search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மிக் 29-கே போர் விமானம் கடலில் விழுந்தது: விசாரணைக்கு உத்தரவு
    X

    மிக் 29-கே போர் விமானம் கடலில் விழுந்தது: விசாரணைக்கு உத்தரவு

    • போர் விமானத்தை இயக்கிய விமானியை பத்திரமாக மீட்டனர்.
    • விமானியின் உடல்நிலை சீராக உள்ளது.

    புதுடெல்லி

    இந்திய கடற்படையிடம் உள்ள 'மிக் 29-கே' போர் விமானம், நேற்று கோவாவில் கடலுக்கு மேல் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. பயிற்சியை முடித்துக்கொண்டு அது கடற்படை தளத்துக்கு திரும்பிக்கொண்டிருந்தது. அப்போது அந்த விமானம் எதிர்பாராத விதமாக தொழில்நுட்பக்கோளாறில் சிக்கி கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற மீட்பு படையினர், மின்னல் வேகத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அந்த போர் விமானத்தை இயக்கிய விமானியை பத்திரமாக மீட்டனர்.

    இந்த விபத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விபத்து குறித்து கடற்படை தலைமையகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி கடற்படை விடுத்துள்ள அறிக்கையில், "விமானியின் உடல்நிலை சீராக உள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த மிக் 29-கே ரக போர் விமானம், எல்லா வானிலையிலும் இயங்கும் போர் விமானம், இது பல பயன்பாட்டு போர் விமானம், ரஷியாவின் மிக்கோயான் (மிக்) நிறுவனம் தயாரித்தது ஆகும்.

    இத்தகைய 45 விமானங்களை ரஷியாவிடம் இருந்து 10 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்திய கடற்படை 200 கோடி டாலருக்கு (சுமார் ரூ.16 ஆயிரம் கோடி) வாங்கியது நினைவுகூரத்தக்கது. இந்த விமானங்கள், ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா விமானம்தாங்கி போர்க்கப்பலில் இருந்து இயங்குவதற்காக வாங்கப்பட்டது ஆகும்.

    * கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா விமானம்தாங்கி போர்க்கப்பலில் இருந்து புறப்பட்டு சென்றபோது கடற்படையின் மிக் 29-கே போர் விமானம் கோவாவில் அரபிக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    * 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ந் தேதி மற்றொரு மிக் 29-கே போர் விமானம், ஐ.என்.எஸ். ஹன்சா கடற்படை விமான தளத்தில் இருந்து புறப்பட்டபோது விபத்துக்குள்ளாகி விமானி பத்திரமாக மீட்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

    * 2019-ம் ஆண்டு நவம்பர் மாதமும் மிக் 29-கே போர் விமானம், விபத்துக்குள்ளாகி விமானிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    இப்படி மிக் 29-கே போர் விமானங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாவது அதிர வைப்பதாக அமைந்துள்ளது.

    Next Story
    ×