என் மலர்tooltip icon

    இந்தியா

    நாடு திரும்பிய ராஜஸ்தான் பெண் எங்கே? குழந்தைகளையும் சந்திக்க செல்லாததால் போலீசார் விசாரணை
    X

    அஞ்சு-நஸ்ருல்லா

    நாடு திரும்பிய ராஜஸ்தான் பெண் எங்கே? குழந்தைகளையும் சந்திக்க செல்லாததால் போலீசார் விசாரணை

    • கடந்த மாதம் மனதளவில் பாதிக்கப்பட்ட பாத்திமா குழந்தைகளை பார்க்க விரும்பினார்.
    • ராஜஸ்தானில் பிவாதியில் உள்ள அவரது குழந்தைகளிடம் போலீசார் விசாரித்த போது, அஞ்சுவை சந்திக்க மாட்டோம் என குழந்தைகள் தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    உத்தரபிரசேதத்தில் உள்ள கெய்லர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சு (வயது 34). இவருக்கு ராஜஸ்தானின் பிவாதி பகுதியை சேர்ந்த அரவிந்த் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் அஞ்சுவுக்கு கடந்த 2019-ம் ஆண்டு பேஸ்புக் மூலமாக பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த ஜூலை மாதம் அஞ்சு தனது கணவரிடம், ஜெய்ப்பூருக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார்.

    ஆனால் அதன்பின் கணவரை தொடர்பு கொண்ட அவர் நான் பாகிஸ்தானின் லாகூருக்கு செல்கிறேன் என கூறியதை கேட்டு அரவிந்த் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி அவர் போலீசில் புகார் செய்தார். விசாரணையில் அஞ்சு வாகா-அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தான் சென்றதும், அவர் 4 ஆண்டுகளாக பேஸ்புக் மூலம் பழகிய நஸ்ருல்லாவை திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

    இஸ்லாமிய மதத்திற்கு மாறிய அஞ்சு தனது பெயரை பாத்திமா என மாற்றம் செய்து கொண்டு நஸ்ருல்லாவுடன் பாகிஸ்தானில் கைபர் பக்துன்கூவா மகாணத்தில் ஒன்றாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த மாதம் மனதளவில் பாதிக்கப்பட்ட பாத்திமா குழந்தைகளை பார்க்க விரும்பினார். இதற்காக பாகிஸ்தான் அரசிடமும் விண்ணப்பம் செய்தார்.

    அதைத்தொடர்ந்து அவருக்கு இந்தியா செல்ல அனுமதி கிடைத்த நிலையில் நேற்று அவர் இந்தியா திரும்பினார். டெல்லி வந்தடைந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாடு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

    அவரிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, அரவிந்த்தை விவாகரத்து செய்த பிறகு எனது குழந்தைகளை பாகிஸ்தானுக்கு அழைத்து செல்வேன். வேறு எதுவும் கூறவிரும்பவில்லை என கூறிவிட்டு சென்றார்.

    இதற்கிடையே நாடு திரும்பிய அஞ்சு தனது குழந்தைகளை பார்ப்பதற்காக இதுவரை ராஜஸ்தானும் செல்லவில்லை. எனவே அவர் எங்கு சென்றார் என்றும் தெரியவில்லை.

    இது தொடர்பாக ராஜஸ்தானில் பிவாதியில் உள்ள அவரது குழந்தைகளிடம் போலீசார் விசாரித்த போது, அஞ்சுவை சந்திக்க மாட்டோம் என குழந்தைகள் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக அரவிந்த் கூறுகையில், எனக்கும் அஞ்சுவுக்கும் இன்னும் விவாகரத்து ஆகவில்லை. விவாகரத்து நடக்க 3 முதல் 5 மாதங்கள் ஆகும் என்றார்.

    Next Story
    ×