search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேசிய பொறியாளர் தினம் இன்று..
    X

    தேசிய பொறியாளர் தினம் இன்று..

    • பொறியாளர்களுக்கென ஒரு தினம் கொண்டாட காரணமாக இருப்பவர் இந்தியாவின் புகழ்பெற்ற பொறியாளர் விஸ்வேஸ்வரய்யா.
    • துறைமுகங்களில் கடல் அரிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான தடுப்பு அமைப்புகளை உருவாக்கினார்.

    பொறியாளர்கள்... இந்தியாவில் ஒரு கால கட்டத்தில் பொறியியல் படிப்பிற்கென தனி மவுசு இருந்தது. மருத்துவப் படிப்பிற்கு பிறகு மாணவர்கள் மத்தியில் பொறியியல் படிப்பு அவ்வளவு முக்கியத்துவமாக இருந்தது. பொறியியல் படிப்பு படித்தால் லைஃப் செட்டில் என்றிருந்தது.

    தகவல் தொழில்நுட்பம் நுழைந்த பிறகு பொறியாளர்கள் இல்லாத குடும்பமே இல்லை என்று சொல்லலாம். எஞ்ஜீனியர் முடித்து ஐ.டியில் வேலையா.. மாப்பிள்ளை செலக்டட்..


    அந்த மாதிரி, மாப்பிள்ளைக்கு பொண்ணு கொடுப்பது முதல் வங்கியில் லோன் கொடுப்பது வரை பொறியியல் படிப்புக்கு என முன்னுரிமை வழங்கப்பட்டது.

    இதனால், பொறியியல் கல்லூரிகளும் பெருகியது. மாணவர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு பொறியியல் படிப்பு பிரிவுகளை தேர்வு செய்தனர். ஆனால், அது ஒரு கட்டத்தில் பொறியாளர்களுக்கு வேலை இல்லை என்ற நிலைமைதான் உருவாக்கியது. மாணவர்களும் பொறியியல் படிப்பை தவிர்த்து கலை மற்றும் அறிவியல் படிப்புகளை தேர்வு செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

    இதனால், பொறியியல் கல்லூரிகளில் சீட் கிடைக்காத நிலை போய் நிறைய கல்லூரிகளில் சீட் கொடுக்கிறோம் வாங்க என்றாலும் சேர ஆளில்லாமல் போனது.

    பொறியாளர் படிப்பை முடித்த பெரும்பாலோர் சம்பந்தமே இல்லாத வேறு துறைகளில்தான் வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டது. திரைப்படங்களிலும், மீம்களிலும் பொறியாளர்களை கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

    இப்படி ஒரு சூழலில்.. பொறியாளர் என்றால் யார்..? பொறியாளர் தினத்தின் வரலாறு என்ன என்பதை நான் பார்க்கலாம்...


    இந்தியாவில் பொறியாளர்கள் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 15ம் தேதி (இன்று) கொண்டாடப்பட்டு வருகிறது.

    பொறியாளர்களுக்கென ஒரு தினம் கொண்டாட காரணமாக இருப்பவர் இந்தியாவின் புகழ்பெற்ற பொறியாளர் விஸ்வேஸ்வரய்யா. 1860-ம் ஆண்டில் பிறந்த இவரது பிறந்தநாளையே தேசிய பொறியாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இது இவருடைய 163வது பிறந்தநாள் ஆகும். பொறியியல் துறையின் தந்தையாக போற்றப்படும் விஸ்வேஸ்வரய்யா கர்நாடக மாநிலத்தில் உள்ள முட்டனஹள்ளி கிராமத்தில் பிறந்தார்.

    இவரது முழு பெயர் மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா. இவருடைய பூர்வீகம் ஆந்திரா மாநிலத்தின் மோக்சகுண்டம் பகுதி என்பதால் இவருக்கு இந்த பெயர் சூட்டப்பட்டது.

    சிறிய வயதிலேயே தந்தையை இழந்த இவர், பெரும் கஷ்டத்தில்தான் பள்ளி படிப்பை முடித்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தையும், புனே அறிவியல் கல்லூரியில் கட்டிடப் பொறியியல் பட்டத்தையும் பெற்றார்.

    அரசுப் பணியாளராக சேர்ந்த பிறகு விஸ்வேஸ்வரய்யா, பொறியியல் மீது இருந்த காதலால் புதிய படைப்புகளை உருவாக்குவதிலும், புதிய செயல்முறைகளை செய்து பார்ப்பதிலும் மிகுந்த ஆர்வமாக இருந்தார்.


    அதன்படி, விஸ்வேஸ்வரய்யா பாசனத்துக்கான புதிய முறையை உருவாக்கினார். தானியங்கி வெள்ள மதகை உருவாக்கி, நீர்த்தேக்கத்தில் பயன்படுத்தி வெற்றி பெற்றார். வெள்ளத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான திட்டத்தையும் வகுத்தார்.

    துறைமுகங்களில் கடல் அரிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான தடுப்பு அமைப்புகளை உருவாக்கினார்.

    ஆசியாவிலேயே மிகப் பெரிய அணையாக இருந்த காவிரி ஆற்றின் குறுக்கே இவர் கட்டிய கிருஷ்ணராஜ சாகர் அணை விஸ்வேஸ்வரய்யாவுக்கு மிகப்பெரிய புகழைத் தேடித் தந்தது.

    அரசாங்க வேலையை விட்டுவிட்டு மைசூர் மன்னரின் திவானாகப் பணியாற்றினார். பத்ராவதி எஃகு ஆலை, மைசூர் பல்கலைக்கழகம், தொழிற்சாலைகள், அரசு பொறியியல் கல்லூரி போன்றவைகளை உருவாக்கினார்.

    பொறியியல் துறையின் தந்தை மட்டுமல்லாமல், ஆங்கிலேயர்களால் "நைட் கம்மாண்டர்" மற்றும் இந்திய அரசின் "பாரத ரத்னா" ஆகிய பட்டங்களும் இவருடைய சேவைகளைப் பாராட்டி வழங்கப்பட்டது.

    "இந்தியப் பொறியியலின் தந்தை", "நவீன மைசூர் அரசின் தந்தை" என்று கொண்டாடப்படும் விஸ்வேஸ்வரய்யா 1962ம் ஆண்டு தனது 101வது வயதில் மறைந்தார்.

    பொறியாளர் என்பவர்கள் வேலை தேடி செல்பவர்கள் அல்ல.. உருவாக்குபவர்கள் என்பதற்கு விஸ்வேஸ்வரய்யா ஓர் எடுத்துக்காட்டு. பொறியியல் துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதை ஒரு பட்டமாக மட்டும் பார்க்காமல் தங்களது யோசனைகளையும், திறமைகளையும் முழு அர்ப்பணிப்புடன் செயலில் காண்பித்தால் நீங்களும் சிறந்த பொறியாளர்களே..!

    Next Story
    ×