என் மலர்tooltip icon

    இந்தியா

    மத்திய பிரதேசத்தில் 15 குழந்தைகள் உயிரிழப்பு- மேலும் 2 இருமல் மருந்துகளுக்கு தடை
    X

    மத்திய பிரதேசத்தில் 15 குழந்தைகள் உயிரிழப்பு- மேலும் 2 இருமல் மருந்துகளுக்கு தடை

    • நேற்று இரவு 2 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்ததையடுத்து பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.
    • 2 இருமல் மருந்துகளும் குஜராத்தில் தயாரிக்கப்படுகின்றன.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் கோல்ட்ரிப் என்ற இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்தனர். சிறுநீரக செயலிழப்பால் குழந்தைகள் இறந்தனர். பலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அந்த இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே இருமல் மருந்து உட்கொண்டதில் 14 குழந்தைகள் பலியான நிலையில் நேற்று இரவு 2 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்ததையடுத்து பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.

    இச்சம்பவத்தையடுத்து இருமல் மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் மேலும் 2 இருமல் மருந்துகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ரீலைப் (Relife) மற்றும் ரெஸ் பிப்ரெஷ் டிஆர் (Respifresh TR) ஆகிய 2 இருமல் மருந்துகளின் விற்பனையை மத்திய பிரதேச அரசு முழுமையாகத் தடை செய்துள்ளது.

    இந்த மருந்துகளில் அனுமதிக்கப்பட்ட வரம்புகளை விட அதிகமான அளவு ஆபத்தான ரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த 2 இருமல் மருந்துகளும் குஜராத்தில் தயாரிக்கப்படுகின்றன. இதையடுத்து மத்திய பிரதேச அரசு விசாரணை கோரி குஜராத் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

    கோல்ட்ரிப் இருமல் மருந்து தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் விற்பனைக்கு மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் தடை விதித்துள்ள நிலையில் கர்நாடகத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இருமல், சளிக்கு இந்த நிறுவன மருந்துகளை கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இருமல் மருந்து பயன்படுத்தியதில் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×