search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநிலங்களில் 50 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை
    X

    பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநிலங்களில் 50 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை

    • இந்திய தூதரக உயர் அதிகாரியை கனடா அரசு நாட்டை விட்டு வெளியேற்றியது.
    • காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புக்கும் தொடர்பு இருப்பது குறித்த ஆதாரங்களை என்.ஐ.ஏ. சேகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    கனடாவில் இருந்து செயல்படும் காலிஸ்தான் புலிகள் படையின் தலைவரும், காலிஸ்தான் பயங்கரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி கனடாவில் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவத்துக்கு, இந்தியா மீது கனடா குற்றம் சுமத்தியதால் இரு நாடுகள் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    தொடர்ந்து இந்திய தூதரக உயர் அதிகாரியை கனடா அரசு நாட்டை விட்டு வெளியேற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் கனடா தூதரக உயர் அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேற்றியது. மேலும் கனடா நாட்டினருக்கு விசா வழங்குவதை மத்திய அரசு நிறுத்தி உள்ளது.

    இந்த நிலையில் ஹர்தீப் சிங் நிஜாருக்கு சொந்தமான பஞ்சாப் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள சொத்துகள், சீக்ஸ் பார் ஜஸ்ட்டிஸ் அமைப்பின் தலைவர் குருபத்வந்த் சிங்குக்கு சொந்தமான சண்டிகர் வீடு ஆகியவற்றை என்.ஐ.ஏ. முடக்கியது. மேலும் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் 19 பேரின் சொத்துகளை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்க மத்திய அரசு முடிவு செய்தது.

    இந்நிலையில், காலிஸ்தான் பயங்கரவாதிகள் ஸ்பான்சர் விசாக்கள் மூலம் இந்திய இளைஞர்களை மூளைச்சலவை செய்து கனடாவுக்கு அழைத்துச் சென்று காலிஸ்தான் படையை உருவாக்க முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    பஞ்சாப், அரியானா, சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளில் வேலை இல்லாமல் பரிதவித்து வரும் இளைஞர்களைக் குறிவைத்து அவர்களுக்கு மூளைச்சலவை செய்யும் பணியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு எந்தவித செலவும் வைக்காமல் ஸ்பான்சர் விசாக்களை தயார் செய்து, கனடாவுக்கு அழைத்துச் சென்று குருத்வாராக்களில் பணி, நடுத்தர திறன் படைத்த வேலை போன்றவற்றில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் சேர்த்து விட்டுள்ளனர்.

    இந்த சூழ்நிலையில் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் நடவடிக்கை இந்தியாவில் தொடர்வதை தடுக்கும் வகையில் இன்று அதிகாலை முதல் 6 மாநிலங்களில் 50 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பஞ்சாபில் 30 இடங்கள், ராஜஸ்தானில் 13 இடங்கள், அரியானாவில் 4 இடங்கள், உத்தரகாண்டில் 2 இடங்கள், டெல்லி-என்சிஆர் மற்றும் உ.பி.யில் தலா 1 இடங்களில் சோதனைகள் நடந்து வருகின்றன.

    பயங்கரவாதிகளுக்கும் போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கும் இடையிலான உறவை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தில் என்.ஐ.ஏ. இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்தியாவில் உள்ள பயங்கரவாத அமைப்பினர், ஹவாலா மூலம் வெளிநாடுகளில் வசிக்கும் பயங்கரவாதிகள் மற்றும் கும்பல்களுக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை சப்ளை செய்கின்றனர்.

    காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புக்கும் தொடர்பு இருப்பது குறித்த ஆதாரங்களை என்.ஐ.ஏ. சேகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாகவே சோதனை நடைபெற்று வருகிறது.

    காலிஸ்தான் ஆதரவு இயக்கங்கள் மீதான கனடா அரசின் மென்மையான போக்கின் காரணமாக அவர்கள் அங்கு அதிக வளர்ச்சி பெற்று வருகின்றனர். மேலும் கனடாவில் வசிக்கும் இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தோரை மிரட்டுவதற்கும், அங்குள்ள குருத்வாராக்களை சேதப்படுத்தி அச்சுறுத்துவதற்கும் இளைஞர்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

    கடந்த 50 ஆண்டுகளாகவே கனடா மண்ணில் பயங்கரவாத, பிரிவினைவாத நடவடிக்கைளில் காலிஸ்தான் ஆதரவு சக்திகள் ஈடுபட்டு வருகின்றன என்கின்றனர் இந்திய அதிகாரிகள்.

    Next Story
    ×