் பல்லடம் அறிவொளிநகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர். அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் பெயர் பதிவு கொண்ட பட்டியலை ஆய்வு செய்தனர். அப்போது அதிகாரிகள் தேடி வந்த வங்காளதேச நபர் சில மாதங்களுக்கு முன்பே வேலையை விட்டு நின்று விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் வங்காளதேசம் சென்று விட்டாரா? அல்லது வேறு நிறுவனங்களில் வேலை செய்கிறாரா? என்று அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    அதன்பின்னர் ஆறுமுத்தாம்பாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்திற்கு சென்ற அதிகாரிகள் வங்காளதேசத்தை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட நபரின் பெயரை சொல்லி அவர் வேலை செய்கிறாரா? என்று ஆய்வை மேற்கொண்டனர். ஆனால் அவரும் பணியில் இருந்து நின்றுவிட்டதாக தெரியவந்தது. இதையடுத்து குறிப்பிட்ட நபர்கள் மீண்டும் அந்த பகுதியில் நடமாடினால் தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்திச்சென்றனர்.

    புதுச்சேரி 100 அடி ரோட்டில் எல்லைப்பிள்ளைச்சாவடியில் உள்ள பழைய பொருட்கள் வைக்கும் குடோனுக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 பேர் உள்ளூர் போலீசார் உதவியுடன் நேற்று சென்றனர்.

    அப்போது அங்கு பதுங்கியிருந்த வாலிபர் ஒருவர் தப்பி ஓட முயற்சி செய்தார். உடனே என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் வைத்திருந்த ஆதார் அட்டையை கைப்பற்றி சோதனை செய்தபோது, கொல்கத்தாவை சேர்ந்த எஸ்.கே.பாபு (வயது 26) என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    அவர் புதுச்சேரியில் கட்டிட வேலை செய்ததும் தெரியவந்தது. அவரிடம் அதிகாரிகள் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். அவர் பயன்படுத்திய செல்போன், 3 சிம் கார்டுகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பலவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அவரை கைது செய்து போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏற்றி கோரிமேட்டில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு அழைத்துச்சென்றனர். புதுச்சேரியில் அவருடன் வேறு யாராவது தொடர்பில் உள்ளனரா? வெளிநாடுகள், இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் துருவி துருவி விசாரித்தனர்.

    மேலும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தஞ்சம் அடைந்தவர்களுக்கு, போலியான அடையாள அட்டை தயாரித்து தென் இந்தியாவில் யாராவது கட்டுமான வேலைகளில் ஈடுபடுகிறார்களா? என்றும் விசாரணை நடத்தினர்.

    அவர் வைத்திருந்த ஆதார் அட்டை எண்ணை போலீசார் சரிபார்த்தபோது, அதுபற்றிய தகவல் எதுவும் தெரியவில்லை. எனவே அது போலியான ஆதார் அட்டையா? என்றும் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது உண்மையான பெயர் பாபு என்பது தானா? என்ற கோணத்திலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    கைதானவர் வங்காளதேசத்தை சேர்ந்தவரா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. எனவே மேல் விசாரணைக்காக அவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று மாலை சென்னைக்கு அழைத்து வந்தனர்.

    இதற்கிடையே நேற்று நடந்த சோதனை தொடர்பாக என்.ஐ.ஏ. சார்பில் மாலையில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

    ஆள்கடத்தல் தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 10 மாநிலங்களில் 55 இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக தமிழ்நாட்டில் 2 பேரும், புதுச்சேரியில் ஒருவரும், திரிபுராவில் 21 பேரும், கர்நாடகாவில் 10 பேரும், அசாமில் 5 பேரும், மேற்கு வங்காளத்தில் 3 பேரும், தெலுங்கானா, அரியானாவில் தலா ஒருவரும் என மொத்தம் 44 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    கைதானவர்களிடம் இருந்து செல்போன்கள், சிம்கார்டுகள், போலி ஆதார் மற்றும் பான் கார்டுகள், ரூ.20 லட்சம் ரொக்கம் மற்றும் வெளிநாட்டு பணம் கைப்பற்றப்பட்டு உள்ளன.

    இவ்வாறு என்.ஐ.ஏ. சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×